தீபாவளி அன்று நாம் அனைவரும் சிராங்கூன் சாலையில் உள்ள தேக்காவிலும் அவ்வட்டாரத்தில் உள்ள மற்ற கடைகளிலும் புத்தாடைகள் வாங்குவது வழக்கம். மேலும் சிலர் இணையம்வழியும் தங்கள் புத்தாடைகளை வாங்குவர். இவை அனைத்திற்கும் முற்றிலும் மாறுபட்ட முறையில் வேனில் தனது விற்பனையை மேற்கொள்கிறார் திருமதி நர்கிஸ் பானு (66).
கடந்த 7 ஆண்டுகளாக இணையம்வழி சேலைகள், காகரா ஆடைகள், ஆபரணங்கள் போன்றவற்றை ‘நிஸ்ஸி பேஷன்’ என்ற பெயரில் விற்பனை செய்துவந்தார். அவர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் 20,21 தேதிகளில் காலை 10 மணியிலிருந்து இரவு 10 மணிவரை ஒரு முன்னோட்ட நிகழ்வாக சிங்கப்பூரில் முதல்முறையாக வேனில் ஆடைகளை விற்பனை செய்தார். இவர் சூவா சு காங், அங் மோ கியோ, தோ பாயோ, பொங்கோல் வட்டாரங்களுக்குச் சென்று வாடிக்கையாளர்களைச் சந்தித்தார்.
சிங்கப்பூரின் 60 ஆண்டு நிறைவை முன்னிட்டு புதிதாக ஏதேனும் செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் இந்த முயற்சியை மேற்கொண்டார் திருமதி நர்கிஸ்.
“பெரும்பாலும் எனது வாடிக்கையாளர்கள் வாங்கும் ஆடைகளை தபாலில் அனுப்பாமல் நேரில் தருவது எனது வழக்கம். அவர்களில் திருப்தியும் மனநிறைவும் என்மீதுள்ள நம்பிக்கையை வலுப்படுத்துகிறது. அந்தக் காலத்தில் சேலை விற்பவர்கள் பைகளில் சேலைகளை அடுக்கியும் குச்சிகளில் பைகளைக் கட்டியும் வாடிக்கையாளர்களின் வீட்டு வாசல்வரை சென்று சேலைகளை விற்பார்கள். குறிப்பாக, வாடிக்கையாளர்களின் வீட்டில் கல்யாண நிகழ்வுகள் நடக்கும்போது வணிகர்கள் செல்வார்கள். அந்த வழக்கத்திற்கு மரியாதை செலுத்தும் வண்ணம் இந்த முயற்சியில் ஈடுபட்டேன்.” என்று திருமதி நர்கிஸ் பகிர்ந்தார்.
வாடிக்கையாளர்கள் தங்கள் நண்பர்களையும் அழைத்து வந்து சேலைகளை வாங்க ஊக்குவித்தார்கள். 20லிருந்து 60 வயது வரை உள்ள பலரும் வேனுக்கு வந்து துணிகளை வாங்கினார்கள். தமிழர்கள் மட்டுமல்லாது மற்ற இன வாடிக்கையாளர்களும் தங்கள் ஆதரவை வழங்கியது மனதை நெகிழ வைத்ததாகத் திருமதி நர்கிஸ் குறிப்பிட்டார்.
“நாங்கள் நிலைத்தன்மையின் முக்கியத்துவத்தை நினைவில்கொண்டு மின்சாரத்தால் இயங்கும் வேனைப் பயன்படுத்தினோம். இதன்மூலம் காற்று மாசுபாட்டைக் குறைக்க எங்கள் பங்கை ஆற்றினோம். அதோடு, எரிபொருள் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கும் நிலையான நடைமுறைகளை ஊக்குவிப்பதற்கும் முயன்றோம்” என்றார் திருமதி நர்கிஸ்.
வாடிக்கையாளர்களில் பலர் வேனில் அமர்ந்து ஆடைகளை அணிந்துப் பார்த்து வாங்குவது தங்களுக்குப் புத்துணர்ச்சியை அளித்ததாகக் குறிப்பிட்டனர். இன்னும் சிலர் எப்போது மீண்டும் வேனில் ஆடைகள் விற்பனை செய்யப்படும் என்றும் திருமதி நர்கிஸிடம் கேட்டார்கள். தற்போது இதுபோல அடுத்த நிகழ்விற்கு புதிதாக என்ன செய்யலாம் என்று எண்ணுவதாக திருமதி நர்கிஸ் பகிர்ந்தார்.