மில்லத் அகமது
நள்ளிரவு நன்றாக உறங்கிக் கொண்டிருந்த இளம்பரிதி ‘டிங்’ எனச் சத்தம் கேட்டுத் திரும்பி, தூக்கத்தில் இலேசாக கண்களைத் திறந்துப் பார்க்க, அருகில் பளிச்சிட்ட கைப்பேசி வெளிச்சம் கண்களை லேசாகக் கூசச்செய்தது. கையில் எடுத்துப் பார்த்தான். பூவழகி என்று வாட்சப்பில் வந்த பெயரைக் பார்த்தவுடன், தூக்கம் சிட்டுக்குருவி போலப் பறந்து சென்றது.
“மன்னிச்சிடுடா.”
அந்தக் குறுஞ்செய்தியைப் பார்த்துக் கொண்டிருந்தவன் கண்களில் பவர் பாயிண்ட் படவில்லைகளாக, காட்சிகள் ஓடியது.
பூவழகி, பெயருக்கேற்ற அழகி. ரோஜாப்பூ முகத்தில், முல்லைப்பூ விழியில், மல்லிகைப்பூ சிரிப்பில், தாழம்பூ மேனியில், சந்தனப்பூ கேசத்தில், செண்பகப்பூவாய் ஜொலிப்பவள். பூவைவிட மென்மையானவள்.
நாங்கள் செம்பவாங்கில் இருந்தபோது பூத்த எங்கள் நட்பு, வாம்போவிற்கு குடிப்பெயர்ந்தபோது கைப்பேசிக்குள் வளர்ந்த நட்பு, இருவருக்கும் வேலை கிடைத்து அதில் மூழ்கியதில், இடையிடையே வாட்சப்பில் தொடர்ந்தது. வேலைத்திறன் மேம்பாட்டிற்காக ஒரு வருடம் ஆஸ்திரேலியா சென்றபோது எங்கள் நட்பு உபர் கார் சேவைபோல மறைந்தது, பணியின் மன அழுத்தத்தில் நானும் மறந்தேன். அதற்குள் காலம் ஒரு நதியாய், மூன்று ஆண்டுகளைக் கரைத்துச் சென்றுவிட்டது. இப்போது நேரம் காலம் தெரியாமல் செய்தி அனுப்புகிறாள்.
மீண்டும் டிங்.. என்ற ஓசையை தொடர்ந்து, “தூங்கிட்டியா?”
“ஆமா... இல்ல, முழிச்சுட்டேன்.”
“மன்னிச்சிடுடா.”
“எதுக்கு மன்னிப்பு?”
“தொந்தரவுக்கு!”
“என்ன திடீர்னு என் ஞாபகம்?”
“ஏன்? வரக்கூடாதா?”
“சரி... எப்படி இருக்கே?”
“இருக்கேன்.”
“போன்ல அழைக்கவா?”
“வேண்டாம்.”
“ஏன்?”
“சூழ்நிலைச் சரியில்லை.”
“உனக்கா?”
“வெடைக்காதே, எனக்கு ஆத்திரம் வருது.”
“அமைதி... அமைதி, சொல்லு... ஏதாவது பிரச்சனையா?”
“இல்லை.”
“பின்னே?”
“ஓர் உதவி வேண்டும்.”
“இந்த நேரத்திலா?”
“இப்ப இல்லை, நாளைக்கு.”
“அதுக்குக் காலையில் அழைக்கலாமே!”
“நேரமில்லை, அவசரம்.”
“சரி, விசயத்தைச் சொல்லு.”
“நாளைக்குக் காலையிலே வீட்டுக்கு வா.”
“இதுதான் அவசரமா?”
“நான் இன்னும் ஆரம்பிக்கவில்லை.”
“சொல்லு.”
“என் அறையிலுள்ள அலமாரியில் இரண்டாவது தட்டில் துணிகளுக்குப் பின்னாடி ஒரு பரிசுப் பொருள் இருக்கு, அதோடு ஒரு கடிதம் இருக்கும், அதுல உள்ளபடி செய்.”
“அதை நீயே செய்யலாமே?”
“இப்ப நான் வீட்ல இல்லை, வெளியில் இருக்கேன்.”
“நீ வரும்போது கொடு.”
“நாளைக்கே அந்தப் பொருள் அங்கே போய்ச் சேரவேண்டும், தயவுசெய்து முடியாதுனு சொல்லாதே.”
“சரி, முயற்சி செய்றேன்.”
“இல்லை, கண்டிப்பா செய்யணும், உன்னால மட்டும்தான் முடியும்.”
“சரி... செய்றேன். போதுமா?”
“நன்றிடா... குட் நைட்.”
“இப்ப குட் மார்னிங்...”
“மன்னிச்சிடுடா...”
அதன் பிறகு அவன் உறக்கத்திற்கும், விழிப்பிற்கும் இடையில் இருந்து, புரண்டு புரண்டு படுத்ததில் பொழுது புலர்ந்ததுதான் மிச்சம். அவசர அவசரமாகக் குளித்து, உடை உடுத்தி, ஒரு கையில் ஆப்பிளைக் கடித்துக்கொண்டு, மறு கையில் ஆப்பிள் போனை எடுத்து வேலைக்கு அவசர விடுப்பு சொல்லிவிட்டு, பூவழகியின் வீட்டிற்கு வந்தான்.
அழைப்பு மணிக்கேட்டு கதவைத் திறந்த பூவழகியின் அப்பாவைப் பார்த்து “என்ன அங்கிள் டல்லா இருக்கீங்க?, பூவழகி.. அவ அறையிலுள்ள பரிசுப் பொருளை வந்து எடுத்துக்கச் சொன்னாள்...” என்றவுடன் “எப்பொழுது சொன்னாள்?” என்று அவர் கேட்க, “நேத்து ராத்திரிதான் சொன்னா... என்னயிது, என்னய தெரியாத மாதிரி வெளியில நிக்க வச்சி பேசுறீங்க?”, “சரி உள்ளே வா,” என்று கதவை முழுதாகத் திறக்க... பூவழகியின் தாய் தரையில் குறுகிக் கிடந்தாள். ஏதோ பிரச்சினை நடந்திருக்கு என்று எண்ணியபடியே நுழைந்தவன், சற்று பார்வையை உயர்த்த... “இல்லை“ என்று வீடே அதிரும்படி அலறினான். அங்கே பூவழகி சிரித்த முகத்தில் மாலையோடு சுவற்றில் தொங்கிக்கொண்டிருந்தாள்.
“அப்போ வாட்ஸ்அப்பில் எனக்குச் செய்தி அனுப்பியது பூவழகியின் ஆவியா?” எனத் தனக்குள் புலம்பினான்.
“நாங்களே கொதிக்க வச்சி வத்திப்போன கஞ்சி சட்டியாட்டம், தீஞ்சி போயிருக்கோம்... பூவழகி வந்தாளாம்... வாட்ஸ்அப்பில் சொன்னாளாம்...” சூடான அயர்ன் பெட்டியில் விழுந்த தண்ணீர் போல வார்த்தைகள் விழுந்து தெறித்தன.
“அங்கிள், நீங்க சொன்னா நம்பமாட்டீங்க, இங்கே பாருங்க…” என்று வாட்ஸ்அப்பைத் திறந்தான். தேர்வில் படிக்காத மாணவனின் விடைத்தாளைப்போல, வெறுமையாகக் காட்சியளித்தது.
“என்ன ஆச்சரியம்! காலையில வரும்போது இருந்ததே... இப்ப எல்லாம் டெலிட் ஆச்சு… எப்படி அங்கிள்?”
“நான் உன்னைக் கேள்வி கேட்டால், நீ என்னைத் திருப்பிக் கேட்கிறாய்? பரிதி, உனக்கென்ன ஆச்சு?”
“அங்கிள், நான் சொல்வது சத்தியம், அவள் அலமாரியில் துணிகளுக்குப் பின்னால் ஒரு பரிசுப்பொருளும், கடிதமும் இருக்கு, அதை இன்னிக்கே உடையவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சொன்னாள். வாங்க, போய்ப் பார்ப்போம், அப்படி எதுவும் இல்லையென்றால் நீங்கள் என்னைத் திட்டுங்க, அடிங்க. அதுக்கு முன்னாடி பூவழகிக்கு என்ன நடந்தது? எப்படி இறந்தாள்? சொல்லுங்க,” குரல் தழுதழுக்கக் கேட்டான்.
“என்னத்தைச் சொல்றது? படைச்சவனைக் குத்தம் சொல்றதா? இல்ல விதியை நெனச்சு நொந்துக்கிறதா? உனக்குத்தான் அவளப் பத்தி நல்லாத் தெரியுமே. அடுத்தவங்களுக்கு உதவுறது அவளுக்கு அலாதி பிரியம். ரெண்டு நாளைக்கு முன்னாடி ஆதரவற்றோர் இல்லத்தில் அங்குள்ள குழந்தைகளுக்குக் கதை சொல்லிவிட்டு திரும்பி வரும்போது, பாதசாரிகள் கடக்கும் பாதையில் நடந்து வரும்போது, திருப்பத்தில் இருந்து வேகமாக வந்த காடி நிற்காமல் அவள் மீது மோதிவிட்டது. மருத்துவமனைக்குக் கொண்டு போகும் வழியிலேயே உயிர் போய்விட்டது. இந்தக் காரோட்டிகளுக்கு அப்படி என்ன அவசரம்? இப்ப, எம்பொண்ணு உயிரோட இல்ல,” தேம்பி தேம்பி அழுதார்.
அவர் கைகளைப் பற்றிக் கொண்ட பரிதி, “அங்கிள், கேட்கும்போதே மனசு வலிக்குது. உங்கள் மனநிலையிலத்தான் நானும் இருக்கேன். எல்லோருக்கும் அவளைப் பிடிக்கும்போது கடவுளுக்கு மட்டும் அவளைப் பிடிக்காதா என்ன? அதான் அவளை அழைத்துக்கொண்டார். உங்களுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை,” என்று கூறியபடியே “அங்கிள், அவள் எனக்குச் செய்தி அனுப்பியதில் ஏதாவது இருக்கும், வாங்க அவள் அறைக்குப் போய்ப் பார்க்கலாம்,” என்று அழைத்துக் கொண்டு சென்றான்.
இருவரும் மாறி மாறி அவளின் அலமாரியைக் கலைக்க, இரண்டாவது தட்டில் துணிகளுக்கு மத்தியில் ஒரு பரிசுப் பொருளும், கடிதமும் ஒன்றுமே நடக்காதது போல உட்கார்ந்திருந்தன. வெற்றி முகத்தோடு பரிதி அவரைப் பார்க்க, சரி நம்புறேன் என்று சைகையால் வழியனுப்பினார்.
கடிதத்திலிருந்த ஆதரவற்றோர் இல்லத்திற்குச் சென்றான். அங்கே ஏஞ்சலினைப் பார்க்கவேண்டும் என்று சொன்னவுடன், சிங்கப்பூர் தேசிய இதய மையத்திற்குச் நிலையத்திற்குச் சென்றால் பார்க்கலாம் என்று தளம், அறை, படுக்கை எண் ஆகியவற்றைக் குறித்துக் கொடுத்தனர். அங்கிருந்து மத்திய விரைவுச்சாலை வழியாகப் பதினைந்து நிமிடத்தில் ஹாஸ்பிடல் டிரைவ்’வில் காடியை நிறுத்தினான். பெயரைப் பதிவுச் செய்துவிட்டு, ஏஞ்சலின் இருந்த அறைக்குச் சென்றவன் திடுக்கிட்டான், அங்கே கட்டிலில் எட்டு வயது பூஞ்சிட்டு இவனைப் பார்த்துப் புரியாமல் சிரித்தது.
இரண்டு வருடமாக இதய நோயால் மரணக் கோட்டைக்குச் சென்றுகொண்டிருந்த இந்தக் குழந்தையை, பூவழகி என்ற தேவதை ஆசிர்வதித்துத் தன் இதயத்தைக் கொடுத்துவிட்டுச் சென்றது. இன்று இவளுக்குப் பிறந்தநாள் என்று அளந்து சொல்லிவிட்டுப் போனாள் அங்கேயிருந்த தாதி.
பிறந்தநாள் வாழ்த்துகள் என்று பரிசையும், கடிதத்தையும் கொடுத்தான். கடிதத்தைப் படித்தவுடன் “அம்மா எங்கே?” என்று கேட்டாள் அச்சிறுமி.
“அம்மாவா?”
“ஆண்ட்டிதான், அம்மானு கூப்பிடணும்னு சொன்னாங்க,” என்று கொஞ்சிப் பேசினாள்.
“அப்படியா, அம்மா இனிமே வரமாட்டாங்க.”
“ஏன்?”
“அவங்க, உன் இதயத்துல குடியிருக்காங்க.”
“ஆமாவா அங்கிள்!”
“ஆமாம்! இனிமே என்னை அங்கிள்னு கூப்பிடாதே.”
“பின்னே, எப்படிக் கூப்பிட?”
“அப்பா!”

