ஹைதராபாத்தில் கள்ள நோட்டுக் கும்பல் சிக்கியது

2 mins read
91c46eb0-b0bd-4265-af3e-41adf6807d33
ஹைதராபாத்தில் கள்ள நோட்டுக் கும்பலிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கள்ளநோட்டுகளுடன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளிக்கும் ஹைதராபாத், மெஹ்திபட்டினம் காவல்துறை அதிகாரிகள். - படம்: முன்சிஃப்டெய்லி இணைய இதழ்

ஹைதராபாத்: ஐந்நூறு ரூபாய் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டதாக ஹைதராபாத், மெஹ்டிபட்டினம் காவல்துறையினர் எட்டுப் பேரைக் கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் இருந்து 950 ஐந்நூறு ரூபாய் கள்ள நோட்டுகள், மூன்று மோட்டார்சைக்கிள்கள் உட்பட நான்கு வாகனங்கள், ஒன்பது கைப்பேசிகள் ஆகியவற்றை காவல்துறை கைப்பற்றியது.

கள்ள நோட்டுப் புழக்கத்தைத் துடைத்தொழிக்கும் வகையில் மெஹ்திபட்டினமும், காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தின் சிறப்புக் குழுவும் இணைந்து தொடர்ச்சியான அதிரடிச் சோதனைகளை மேற்கொண்டன.

புதன்கிழமை (நவம்பர் 12) இரவு நடத்தப்பட்ட சோதனையின்போது எய்ட்கா மைதானம் அருகே கள்ள நோட்டைப் புழக்கத்தில் விட்டபோது காவல்துறையினர் அவர்களைப் பிடித்தனர்.

கைதுசெய்யப்பட்டவர்களில் தந்தூரைச் சேர்ந்த வாகனம் பழுதுபார்ப்பவரான கஸ்தூரி ரமேஷ் பாபு என்பவரே இந்தக் கள்ளநோட்டுக் கும்பலுக்கு முக்கியமானவர் என்று காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர், தனது சகோதரியின் உதவியுடன் வீட்டிலேயே கள்ளநோட்டுகளை அச்சடித்துள்ளார்.

இதற்கு முன்னதாக இவர் ஹைதராபாத்திலும் குஜராத்திலும் கள்ளநோட்டு வழக்கில் கைதாகி விடுதலையானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவருடைய வீட்டில், கணினியில் போட்டோஷாப் மென்பொருளைப் பயன்படுத்தி கள்ளநோட்டுகளைத் தயாரித்து, நண்பர்கள் வாஹித், தாஹா, சோஹைல், ஃபஹாட், இம்ரான், உமர், அல்டமாஷ் ஆகியோர் மூலம் புழக்கத்தில் விட்டது தெரியவந்துள்ளது.

ஆந்திராவில் கள்ள நோட்டுப் புழக்கத்தில் விடுவோர் கைதுசெய்யப்படும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. கடந்த அக்டோபர் மாதம் 11ஆம் தேதி, மதுபானக் கடையில் கள்ளநோட்டு குறித்த புகாரின் அடிப்படையில், காவல்துறை மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் 12 பேர் அடங்கிய கும்பலில் 8 பேர் கைது செய்யப்பட்டு அவர்களில் 4 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்