தந்தையரின் அன்பைப் போற்றும் நோக்கத்துடன் தாரகை இலக்கிய வட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 29) காலை, சிங்கப்பூர் தேசிய நூலக வாரியக் கட்டடத்தில் தந்தையர் தினக் கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிகழ்ச்சியில், தான் மட்டுமல்லாது தன் பிள்ளைகளையும் சிங்கப்பூர்த் தமிழ் சமூகத்திற்கு தொண்டாற்றும் விதமாக வளர்த்துள்ள சிறந்த தந்தைக்கு ‘தந்தையர் திலகம்’ விருது வழங்கப்பட்டது.
48 ஆண்டுகளாகத் தமிழாசிரியராகப் பணியாற்றிவரும் திரு இளங்கோவிற்கு இந்த விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.
தாமும் தம் மனைவியும் மகள்கள் மூவரும் தமிழ்மொழிக்கு ஆற்றிய பங்கினை அவர் தமது உரையில் பகிர்ந்துகொண்டார்.
முன்னதாக, செல்வி சையத் அலி பாத்திமாவின் நெறியாளுகையில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. தாரகை இலக்கிய வட்ட நிறுவனரும் தலைவருமான அப்துல் லத்தீப் மஹ்ஜபீன் அனைவரையும் வரவேற்றார். தொடர்ந்து மாணவி பூஜா சங்கரின் நடனம் இடம்பெற்றது.
அடுத்து, “தந்தை அன்பில் விஞ்சி நிற்பது கனிவே! கண்டிப்பே!” எனும் தலைப்பிலான ‘வெல்லும் சொல்’ அங்கத்தினை, சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத் தலைவர் தனபால் குமார் வழிநடத்தினார்.
கனிவே என்ற அணியில் உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்தில் உயர் தமிழ் படிக்கும் உயர்நிலைப்பள்ளி மாணவர் சஸ்வின், ரிவர் சைடு உயர்நிலை பள்ளி மாணவி கனிஷ்கா இருவரும் வாதிட்டனர்.
கண்டிப்பே என்ற அணியில் விக்டோரியா பள்ளி மாணவர் வியாசப் பிரகன், உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்தில் உயர் தமிழ் படிக்கும் உயர்நிலைப்பள்ளி மாணவி சனா கான் இருவரும் வாதிட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
மாணவர்களின் வாதங்களைக் கேட்ட பிறகு அப்பாவின் அன்பில் விஞ்சி நிற்பது கனிவே! என்று தீர்ப்பளித்தார் நடுவர் தனபால் குமார்.
அடுத்ததாக, “அப்பா உன் அன்புக்கு ஈடாகுமா ஆகாசம்” என்ற பாடலைத் தொடக்கநிலை மாணவர் ஜோஷித் பாடினார்.
சிறந்த நான்கு தந்தையர்க்கு அவரவர் பிள்ளைகள் குடும்பத்துடன் மரியாதை செய்த அங்கம் அனைவரையும் நெகிழ வைத்தது.
தமிழ்ப் பட்டிமன்றக் கலைக்கழகத் தலைவர் யூசுப் ராவுத்தர் ரஜீத், பட்டிமன்ற பேச்சாளரும் தொடக்கக் கல்லூரி ஆசிரியருமான மன்னை ராஜகோபாலன், கவிஞர் தியாக ரமேஷ், காலாங் சமூக மன்றத் தலைவர் ஆர்.சிவ பெருமாள் நால்வருக்கும் மரியாதை செய்த அவர்களின் பிள்ளைகளும் குடும்பத்தாரும் தங்கள் தந்தையைக் கொண்டாட வாய்ப்பளித்த தாரகை இலக்கிய வட்டத்திற்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
உருவ ஒற்றுமை கொண்ட அப்பாக்களுக்கும் பிள்ளைகளுக்கும் ‘அசலும் நகலும்’ என்ற புகைப்படப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று அப்பா - பிள்ளைகளுக்கு நிகழ்ச்சி மேடையில் போட்டி நடத்தப்பட்டது. திருமதி இசக்கி செல்வி வழிநடத்திய இப்போட்டியின் நடுவர்களாகக் கவிமாலைக் காப்பாளர் மா. அன்பழகன், திருமதி உமையாள் இருவரும் செயல்பட்டனர். மேலும், “தகப்பன் சாமிக்கு எழுதுவோம் ஒரு ஹைக்கூ” என்ற தலைப்பில் உயர்நிலை, பல்கலைக்கழக மாணவர்களுக்குப் போட்டி நடத்தப்பட்டது. கவிஞர் கங்கா பாஸ்கரன், கவிஞர் அஷ்ரப் அலி நடுவர்களாகப் பணியாற்றினர்.
நிகழ்ச்சியிலும் போட்டியிலும் பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் பரிசும் சான்றிதழும் வழங்கப்பட்டன.
விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கவிஞர் அ கி வரதராஜன் ஆற்றிய உரையில் தமது தந்தையை நினைவுகூர்ந்ததுடன் நிகழ்ச்சியின் சிறப்புகளையும் எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சி ஆதரவாளர்களுக்கும் நடுவர்களுக்கும் நினைவுப் பரிசு வழங்கிச் சிறப்பிக்கப் பட்டது. நிறைவாக, பொருளாளர் ஹேமா நன்றியுரை ஆற்றினார்.