தேடுவாரற்று இருப்பது எவ்வளவு சோர்வைத்தரும்? முக்கியமில்லாத, ஒன்றுக்கும் உதவாத கழிவுப் பதார்த்தம் மண்ணுக்குள் சென்று மக்கிவிடும் பரிதவிப்பு எண்ணங்களில் ஒட்டிக்கொண்டிருந்தது.
சாளரம் திறக்காமல் கிடந்தாலும் ‘உர்’ என்று குளிரூட்டி அயர்ச்சியுடன் மூசியது. குளிர் காற்று வீட்டுக்குள்ளேயே சுற்றும். அதன் சுகத்தை வீடு மட்டும் உணரும். எங்காவது சிறிய நீக்கலில் வெளியேறும் குளிர்க் காற்றை இந்தப் பிரபஞ்சம் களவாடும். பிரபஞ்சத்தால் அனுபவிக்க முடியாத துளி இன்பம் அது. ஆனால், வீட்டுக்கோ அவருக்கோ இந்தக் குளிரூட்டி மீது பற்று வருவதில்லை. அதன் சேவையை யாரும் பாராட்டுவதில்லை. எமக்கு உணர்திறன் இருக்கிறது. எதிர்பார்ப்பிருக்கிறது. பாராட்டு என்ற பெருமையை அடைய வேண்டும் என்று நாள்தோறும் மனம் பொருமிக்கொண்டிருந்தது.
கைதட்டல்கள் மதுவின் போதை போல கிளர்ச்சியை ஏற்படுத்தும். புகழ்பாடல் தனி இன்பம். இளம் மாதுவின் தீண்டல் தரும் குதூகலத்தையும் மயக்கத்தையும் கொடுக்கும். அவருக்குக் கிடைத்தது இந்தக் குறுகிய வட்டம் தான். அரங்கதிரும் கைதட்டல் இல்லை. அந்த ஏக்கம் உள்ளத்தின் எங்கோ மூலையில் இருந்து பிசைந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இந்த எதிர்பார்ப்பு இருந்தது.
“ஏதாவது எழுதினால் போதும். அதை அப்படியே நூலாக்கவேண்டும் என்ற அந்தரம் வந்துவிடும். என்ன எழுதுறம்? ஏன் எழுதுறம்? யாருக்கு எழுதுறம்? எந்தக் கரிசனையும் கிடையாது. பொறுப்புக் கிடையாது. ஆளாளுக்கு வந்திடுவாங்கள் எழுத்தாளர் என்று நெஞ்சை நிமித்திக் கொண்டு. கொஞ்சம் ஏதோ எழுதினவுடன் பெரிய தத்துவவாதிகள் மாதிரி பேட்டி கொடுப்பதும், முகநூலில் சண்டித்தனம் பண்ணுவது என்று அலப்பறை தாங்க முடியாது” தினம் தினமும் அலைமோதும் எண்ணங்கள் மாற்றம் இல்லாமல் தொந்தரவு செய்யத்தொடங்கின.
ஒரு காலத்தில் அவரைச் சுற்றி குறிப்பிட்ட நண்பர்கள் இருந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் கொள்கை, விருப்பம் எல்லாம் ஒரேமாதிரி இருந்தது. தமிழ் இலக்கியம் என்ற ஒரே மூச்சில் சுவாசித்த நண்பர்கள் வட்டம் அது. ஆசான் என்ற கவுரவம் அவருக்குக் கிடைத்தது. அவரின் பேச்சைக் கேட்கும்போது அமைதியாக உள்வாங்கும் கூட்டம். வலிந்த திமிர்த்தனமான பேச்சுகள் என்று வெளியில் இருந்தவர்கள் கொடூரமாகச் சித்திரித்தனர். அதை அப்படியே ஏற்றுக் கொள்ளவேண்டியது எழுதப்படாத சட்டம். சுற்றியிருந்தவர்களும் வெளியுலகம் தெரிந்த மனிதர்கள் என்பதைத் தெரிந்தும் வெளிக்காட்டமாட்டார். பல முரண்கள் புத்தியில் எழுந்தாலும் அடக்கிக் கொண்டவர்கள். திருப்பி விவாதிப்பதையோ பேச்சில் இருக்கும் தகவல் பிழையையோ எடுத்துக் காட்டிடத் தயங்கினர் வட்டத்தின் ஆள்கள். அந்த வட்டத்தில் இருந்தால் தனி மதிப்பும் மரியாதையும் கிடைத்ததாக நம்பினர். மரியாதையை விடவும் கவனப்படுத்தல் தமக்குக் கிடைப்பது எழுத்தாளரின் பிரசித்தத்தால் என்று மூர்க்கமாக உள்வாங்கியிருந்தனர்.
புத்துணர்வுடன் விடிந்த காலையில் வந்த அழைப்பு அவரின் பதற்றத்தை இன்னும் பன்மடங்கு அதிகரித்துவிட்டது.
அமைதியாக இருந்த வீடு. சிங்கப்பூரின் எங்கோ மூலையில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் ஏழாம் மாடியில் இருந்தது. ஒற்றை இருக்கை மர சோபாவில் அமர்ந்திருந்தவர் கைகளில் அன்றைய நாள் பத்திரிகை. சதைகள் வற்றிய கைகளில் சில நரம்புகள் புடைத்து வெளியே தெரிகின்றன. அவரின் வலது புறம் ஆளுயரத்தில் அலமாரி நிறைந்த நூல்கள். அலமாரி ஹாலின் ஒருபக்க சுவரின் முக்கால்வாசி பரப்பை அடைத்துக்கொண்டிருந்தது. மனைவி அடுப்படியில் காலை உணவைத் தயாரிக்கும் சத்தம் பாத்திரங்களின் உரசலாகச் சிலவேளை எழுந்து அடங்கும்.
அவருக்கு அழைப்பு வந்தாலே இண்டைக்கேதோ பஞ்சாயத்து நாள் முழுக்க அதைப் பற்றி எரிந்து விழும் மனுஷன் என்று மனைவி தனக்குள் நினைத்துக் கொண்டார். “உறங்கு நிலையில் இருக்கும் வயசான அந்த ஆளைச் சீண்டுவதற்கே இவங்கள் அழைப்பெடுப்பாங்கள். கண்டறியாத இலக்கியமும் புத்தகங்களும்” கறுவிக்கொண்டு அடுப்படியில் அமிழ்ந்து கிடக்கும் அவர் மனம்.
வயது போகும்போது பசி குறைந்துவிடும். இலக்கியத்தின் மீதான தாகமோ அவருக்கு வளர்ந்துகொண்டே இருந்தது. இதுவரையில் மனம் அசைபோட்டுக் கொண்டிருந்த குழப்பங்களில் மீண்டும் ஒரு சிக்கல். அடி மனத்தில் நெருப்புக் கோளம் போலக் கனன்று கொண்டிருந்த கோபம். சிக்கல் வருகிறதோ இல்லையோ தானே வலுக்கட்டாயமாக உருவாக்கும் வீம்புக்காரர்.
இலக்கியத்தில் தீவிர ஈடுபாடுள்ளவர் என்பதனாலோ என்னவோ தீவிர இலக்கியத்திற்குத் தன்னை நேர்ந்து விட்டதைப் போல காரசாரமான விமர்சனங்களுக்குப் பெயர் பெற்றிருந்தார். படைப்புகளை ஆழமாக உள்வாங்கி அது பேசும் அரசியல், கலையுணர்வுகளைத் தொகுத்து பல கோணங்களில் அணுகுவார். ஏதாவது ஒரு கோணத்தில் செயற்கையான திணிப்பைக் கண்டாலே கெட்டியாகப் பிடித்துக் கொள்வார். இரசனை விமர்சனத்தோடு மட்டும் தான் நின்று கொண்டதை கடைசிமட்டும் அவர் உணரவேயில்லை.
ஒரு மாதத்துக்கு முன் இதே மாதிரி ஒரு காலையில் தேநீர் அருந்திக் கொண்டிருந்தார். எதிர்பார்த்த அழைப்பு எதிர்பார்க்காத செய்தியைக் கனமாக இதயத்தில் இறக்கியது. கைகளில் நடுக்கம் இருமடங்கானது. தேநீர்க் கோப்பையை மேசையில் வைத்துவிட்டார்.
“தமிழில் சந்தை நீங்கள் நினைப்பது போல இல்லை. வாசிப்பவர்கள் அரிதாகிவிட்டனர். ஏற்கனவே உங்கள் புத்தகத்தை எங்களால் முற்று முழுதாக விற்க முடியவில்லை” என்ற பதிப்பாளரின் நிராகரிப்பு அது. இந்தப் பதிப்பாளர் பிரபலமானவர். தனது புதிய நாவல் வெளியிடுவதில் தாமதம். நீண்டநாள் உழைப்பைக் கிடப்பில் போடுவதா? மனமுடைந்து போனார் எழுத்தாளர்.
எப்போதும் பதற்றமாகவே இருப்பார். இவரும் பிரபலமானவர்தான். மிகச்சிறந்த நாவலாசிரியர் என்று பெயரெடுத்தவர். மூன்று நாவல்கள் இதுவரைக்கும் வெளிவந்து பலரின் பாராட்டையும் விருதையும் பெற்றது. குறிப்பாக இரண்டாவது வரலாற்று நாவல் பரவலான கவனத்தையும் மதிப்பையும் பெற்றுக் கொடுத்தது. ஆனாலும் இந்தப் புதிய நாவலை எவ்வாறாவது வெளியிட வேண்டும் என்ற ஆவலில் பதற்றம் உச்சம் தலை வரை ஏறிவிட்டது.
“இவனால் முடியாவிட்டால் என்ன? வேறு பதிப்பகமா சிங்கப்பூரில் இல்லை. இல்லாட்டி தமிழ் நாட்டில் பதிப்பிடுவேன்,” என்ற வைராக்கியம் நாளடைவில் பதற்றமாக மாறிவிட்டது.
“நீங்கள் குழம்பி, இருக்கிற பிளட் பிரஷரை கூட்ட போறீங்க. இன்றைக்கு இல்லாட்டி இன்னொரு நாள் வெளிவரும்,” என மனைவி அமைதிப்படுத்தினாலும் “அதெல்லாம் உனக்குப் புரியாது. நூல் வெளியீடு பிரசவம் மாதிரி. நேரம் முக்கியம். குறைப் பிரசவம் உலைக்கும்” அந்த உவமையை இரசிக்காது அறைக்குள் சென்ற மனைவியை சூனியம் என்று மனதுக்குள் திட்டிக் கொண்டார்.
கறாரான விமர்சனம் செய்யும் இலக்கியவாதி. முகத்துக்கு நேரே மற்ற எழுத்தாளரை மறுக்கும் தன்மை பல எதிரிகளைச் சம்பாதித்து விட்டது. மேல் பூச்சு கீழ்ப் பூச்சு இல்லாமல் மனத்தில் பட்டதை அப்படியே போட்டு உடைப்பது என்ற வகைமையைக் கெட்டியாகப் பிடித்திருந்தார். நூறு கதைகள் படித்தால் ஒன்று அல்லது இரண்டுக்கு ஓரளவு நல்ல விமர்சனம் எழுதினாலும் குறைகளை நீளமான பட்டியலிடுவார் என்றால் மற்ற தொண்ணூற்று ஒன்பது பிரதிகளின் நிலையை யோசித்துப் பார்த்தால் மற்ற எழுத்தாளர்களுக்கு நடுக்கம் வந்து விடும். தனக்கென்று ஓர் அளவுகோல் வைத்திருந்தார். அதன் சரி பிழை பற்றிய கவலை இல்லாமல் தனது தராசில் நிறுத்து விடும் விமர்சகர்.
இலக்கிய எதிரிகள் மீது சந்தேகம் வலுப்பெறத் தொடங்கியது.
“வாய்ப்புகளையும் வசதிகளையும் புற்றுநோய் போல மறைந்து நின்று விழுங்குகிறார்கள்,” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டார்.
பல இலக்கிய அமைப்புகளின் கூட்டங்கள், கலந்துரையாடல்களைத் தவிர்த்து வந்தார். எதிலும் தான் நிறைந்திருக்க வேண்டும். முதல் மரியாதை கிடைப்பதில் பிசிறிருக்கக் கூடாது என்று நினைப்பவர். எதற்கும் தலையாட்டும் பிடித்தமான நண்பர்கள் இருக்கும் கதிர், ஒரு குறிப்பிட்ட இலக்கியக் கூட்டத்திற்கு மட்டும் போவார். அவர்களுக்கும் அவர்தான் ஆசிரியர்.
மனைவியும் மகளும் எவ்வளவு சொல்லியும் மாற்ற முடியாமல் சலித்துவிட்டார்கள். பலர் வாசிப்பதாலும் புகழ்வதாலும் மட்டும் ஒரு படைப்பு இலக்கியமாவதில்லை என்று பெரும்பாலான படைப்புகளை நிராகரிக்கும் மனிதர்.
இன்றைக்குக் காலையில் வந்த அழைப்பு,
“மாலை புதிய சிறுகதைத் தொகுப்பு பற்றிய விமர்சனம் செய்ய உங்களை அழைத்ததை மறந்து விட்டீர்களா? வந்துவிடுவீங்க தானே? உங்களுக்கு ஞாபகப்படுத்த அமைப்பாளர் கேட்டிருந்தார்” சிங்கப்பூர் கதிர் இலக்கியக் குழு சார்பாகச் செயலாளர் பணிவாக தனது ஞாபகப்படுத்தலை வெளிப்படுத்தினார்.
“நீங்கள் ஏன் இவ்வாறான புத்தகங்களை கலந்துரையாடலுக்கு எடுக்கிறீர்கள்?” வெடுக்கென்று கேட்டார். அவருக்கு ஏற்கெனவே தொகுப்பை அனுப்பியிருந்தனர்.
செயலாளர் குழப்பத்தில் “ஏன் என்ன நடந்தது. நீங்கள் படித்துப் பாத்தீங்களா?” என்று கலவரமானார்.
“என்னால் படிக்க முடியவில்லை. தட்டையாக இருக்கிறது. மக்களுக்குப் படைப்பைக் கொடுக்கும்போது தரமானதாகக் கொடுப்பது எமது கடமை. நான் வரவில்லை.”
“நீங்கள் வருவதாக விளம்பரம் கொடுத்து பலரை அழைத்தும் இருக்கிறோம். கடைசி நிமிடத்தில் தவிர்ப்பது இலக்கியக் குழுவின் பெயரைக் கெடுத்து விடும். இது ஓர் இளம் படைப்பாளியின் முதல் தொகுப்பு. தயவு செய்து வாருங்கள்”
“நான் வந்து எனக்கு எது சரியென்று படுகிறதோ அதைத்தான் சொல்லுவேன். பிறகு குறை சொல்வதாக நினைக்க வேண்டாம்.”
“அது பிரச்சினையில்லை. உங்களின் விமர்சனமுறை எங்களுக்குத் தெரிந்ததே தாராளமாக உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள். மிக்க நன்றி”
“நன்றி”
ஞாயிறு மாலை நூலக வாரிய கட்டடத்தில் ஓரளவு ஆள்கள் நடமாட்டம் இருந்தது. அய்ந்தாம் தளத்தில் இருந்த அறையில் நாற்பது பேரளவில் அமர்ந்திருந்தனர்.
கலந்துரையாடலில் அவரின் முறை வந்தது. மிடுக்காகச் செருமிக் குரலைச் சரிசெய்தார். சபையினை நோட்டமிட்டார். சில புதிய முகங்கள் பரபரப்பாக அவரையே பார்த்தன.
“நண்பர்களே வணக்கம்,
நீங்கள் எத்தனை பேர் நூலைப் படித்திருப்பீர்கள் என்று தெரியாது. விமர்சனக் கூட்டத்துக்கு வருபவர்கள் தொகுப்பில் குறைந்தது ஒரு கதையை வாசித்து வரவேண்டும் என்ற நாகரிகம் தெரிந்தவர்கள் என்று நம்புகிறேன். கைதட்டுவதற்குப் போகவேண்டியது அரசியல் கூட்டங்கள். அங்கே தலைவரைப் பற்றி ஆகா ஓகோ என்று புகழுவார்கள். விரும்பியோ விரும்பாமலோ அவரின் உள்ளம் குளிர கைதட்டவேணும். நேரடியாகவே இந்த நூல் பற்றிய எனது பார்வைக்கு உங்களை அழைத்துச் செல்கிறேன். பொதுவாக வாசகனுக்குச் சோர்வைத் தராத, ஏமாற்றாத படைப்பாக ஒரு நூல் இருக்க வேண்டும் என்று நினைப்பேன். ஏமாற்றம் எப்போது வரும் தெரியுமா? கதைக் கருவும் சொல் நேர்த்தியும் தொய்வில்லாமல் இழுத்துக் கொண்டு செல்லும்போது வாசகன் கதையுள் கலந்து விடுகிறான். முடிவு சடுதியான திருப்பம் அல்லது திறந்த நிலையில் விட்டுவிடுவது விரும்பப்படும். அதுவே அவனை ஏமாற்றாத கதை. இந்தத் தொகுப்பு என்னை ஏமாற்றிவிட்டது. ஏன் இவ்வாறு எழுதி வெளியிட்டு இலக்கியத்தின் தரத்தைச் சந்தி சிரிக்க வைக்கிறார்கள் என்று தெரியவில்லை. இலங்கையிலிருந்து இடம்பெயந்தவர்கள் பலர் புலம்பெயர் இலக்கியம் என்று துயரை மட்டும் எழுதி அனுதாபம் சம்பாதிப்பதும், தமிழ் நாட்டுக் கிராமங்களில் இருக்கும் சாதியம் பற்றிப் பேசிக் கவனம் பெறுவதும் எப்படி மொட்டையாக இலக்கியமாகிவிடும்?
ஒரு கதை சொல்கிறேன். அவர் ஓர் எழுத்தாளர். காதலை வெறுப்பவர். அன்பு மாயம் நிறைந்த ஆயுதம். உன்னை நம்புபவனை ஏமாற்றும் கருவி. அதை முக்கி முக்கி யாராவது எழுதினால் சூடான வசைகளை அவர்கள்மேல் பொழிவார். அவருக்கும் குடும்பம் இருந்தது. மனைவியும் இரண்டு ஆண் பிள்ளைகளும். அவரின் கதைகளில் அன்பு இருக்காது. குரோதம், ஏமாற்றம், காளியாட்டம் இவற்றைச் சுற்றி எழுதிக்கொண்டிருந்தார். பரவலாக ஒரு விமர்சனம் எழுந்தது. அன்பு இல்லாததால் அவர் மனமும் சாந்தமாக இல்லை. எழுத்துக்களில் வெளிப்படுகிறது. பத்திரிகைக்குப் பேட்டி கண்ட செய்தியாளர் வெளிப்படையாக இந்தக் கேள்வியைக் கேட்டார். அன்பில்லாத இடத்திலும் குடும்பம் தழைக்கும். குழந்தைகள் பிறப்பார்கள். மகிழ்ச்சிக்குக் குறைவிராது. எனது வாழ்க்கை அதற்கு எடுத்துக்காட்டு. காதல் அன்பின் உச்ச வெளிப்பாடு என்று பைத்தியங்கள் போல நான் உளறுவதில்லை. காதல் உடல் பொருள் தேவையில் வருவது. இளமையில் வருவது உடல் தேவைக்கும் முதுமையில் வருவது பொருள் தேவைக்கும். பொருள் என்றால் காசு மட்டுமில்லை நடக்க முடியாமல் முடங்கும்போது தேவையான உதவியும் நேரத்துக்குக் கிடைக்கும் உணவுக்கும் மருந்துக்கும் இன்னொருவரைச் சார்ந்திருக்க வேண்டிவரும்.
அன்பே சிவம் என்பது பொய்யா? என்று செய்தியாளர் கேட்டார்.
“அன்பு எப்படி இல்லாததுபோல தோன்றுகிறதோ அப்படித்தான் சிவம். இல்லாததற்கு எத்தனை பெயரையும் வைத்து அழைக்கலாம். இல்லாதது எப்போது உருவானது என்று வரையறுக்க முடியாது. இல்லாதது எங்கும் நிறைந்திருப்பதற்காக எடுத்துக் கொள்ளலாம். உடனே நீங்கள் அன்பு எங்கும் நிறைந்திருப்பதாக மறுவாதம் செய்தால் அதற்கு முடிவுரை கொடுக்க நான் தயார். எங்கும் நிறைந்திருப்பதை உணரும்போது நீ ஞானி ஆகியிருப்பாய். வீடுபேறு அடைந்திருப்பாய். மனிதனால் எங்கும் நிறைந்திருப்பதை உணர முடியாது. சிவம் போல அன்பு போல. அதனால் தான் தன்னை மேன்மையானவனாகக் காட்டிட சும்மா அன்பு என்று கதை அளந்து கொண்டிருக்கிறான். மகன் அம்மாவின் மேல் அன்பாக இருப்பதாகச் சொல்வதும், தாய் மகன் மேல் பாசமாக இருப்பதாகச் சொல்வதும், கணவன் மனைவி பரஸ்பரம் உயிருக்குயிரான காதல் என்று கதையளப்பதும் அறியாமையின் பிதற்றல்கள்” என்று அவர் சொல்லியது செய்தியாளருக்கு விளங்கியதா தெரியவில்லை அடுத்த கேள்விக்குத் தாவினார்.
படைப்பொன்றைத் தடவிக் கொடுக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. படைப்பாளி மீது அன்போ கரிசனையோ வரவேண்டுமென்று நினைப்பது தவறு. பிரதி சார்ந்து நிராகரிப்பை ஏற்றுக்கொள்ளாதவன் படைப்பாளியாகவே இருக்க முடியாது. இந்த நூலை எழுதியவர் தன்னை மறுவிசாரணை செய்து கொள்ளட்டும். புனைவை நான் எப்போதும் ஆராய்ச்சி நூலாகவே பார்க்கிறேன்.
தொகுப்பு வெளியிட்ட இளம் எழுத்தாளர் சபையில் மெல்லிய முறுவலுடன் அவரின் முகத்தையே சலனமேயில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தார். “காட்டமான சலுகைகளற்ற விமர்சனம் இலக்கியத்துக்கு நல்லதா கெட்டதா என்பது அனைத்து மொழிகளிலும் பேசு பொருள். ஒவ்வொரு தலைமுறை எழுத்தாளர்களுக்குள்ளும் நடப்பது. நான் அதில் ஒருவனாக இருக்கவே விரும்புகிறேன்,” என்று எந்தத் தயக்கமும் இல்லாமல் தொடர்ந்தார் எழுத்தாளர். தனது விருப்பம் நிறைவேறிய திருப்தி அவரின் சொற்களில் தெரிந்தது. உள்ளூரக் களிப்பு. அரை மணி நேரம் ஒவ்வொரு கதையாகத் தொகுப்பில் இருந்த எட்டுக் கதைகளையும் கிழித்து எறிந்தார்.
“கண்ட கண்ட குப்பைகளைப் பிரசுரிக்காமல் விட பதிப்பகங்கள் தங்களை சுய பரிசோதனை செய்ய வேண்டும்,” என்று முடித்தார். மூச்சு வாங்க தனது இருக்கையில் வந்தமர்ந்தார்.
இன்னொரு புது எதிரியைச் சம்பாதித்ததை உணர்ந்தவராகத் தெரியவில்லை.
சுடச் சுட கோப்பி கலந்து குடிக்க மீண்டும் வட்டமான மேசையில் அமர்ந்தார். அவர் கொடுத்த காட்டமான விமர்சனத்தில் இருந்து வெளிவராமல் பெரும்பாலானவர்கள் அமைதியாக இருந்தனர். இளம் எழுத்தாளர் இன்முகத்துடன் கைலாகு கொடுக்க அருகில் வரவும் கண்டும் காணாமல் கோப்பியைச் சுவைத்துக்கொண்டிருந்தார்.
கதிர் இலக்கியக் குழுவின் தலைவர் நன்றியுரை நிகழ்த்தினார்.
ரையை இப்படித் தொடங்கினார், “கலை கலைக்காக என்பதை வலியுறுத்திய ரஷ்ய எழுத்தாளர் ஆன்டன் செகாவ் மீது விமர்சனம் வந்தது. சமூகப் பொறுப்பை மறுக்கிறார், மரபான கதையாடல்களை வெறுக்கிறார் என்றெல்லாம் பேசியவர்கள் அன்றும் இருந்தனர். கலை கலைக்கானது என்பவர்களில் பலர் அழகுணர்ச்சி மட்டும் தான் அல்லது அர்த்தம் காணமுடியாதவை மட்டும் தான் இலக்கியத்தை உருவாக்குபவை என்று நினைத்து விளக்கில் விழுந்த பூச்சிகள்போல அழிந்தார்கள் அவர்களில் பலர் என்று இலங்கையின் மூத்த எழுத்தாளர் மு. தளையசிங்கம் அடிக்கோடிட்டுக் காட்டினார். தீவிர இலக்கியத்துக்கு சந்தை மிகச் சொற்பம் என்பதாலோ என்னவோ அவர்களில் சிலர் சினிமாவுக்கு கதை வசனம் எழுதுவதும் துப்பறிதல் அல்லது விஞ்ஞான வகையான வணிக இலக்கியங்களை எழுதி சுதாரித்துக் கொள்கிறார்கள்,” என்பதையும் போகிறபோக்கில் சொல்லி் சம்பிரதாயபூர்வமாக தொடர்ந்தது அவரின் உரை. புதிதாக அரும்பிய புன்னகை எழுத்தாளரின் முகத்தில் வந்தமர்ந்தது.
ஆதவன்

