தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜூலை 13 வரை ‘ஸாக் சலாம் இந்­தியா’ விற்பனை விழா

2 mins read
390f1ec5-8ea7-4e09-9619-1683eaff096e
ஆடைகள், ஆபரணங்கள், உணவுக் கடைகள் என நூற்றுக்கணக்கான முகப்புகள் சிங்­கப்­பூர் எக்ஸ்போ மண்­ட­பம் 5Aல் அமைக்கப்பட்டுள்ளன. - படம்: செய்யது இப்ராகிம்

சிங்கப்பூரில் ‘ஸாக் சலாம் இந்­தியா’ விற்பனை விழா, வியாழக்கிழமை (ஜூலை 10) மீண்டும் தொடங்கியுள்ளது.

ஜூலை 13ஆம் தேதிவரை சிங்­கப்­பூர் எக்ஸ்போ மண்­ட­பம் 5Aல் காலை 10 மணியிலிருந்து இரவு 10 மணிவரை பல்வேறு பொருள்கள் விற்பனைக்கு வருவதோடு ஏராளமான நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.

சிங்கப்பூரின் 60ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இந்தச் சிறப்பு ஆடித் தள்ளுபடியை வழங்குகிறது 30வது முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘ஸாக் சலாம் இந்­தியா விற்பனை விழா.

விற்பனை விழாவில், மலிவான விலையில் இந்திய ஆடைகளை விற்கிறது விதர்ஷா ஆடை நிறுவனம்.
விற்பனை விழாவில், மலிவான விலையில் இந்திய ஆடைகளை விற்கிறது விதர்ஷா ஆடை நிறுவனம். - படம்: செய்யது இப்ராகிம்

இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் எனப் பல நாடுகளைச் சேர்ந்த விற்பனையாளர்கள் பல வகையான ஆடைகள், விதவிதமான ஆபரணங்கள், உணவுக் கடைகள் எனப் பல்வேறு கடைகளை அமைத்துள்ளனர். ஒவ்வொரு கடையும் தனித்துவமான சிறப்புத் தள்ளுபடிகளை வழங்குகிறது.

சிறு தானியங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள உணவுப் பொருள்களை விற்பனை செய்யும் செ.ராகவி, 33, ந. தீபன் ராஜ், 37 தம்பதி.
சிறு தானியங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள உணவுப் பொருள்களை விற்பனை செய்யும் செ.ராகவி, 33, ந. தீபன் ராஜ், 37 தம்பதி. - படம்: செய்யது இப்ராகிம்

அதில், ‘ஆர்விஆர் டிரடேர்ஸ்’ நிறுவனத்தைச் சேர்ந்த ந. தீபன் ராஜ், 37, செ.ராகவி, 33, தம்பதியரும் அடங்குவர்.

தோசை மாவு, இட்லி மாவு, நூடல்ஸ், பாஸ்தா, மியூசிலி எனப் பல உணவுப் பொருள்களைச் சிறு தானியங்களைக் கொண்டு தயாரித்து, ஆரோக்கியமான உணவு முறையைக் கடைப்பிடிக்க இவர்கள் ஊக்குவிக்கின்றனர்.

வியாழக்கிழமையும் வெள்ளிக்கிழமையும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் விலையில் 3 விழுக்காடு தள்ளுபடிச் சலுகை வழங்கப்படும்.

மேலும், ஆகஸ்ட் 9ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஹாரிஸ் ஜெயராஜின் இசைக் கச்சேரிக்கான நுழைவுச்சீட்டுகளையும் கண்காட்சியில் மலிவான விலையில் வாங்கலாம். அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பும் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும்.

அதோடு, வருகையாளர்களைக் கவரும் விதமாகப் பல கலை நிகழ்ச்சிகளுக்கும் போட்டிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜூலை 10ஆம் தேதி மாலை 5 மணிக்கு ரங்கோலிப் போட்டி இடம்பெறும். அதோடு, ஜூலை 11ஆம் தேதி மாலை 5 மணிக்கும் ஜூலை 13ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கும் சமையல் போட்டியில் வருகையாளர்கள் பங்குபெறலாம்.

ஜூலை 10, 11, 12 ஆகிய தேதிகளில் இரவு 7 மணிக்குப் புகழ்பெற்ற நகைச்சுவைக் கலைஞர் மதுரை முத்து வழங்கும் ‘காமெடி சரவெடி’ நிகழ்ச்சியையும் அவரது தலைமையில் நடக்கவிருக்கும் நகைச்சுவைப் பட்டிமன்றத்தையும் கேட்டு ரசிக்கலாம்.

ஜூலை 12ஆம் தேதி காலை 11 மணிக்குச் சிறுவர்களுக்கான கலை நிகழ்ச்சியும் இரவு 8.30 மணிக்கு இன நல்லிணக்க விருந்தும் நடைபெறவுள்ளது.

இந்திய முஸ்லிம் பேரவையோடு இணைந்து நடத்தப்படும் ‘ஸாக் சமூக விருதுகள்’ என்ற விருதளிப்பு நிகழ்ச்சி ஜூலை 12ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறும்.

“ஆண்டுக்கு இரண்டு முறையோ மூன்று முறையோ ‘ஸாக் சலாம் இந்­தியா’ விற்பனை விழா நடைபெறும். ஒவ்வொரு முறையும் குடும்பத்தோடு கலந்துகொள்வோம்,” என்றார் ரமணி, 55.

ஆடைகள், பைகள், காலணிகள், பாய்கள், படுக்கை விரிப்புகள் எனப் பல்வேறு பொருள்களை நல்ல தரத்திலும் மலிவான விலையிலும் வாங்க உகந்த இடமாக ‘ஸாக் சலாம்’ விற்பனை விழா விளங்குகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்