தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வெண்மலர்

10 mins read
64ad8ba9-133b-4ee9-a830-b3d5f5c0567b
வெண்கலர் சிறுகதை ஆசிரியர் மணிமாலா மதியழகன். - மணிமாலா மதியழகன்.

“காதல் கல்யாணம்தான் பண்ணிக்கிட்டேன்” என்று சொன்னவரது முகத்தில் கணப்பொழுது தெரிந்த மெல்லிய வெட்கத்தின் செம்மையை வாசுகி மிகவும் இரசித்தாள். வாரயிறுதி நாளின் பரபரப்பை விடாது பெய்த மழை அசைத்துப் பார்த்த வேளை. பேருந்தில், ஹவ்காங்கிலிருந்து பாசிரிஸ் செல்லும் அலுப்பை அடுத்த நிறுத்தத்தில் ஏறியவரின் பேச்சு கரைத்துக்கொண்டிருந்தது.

“வேலையிடத்தில்தான் அவரைச் சந்திச்சேன். அதுவும் நானா எங்கே பார்த்தேன்? அலுவலகத்துக்கு அவர் வரும்போதெல்லாம் நான் இருக்குற பகுதிக்கு மட்டுமே வருவதாகப் பக்கத்து கேபின்ல இருக்கும் என்னோட தோழி சீ லியூ சொன்னாள். அவருக்கு வேண்டிய தகவல்களைக் கொடுத்த பின்பும் நீலக் கண்கள் என்னைவிட்டு விலக மறுத்ததை பிறகுதான் கவனிச்சேன். இருந்தாலும் அதை நான் பெருசாவும் எடுத்துக்கல. திடீரென ஒரு நாள், மோதிரம் மாத்திக்கலாமான்னு கேட்டார். என்ன தைரியமிருந்தால் இப்படிக் கேப்பார்னு எனக்குக் கோபம்கோபமா வந்தது. ஆனால், அவரிடம் நான் ஒன்றுமே சொல்லாதது எனக்கே ஆச்சரியமாயிருந்தது. எப்பவும் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுன்னு பேசாதேன்னு எங்கம்மா எச்சரிப்பாங்க. தப்புன்னு தெரிஞ்சா அது யாரா இருந்தாலும் முகத்துக்கு நேரா கேள்வியைக் கேட்டே பழக்கப்பட்டவ. அப்படிப்பட்ட நான், ஒரு வார்த்தைகூடப் பேசாம திரும்பி வந்திருக்கேனேன்னு அந்த எண்ணம்தான் சுத்திசுத்தி மனசைக் குடைஞ்சுக்கிட்டே இருந்தது.”

“அமெரிக்கவாசியான அவர் சிங்கப்பூரில் மின்னணுவியல் நிறுவனம் நடத்தினார். வழக்கமா இங்கு நாலு மாதம் தங்கியிருந்துவிட்டு மீண்டும் அமெரிக்காவுக்குப் போய் இரண்டு மாதம் கழித்துதான் வருவார். ஆனால் அந்தத் தடவை அமெரிக்காவுக்குப் போனவர் பல மாதங்களாகியும் வரல.”

“பென்னட் வைட்டுக்காகக் காத்திருக்கிறாயா என்று என்னைக் கிண்டல் செய்த சீ லியூகூட அதை விட்டுவிட்டாள். இப்போ மாதிரியான தகவல் தொடர்புச் சாதனங்கள் அந்தக் காலத்தில் இல்லையே! சரியா சாப்பிடாம, தூங்காம ஏற்கனவே ஒல்லியாயிருந்தவள் மேலும் இளைச்சிப் போனேன். உடம்புக்கு என்னவோ ஏதோங்கிற பரிதவிப்பில் ஆசுபத்திரிக்கிப் போகலாம்னு சொல்ற அம்மாவைச் சமாளிக்கிறதே அன்றாடப் போராட்டமானது.”

“கிட்டத்தட்ட ஒரு வருசத்துக்கப்புறம் திடீர்னு ஒருநாள் வந்தார். அவரைப் பாக்கவும் எனக்குப் பேச்சே வரல. அமெரிக்காவிலுள்ள அவரது நிறுவனத்தில் ஏதோ பிரச்சினை ஏற்பட்டதாகவும் அதைச் சரிப்படுத்திவிட்டு வர நாளானதாகவும் சொன்னவரிடம், எப்போ மோதிரம் மாத்திக்கலாம்னு கேட்டேன்” நீண்ட வாழ்வின் நினைவுகளைச் சுமந்திருந்தவரின் சுருக்கம் நிறைந்த முகத்தில் நாணம் தோன்றி மறைந்தது.

அவர் மேலும் பேசுவதற்குள் கைப்பேசி அழைத்தது. “தங்கச்சியாத்தான் இருக்கும்” என்று சொன்னவாறு கைப்பையிலிருந்ததை எடுத்தார். திறன்பேசியில் சீனப் பெண்மணியின் படம் தெரிந்தது. சிறு புன்னகையுடன் “நான் சொல்லல” என மகிழ்வுடன் வாசுகியிடம் சொன்னவாறு திறன்பேசியின் பச்சை வட்டத்தை மேலே தள்ளினார்.

வாசுகி சற்று முன் நடந்தவற்றை நினைத்துப் பார்த்தாள். கடுமையாகப் பெய்த மழை ‘எம்ஆர்டிக்கு’ உன்னைப் போக விட்டுவிடுவேனா என்பதுபோலிருக்க, புளோக் அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்திற்கு வந்தாள். செல்ல வேண்டிய பேருந்து அப்போதுதான் நிறுத்ததைவிட்டு நகர்ந்தது. ‘பஸ் வர்ற நேரத்தைப் போன்ல பார்த்துட்டு வந்திருக்கலாம். சில வினாடிகள் தாமதமா வந்ததால இன்னும் பதினைஞ்சி நிமிடம் காத்திருக்கணும்’ தன்னைத்தானே நொந்துகொண்டவளை மழையில் குளித்திருந்த இருக்கைகள் பார்த்துச் சிரித்தன. ஓரிடத்தில் நிற்க முடியாதபடி குதிகால் வலி சோதித்தாலும், நீண்ட நாள்களுக்குப் பிறகு பெய்யும் மழை மனத்திற்கு குளிர்ச்சியையும் தந்தது. அவளைப்போல நடுத்தர வயதுடைய ஓர் ஆடவர் மட்டுமே கையில் மடக்கிய குடையோடு நின்றிருந்தார். மதியப்பொழுதில் நகரமே சாம்பல்நிறப் போர்வைக்குள் மூழ்கியிருந்ததைக் கவனித்தாள்.

நேரம் ஊர்ந்து செல்வதுபோலத் தோன்றியது. தான் போவதற்குள் தோழியின் வீட்டுக் கொலு கொண்டாட்டம் மற்ற தோழியரின் உற்சாகத்தால் களைகட்டிவிடும் எனும் எண்ணம் உந்த, பார்வை கைக்கடிகாரத்துக்குப் போனது. இன்னும் சில நிமிடங்கள்தான் எனக் காட்டவும் ஆசுவாசமானாள். சாலையின் வளைவுப் பகுதியிலிருந்து வந்த ஈரடுக்குப் பச்சைநிறப் பேருந்து ஒருவழியாய்க் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தது. பேருந்தில் ஒரு சில இருக்கைகளில் மட்டுமே ஆட்கள் இருந்தனர்.

அடுத்த நிறுத்தத்தில், இரு பைகளுடன் ஏறிய மூதாட்டி புன்னகையுடன் அவளருகிலிருந்த இருக்கையில் அமர்ந்தார். “காலையில கிளம்புறப்பவும் நல்ல மழை பேஞ்சது. திரும்புறப்பவும் அப்படித்தான் இருக்கு” என்றார். ‘நம்ம வட்டாரத்தில் காலையில் மழை தலை காட்டலையே’ என்ற எண்ணம் மனத்தில் ஓடியது.

“தங்கச்சியைப் பார்க்கப் போயிருந்தேன். வீட்டிலிருந்து கிளம்புறப்ப நல்லா இடியும் மின்னலுமா மழை கொட்டோகொட்டுன்னுதான் கொட்டினது. அதுக்கும் இன்னிக்குதான் லீவு. அதனால போய்ப் பார்த்துட்டு வந்துடுவோம்னு கிளம்பிட்டேன். வர்றேன்னு சொன்னா, வேணாம் நான் வந்து பாக்குறேன்னு சொல்லும்னுதான் பஸ் எடுத்துட்டு வீட்டுல இருக்கியான்னு கேட்டேன்” முகம்கொள்ளாச் சிரிப்புடன் சொன்னார்.

சராசரி உயரமும் சதைப்பற்றே இல்லாத உடலுமாய் இருந்தவர் இழப்பதற்கு ஒன்றிரண்டு பற்கள் மட்டுமே எஞ்சியிருந்தன. வெள்ளையில் மேற்சட்டையும் சந்தன வண்ணத்தில் காற்சட்டையும் அணிந்திருந்தார். ‘அதுக்கும் இன்னிக்குதான் லீவு’ என்று அவர் சொன்னது வாசுகியை யோசிக்க வைத்தது. அதை அவரும் புரிந்துகொண்டாரோ என்னவோ, தனக்கு எண்பத்திரண்டு வயதாவதாய்ச் சொன்னார். ஆர்வத்துடன் அவர் பேசும்போது சும்மாயிருப்பது முறையாகாது என்பதால் “உங்க தங்கைக்கு உங்களைவிட ஒன்றிரண்டு வயது குறைவாக இருக்குமா?” எனக் கேட்டாள்.

“எங்க வீட்டுல மொத்தம் பதினைஞ்சி புள்ளைங்க.” எனச் சொன்னவரது பதிலைக் கேட்டு விழிகள் விரிந்தன. அதைச் சிறிதும் கண்டுகொள்ளாமல் பேச்சைத் தொடர்ந்தார். “எங்கம்மாவுக்குப் புள்ளைங்கன்னா அவ்ளோ ஆசை. நான் மூணாவது புள்ள, எனக்கும் என்னோட தங்கச்சிக்கும் பதிமூணு வயசு வித்தியாசம்” என்றார்.

‘அவங்க வீட்டுலதான் பதினைஞ்சி பிள்ளைங்கன்னு சொன்னார். சித்தப்பா, பெரியப்பா பிள்ளைங்க எல்லாரும் ஒண்ணா இருந்திருக்கலாம். கொலு பொம்மைகளைப்போல அவங்க வீட்டில் பிள்ளைகள்’ என்றெண்ணினாள்.

“பதினைஞ்சி புள்ளங்களைப் பெத்தும் எங்கம்மாவுக்குப் புள்ளைங்க மேலவுள்ள ஆசை அடங்கல. ஒரு சீனப் புள்ளையத் தத்தெடுத்தாங்க. அந்தத் தங்கச்சியைத்தான் இப்பப் போய்ப் பார்த்துட்டு வர்றேன்.”

வாசுகியின் மனத்தில் ஓடிய எண்ணத்தை அவரது சொற்கள் தகர்த்தன. மேற்கொண்டு என்ன பேசுவதெனப் புரியவில்லை. அதைப்பற்றி அவரும் கவலைப்படவில்லை. பிரபல உணவகம் ஒன்றில் ஏழு மணி நேரத்துக்கும் மேலாக நின்றவாறு வேலை செய்கிறார். பேருந்துக்காகக் காத்திருப்பதற்குத் தான் முகஞ்சுளித்தது அவள் நினைவுக்கு வந்தது.

“என்னோட அக்கா, அதுதான் எங்க வீட்டுல மூத்தப்பிள்ளை. பத்து வருசத்துக்கு மேலா மறதிநோயால அவதிப்பட்டது. அப்போ முடிவெடுத்தேன். என்னால முடியும்வரை வேலைக்குப் போகணும்னு. செய்யுறதுக்கு ஒண்ணும் இல்லாட்டாத்தான வேண்டாத எதையாவது நினைக்கத் தோணும்? காலையில வேலைக்குப் போனா நாலு மணிக்குல்லாம் வீட்டுக்குத் திரும்பிடுவேன். ராத்திரி சாப்பாட்டுக்கு மட்டும் ஏதாவது செய்வேன். இன்னிக்கு அந்த வேலையும் இல்லை. தங்கச்சி கொடுத்துவிட்டது” எனப் புன்னகையுடன் மடியில் வைத்திருந்த துணிப்பையை எடுத்துக் காட்டினார்.

“யாரோடவும் அதிகமா பேச்சு வச்சுக்கமாட்டேன். பஸ் எடுத்தாலும் முன்னுக்கு இருக்கிற சீட்ல உக்காந்துடுவேன். ஏனோ இன்னிக்கு உன்னைப் பாக்கவும் உன் பக்கத்துல உக்காரணும்னு தோணியது. எனக்கு நேர் இளைய தங்கச்சி உன்னோட சாடையிலதான் இருக்கும்.”

என்ன சொல்வதெனத் தெரியாமல் புன்னகையுடன் பார்த்தாள். என்ன வேலை செய்கிறாள்? அவளது குடும்பத்தில் யார்யார் இருக்கின்றனர் போன்றவற்றை விசாரித்தார். பேச விரும்புகிறவரிடம் பதிலை மட்டும் சொல்லிக்கொண்டிருப்பது முறையில்லையென வாசுகி அவரது வீட்டினரை விசாரித்தாள்.

“தனியேதான் இருக்கேன். எங்ககூட வந்து இருங்கம்மான்னுதான் மகன் சொல்றான். அங்கே போனா செய்யுறதுக்கு ஒரு வேலையும் இருக்காது. காலம்பூரா உழைச்ச கையால சும்மாயிருக்க முடியுமா? என்னால முடியுற மட்டும் இப்படியே இருக்கேன்னு சொல்லிட்டேன். வாரத்துல நாலு நாள் வேலைக்குப் போவேன். ரெண்டு நாள் முடியாதவங்க தங்கியிருக்குற இல்லத்துக்குப் போய் என்னால முடிஞ்ச சின்னச்சின்ன ஒத்தாசை செய்வேன். இருக்கவே இருக்கு ஞாயித்துக்கிழமையில வீட்டைச் சுத்தம் பண்ணுற வேலை” சிரிப்புடன் சொன்னார்.

“பத்து வருசத்துக்கு முன்னவரைக்கும் தரை வீட்டுலதான் இருந்தேன். கார் ஓட்டும்போது ஒருவாட்டி இலேசா மயக்கம் வந்துடிச்சி. அதுக்கப்புறம் காரைத் தொடறதில்ல. கார் இல்லாம ஒரு பக்கம் போய்வர வசதியும்படல. கணவர் வாங்கிய வீட்டை விக்கணுமான்னு ரொம்ப யோசிச்சேன். அவ்ளோ பெரிய வீட்டைப் பராமரிக்கவும் சிரமமா இருந்தது. அதனாலதான் அதை வித்துட்டு பாசிரிஸ் வட்டாரத்துல ‘எச்டிபி’ வீடு வாங்கிட்டு வந்தேன்.”

“1943ஆம் ஆண்டில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிங்கப்பூருக்கு வந்த நாளில்தான் நான் பிறந்தேனாம். எங்கப்பா அன்னிக்குக் காலையிலேயே கேத்தே சினிமா அரங்கில் நடந்த கூட்டத்துல கலந்துக்கப் போறேன்னு கிளம்பிட்டாராம். மத்தியானம்போல எங்கம்மாவுக்குத் திடீர்னு வலி வரவும் அக்கம்பக்கத்தில் குடியிருந்தவங்கதான் ஆசுபத்திரிக்கி அழைச்சிட்டுப் போயிருக்காங்க” வெளியே மழைவிட்டிருந்தும் பேருந்தில் பேச்சு மழை நிற்கவில்லை. அந்தக் காலகட்டத்தில் நாட்டில் நடந்த பிரச்சினைகள், பெரிய குடும்பத்தைச் சமாளிக்க பெற்றோர் அனுபவித்த சிரமங்கள், தன்னுடைய பள்ளி வாழ்க்கை எனச் சொல்லிக்கொண்டே வந்தார்.

“கூடப் படிச்சவங்க, ஆசிரியர்கள்னு எல்லாருடைய பேரையும், முக்கியமா ஆண்டுகளையும் நினைவு வச்சிருக்கீங்க. நாப்பது வயசுலேயே சில விஷயங்களுக்கு நான் யோசிக்க வேண்டியிருக்கு” வாசுகி மெல்லச் சிரித்தவாறு சொன்னாள்.

“அதென்னவோ ஒருவாட்டி ஒரு விஷயத்தை கேட்டேன்னா அப்படியே மனசுல பதிஞ்சிடும். என் தம்பி, தங்கச்சிங்கள்லாம் குடும்பத்துல யாருக்காவது பிறந்தநாள், கல்யாணநாள் வாழ்த்துச் சொல்லணும்னா என்னைக்குன்னு என்னைத்தான் கேப்பாங்க” முகத்தில் பெருமிதம் தெரிந்தது. பேருந்தில் படிப்பதற்காக எடுத்து வந்த புத்தகத்தைக் கைப்பையைவிட்டு எடுக்காமலும் கைக்கடிகாரத்தைப் பார்க்காமலும் செல்ல வேண்டிய தூரத்தில் பாதியைக் கடந்திருந்தாள்.

“எங்க வீட்டுல நான்தான் முதல்ல டிகிரி எடுத்தேன். எங்க அக்கா பள்ளிக்கூடப் படிப்போட நின்னுடிச்சி. அண்ணன் நல்லா படிச்சது. அதுதான் பெரிய படிப்பு படிச்சி மேல வரும்னு வீட்டுல எல்லாரும் நினைச்சோம். எங்கண்ணன் பேசுற இங்லீஷைப் பாத்துதான் நாமளும் அப்படிப் படிக்கணும்னு எனக்கு ஆசையே வந்தது. கூட்டாளிங்களோட சேர்ந்து அது யுனிவர்சிட்டி படிப்பைப் பாதியில விட்டுடிச்சி. எங்களுக்கெல்லாம் பெரிய வருத்தம்தான்” சில நிமிடங்கள் அமைதியாய் இருந்தார்.

“1966 ஆம் ஆண்டு ஏப்ரல் மாசம் 4ஆம் தேதிதான் சிங்கப்பூருல அமெரிக்கத் தூதரகம் திறந்தாங்க. என்ன அப்படிப் பாக்குறே? அது எனக்கு எப்படி ஞாபகம் இருக்குன்னு நினைக்கிறியா? நான் முதன் முதலில் வேலைக்குப் போன நாளை மறக்க முடியுமா?”

“விசாவுக்காக வர்றவங்க கொடுக்கும் விவரங்கள் சரியா இருக்கின்றனவா என்பதைச் சரிபார்த்து மேலதிகாரிகிட்ட கொடுக்கணும். அங்கு வேலைக்குப் போனபிறகுதான் முடியைக் குட்டையா வெட்டினேன். அப்போ ஆரம்பித்த பழக்கம் இன்னும் மாறல” வெண்பஞ்சுபோன்ற முடி கழுத்தில் இறங்காத காரணம் புரிந்தது.

கைப்பேசியில், தங்கையைச் சமாதானப்படுத்துவதுபோல ஆரம்பித்த பேச்சு முடிவதாகத் தெரியவில்லை. காங்கிரீட் காடுகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு அடர்த்தியான பசுமைச் சூழ்ந்த பகுதியில் பேருந்து சென்றுகொண்டிருந்தது. அவற்றைக் காண இயலாதவாறு சன்னல் கண்ணாடி முழுக்க நீர்த்திவலைகள் ஆதிக்கம் செய்தன. காதலரைக் கைப்பிடித்ததை இன்னும் சொல்லவில்லையே என்ற ஆர்வம் வாசுகிக்கு உண்டானது. அவரோ தங்கையிடம் மகிழ்ச்சியாகப் பேசிக்கொண்டிருந்தார். முன்பின் அறிமுகமில்லாத தன்னிடம் பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்ட மூதாட்டியைப்பற்றி நினைத்துப் பார்த்தாள். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், வாழும் நாள்களைப் பயன்மிக்கதாய்க் கழிக்க வேண்டுமென்ற எண்ணமும் செயலும் யோசிக்க வைத்தது. அவள் இறங்குவதற்குச் சில நிறுத்தங்கள் இருந்தபோது கைப்பேசியைப் பைக்குள் போட்டார்.

“நான் கிளம்புன பிறகு அங்கே பயங்கர மழையாம். இப்படி மழை கொட்டுறப்ப ஏன் போனேன்னு தங்கச்சி சத்தம் போடுது. ஞாயித்துக்கிழமை ஒரு நாள்தான் அது வீட்டில் இருக்கும். நான் அங்கேயிருந்தால் அதோட வேலை கெட்டுடுமேன்னுதான் சாப்பிட்டு முடிச்சதும் கிளம்பினேன். அவ்ளோ அவசரமா போய் என்ன செய்யப் போறேன்னு திட்டுது. ம்... வீடு கிட்டவே வந்துடிச்சி. உன்னோட பேசிக்கிட்டே வந்ததுல நேரம் ஓடியே போயிடுச்சிம்மா.”

“மறுபடி மழை வர்றமாதிரி தெரியுது. குடை வச்சிருக்கீங்களாம்மா?

“தேவையில்லம்மா. ஷெல்டர் வழியாவே வீட்டுக்குப் போயிடலாம். சிங்கப்பூர்ல முன்னல்லாம் எப்போ மழை பெய்யும்னே சொல்ல முடியாது. இப்ப வெயிலின் தாக்கம்தான் அதிகமாத் தெரியுது. ம்... இங்க மட்டுமா? உலகத்துல எங்கே பார்த்தாலும் இயற்கை மாறுபாடு நடந்துகிட்டுதானே இருக்கு?”

தங்கையிடம் பேசும் முன் அவளிடம் பேசியவற்றைப்பற்றி மறந்துவிட்டார்போலும். அவரது கல்யாண வாழ்க்கையைப்பற்றித் தானாக ஏதும் கேட்டால் தவறாக நினைப்பாரோ என்றெண்ணினாள். அவள் இறங்குவதற்கு இன்னும் மூன்று நிறுத்தங்களே இருந்தன. அதன்பிறகு இந்த எதிர்பாராத சந்திப்பு ஒரு நிழலைப்போல அகன்றுவிடும். ஆனால், அவர் நினைத்தது நடந்ததா என்ற கேள்வி உள்ளுக்குள் துரத்துமே. மௌனத்தைக் களைந்து நினைத்ததைக் கேட்கலாமா என்ற யோசனையை செயல்படுத்த முடியவில்லை. வடிகாலிலிருந்து நீர் வேகமாக ஓடியது மங்கலாகத் தெரிந்தது. கறுமேகங்கள் விலகிச் சென்ற வானம் இயல்புநிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்ததைக் கவனித்தாள்.

“வேலையிடத்தில் பதவி உயர்வு வந்தப்பதான் பென்னட் என்னோட வாழ்க்கையில் வந்தார். அவர் முன்பே வந்திருக்கிறார். நான்தான் தாமதமா கவனிச்சிருக்கேன்” பேருந்தின் சன்னலில் வழியும் மழைத் துளிகளைப்போல அவர் மனத்திலிருந்த சொற்கள் வழிந்தன.

“வெள்ளைக்காரன் வேணாம். விட்டுட்டுப் போயிடுவான்னு எங்க சொந்தக்காரங்க யாரும் ஒத்துக்கவேயில்ல. கல்யாணம்னா அவரோடதான்னு இருந்தேன். என்னோட நம்பிக்கை பொய்யாப் போகல. பத்து வருசம்...! போனதே தெரியல. அப்படியே இருந்திருக்கலாம். என்ன செய்வது? நாம நினைக்குற மாதிரியா வாழ்க்கையின் போக்கு அமையுது?” அழுத்தமான அமைதி சில நிமிடங்கள் நிலவியது.

“உணவுக்கடையில் வேலைக்குப் போன பிறகுதான் விரலைவிட்டுப் பிரிய மனமில்லாமல் இறுக்கிப் பிடித்திருந்த மோதிரத்தைக் கழற்ற வேண்டி வந்தது. அதென்ன வெறும் மோதிரமா?” கை விரல்களைப் பார்த்தவாறு சொல்கையில் குரலில் ஏக்கமும் பாசமும் ததும்பின. “அடுத்த நிறுத்தத்தில் இறங்கணும்” என்றவாறு அருகிலிருந்த பொத்தானை அழுத்தினார்.

“இவ்ளோ நேரம் பேசுறோம்மா. உங்க பெயரைச் சொல்லலையே?”

“வைட்...” அந்த ஒற்றைச் சொல் சில கணங்கள் காற்றில் மிதந்தது. அந்த இடைவெளி அழகான நினைவலைக்குள் சென்று திரும்பியிருக்குமோ? பிறகு முகம் மலர, “பூர்ணா வைட். வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தின் அடையாளமா அவரது குடும்பப்பெயரை இணைச்சிக்கிட்டேன்” என்றவரது குரலில் அன்பின் அடர்த்தி இழையோடியது.

அவரது மனத்தில் என்ன ஓடியதோ? சில நிமிடங்கள் ஏதும் பேசவில்லை. சொல்லவியலா வேதனை முகத்தில் படர்ந்தது. “எல்லாத்திலும் நிறைவா இருக்கணும்கிறதுக்காக எங்கம்மா எனக்குப் பூரணவள்ளின்னு பேர் வச்சாங்க” என்று சொல்லும்போதே குரல் தழுதழுத்தது.

நிறுத்தத்தை அடையும் முன் அவளைப் பார்த்துக் கையசைத்துவிட்டு எழுந்தார். பேருந்தின் கதவுகள் திறந்தன. மேலடுக்கில் பயணம் செய்த சிலர் அவசரமாக இறங்கிக்கொண்டிருந்தனர். சக்கரநாற்காலியில் உள்ள ஒருவர் பேருந்தில் ஏறுவதற்கு உதவி செய்ய ஓட்டுநர் இருக்கையைவிட்டு எழுந்து வந்தார். பயண அட்டையைக் கருவியில் காட்டுவதற்காகக் காத்திருக்கையில் ஒரு கணம் திரும்பிப் பார்ப்பார் என்ற வாசுகியின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. சற்று முன் அடங்கியிருந்த பேருந்தின் இயந்திரம் சிறு உறுமலோடு வேகமெடுத்தது. மொட்டவிழும் மல்லிகை மலர் மனித உருவம்கொண்டதுபோல அவர் மெல்ல நடந்து சென்றதை விழிகளில் நீர்த் திரையிடப் பார்த்தாள். மழை மீண்டும் துளிர்க்கத் தொடங்கியது.

ஆக்கம்: மணிமாலா மதியழகன்