தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அனைத்துலகத் தடுப்பு மருந்துக் குழுமத்துக்கு $1.3 மில்லியன் நன்கொடை

2 mins read
da16dad7-c2ed-4dff-98f3-e3fddbf85cd6
அனைத்துலகத் தடுப்பு மருந்துக் குழுமமான கேவிக்கு சிங்கப்பூர் $1.3 மில்லியன் தொகையை நன்கொடையாக வழங்கியது. - படம்: ஏஎஃப்பி

சிங்கப்பூர், கேவி (Gavi) என்ற அனைத்துலகத் தடுப்பு மருந்துக் குழுமத்துக்கு $1.3 மில்லியன் நிதி வழங்குவதாக உறுதிகூறியுள்ளது.

தேவையுள்ள சமூகங்களுக்குக் குறிப்பாக வசதி குறைந்த நாடுகளில் உள்ளோருக்கு உயிரைக் காக்கும் தடுப்பு மருந்துகளைக் கொண்டு செல்லும் முயற்சிகளுக்கு சிங்கப்பூர் தொடர்ந்து ஆதரவளிப்பதை அந்த நிதி வெளிப்படுத்துவதாகச் சுகாதார அமைச்சு வியாழக்கிழமை (ஜூன் 26) தெரிவித்தது.

“நோய்களைத் தடுத்து உயிர்களைக் காக்க தடுப்பு மருந்துகள் ஆற்றல் வாய்ந்த உத்திகளில் ஒன்று. எனினும், அத்தியாவசிய தடுப்பு மருந்துகளை உலக நாடுகளில் உள்ள மில்லியன்கணக்கான மக்களால் பெற முடியாமல் இருக்கிறது,” என்று சுகாதார அமைச்சு கூறியது.

கேவி குழுமம், அரசாங்கங்கள், அனைத்துலக அமைப்புகள், தனியார் துறைப் பங்காளிகள் போன்றோருடன் இணைந்து செயல்பட்டு வசதி குறைந்த மக்களுக்குத் தடுப்பு மருந்துகளைக் கொண்டுசேர்க்கிறது என்று அமைச்சு சுட்டியது.

அத்துடன், நோய்ப்பரவலுக்கு எதிரான தயார்நிலையைக் குழுமம் மேம்படுத்துவதோடு நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகரிக்கிறது என அமைச்சு குறிப்பிட்டது.

உலகின் ஏழ்மையான நாடுகளில் பிள்ளைகளுக்குத் தடுப்பு மருந்துகளை எடுத்துச் செல்வதற்கான முயற்சிக்குப் புது நன்கொடையாளரைத் தேடுவதாக ஜூன் மாதம் கேவி குழுமம் சொன்னது.

ஜூன் 26ஆம் தேதி பிரஸ்ஸல்சில் நடைபெற்ற உச்சநிலை மாநாட்டில் $11.9 பில்லியன் டாலர் நிதி தேவைப்படுவதாகக் குழுமம் குறிப்பிட்டது. அதில் $9 பில்லியன் நிதியைத் திரட்ட குழுமம் முற்பட்டது.

இந்நிலையில், கேவி குழுமம் சாதனை அளவில் முன்வந்து நன்கொடை வழங்கியோரிடமிருந்து $9 மில்லியன் டாலருக்கும் அதிகமாகத் திரட்டிவிட்டதாகக் குழுமத்தின் தலைமை நிர்வாகி சானிய நி‌ஷ்டார் ஃபேஸ்புக்கில் பதிவிட்டார். அந்தத் தொகை மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 500 மில்லியன் பிள்ளைகளுக்குத் தடுப்பூசி போட குழுமம் இலக்கு கொண்டுள்ளது.

ஜூன் 26ஆம் தேதி நடைபெற்ற கேவி அனைத்துலக உச்சநிலை மாநாட்டில், சுகாதார அமைச்சர் ஓங் யி காங், அனைத்துலக கொவிட்-19 நோய்ப்பரவலைத் தடுக்க கேவி குழுமம் மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டினார்.

சிங்கப்பூர் முதன்முறையாக கேவி குழுமத்துக்குக் கொவிட்-19 பெருந்தொற்றின்போது 2020ஆம் ஆண்டு $5 மில்லியன் நன்கொடையாக வழங்கியது.

குறிப்புச் சொற்கள்