மாணவர்களின் கற்பனைத்திறனை சோதித்த கதை சொல்லும் போட்டி

2 mins read
cc149093-1671-4918-b3d4-ad71c022ffe5
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ‘பாப்புலர்’ பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டன. - படம்: ரவி கீதா திவிஜா
multi-img1 of 2

மாணவர்களின் கதை சொல்லும் திறனையும் புத்தாக்கத்தையும் வெளிப்படுத்திய கதை சொல்லும் போட்டி மே 31ஆம் தேதியன்று ஜூரோங் வெஸ்ட் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

ஃபிரன்டியர் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவும் ஜூரோங் வெஸ்ட் உயர்நிலைப் பள்ளியும் இணைந்து அப்போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தன.

தொடக்கப் பள்ளி தமிழ் மாணவர்களுக்குத் தமிழ்மொழியின் அவசியத்தை வலியுறுத்தவும் தமிழ்மொழியில் நன்கு வாசிக்கவும் பேசவும் வைப்பதே அப்போட்டியின் நோக்கங்கள்.

நிகழ்ச்சியின் பரிசளிப்பு அங்கத்தில் பைனியர் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பேட்ரிக் டேவும் ஜூரோங் மேற்கு உயர்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் டான் மிங் மிங்கும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

“தாய்மொழியின் முக்கியத்துவ்ம்பற்றி நான் எவ்வளவு கூறினாலும் அது மிகையாகாது. தாய்மொழியில் தன்னம்பிக்கையுடன் பேசுவதற்கும் மொழித்திறனை வளர்த்துக்கொள்வதற்கும் இதுபோன்ற போட்டிகள் பெரிதும் துணைபுரிகின்றன,” என்றார் திரு பேட்ரிக் டே.

இவ்வாண்டு புதிதாக பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ள ஆத்திசூடி, கொன்றை வேந்தன், திருக்குறள் போன்ற இலக்கியங்களை மையமாகக் கொண்டு கதை சொல்லும் போட்டி நடைபெற்றது. 

“இளவயதிலேயே மாணவர்களிடத்தில் விழுமியங்களையும் நற்பண்புகளையும் விதைக்க வேண்டும் என்பதற்காகவே ஆத்திசூடி, கொன்றை வேந்தன், திருக்குறள் ஆகியவற்றை மையப்படுத்தி போட்டியை நடத்தினோம்,” என்று ஜூரோங் மேற்கு உயர்நிலைப் பள்ளியின் தமிழாசிரியர் கணேசுகுமார் பொன்னழகு குறிப்பிட்டார்.

தொடக்கநிலை 5 மற்றும் 6 பிரிவில், தொடக்கநிலை 5இல் பயிலும் மாணவர் ஜெயபிரகாசம் ஜோசித் முதற்பரிசை வென்றார்.

“முதல் பரிசு பெற்றதில் எனக்குப் பெருமகிழ்ச்சி. தமிழ்மொழியில் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் நமது பண்பாடும் விழாக்களும்தான். அவற்றை நினைத்து நான் பெருமைகொள்கிறேன்,” என்றார் ஜோசித். 

போட்டி குறித்துக் கருத்துரைத்த ஜோசித்தின் தாயார் திருவாட்டி குமார் கோகிலா, 39, “எந்தவித அச்சமுமின்றி, தமிழில் துணிந்து பேச இந்தப் போட்டி ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது,” என்றார்.

“இப்போட்டி மாணவர்களின் கதை சொல்லும் திறன், கற்பனைத்திறன் உள்ளிட்ட பல தனித்திறமைகளை வெளிப்படுத்துவதற்கு ஒரு நல்ல தளம் அமைத்துக்கொடுத்தது,” என்று சொன்னார் இன்னொரு மாணவரின் தந்தையான திரு தாமஸ், 47. 

குறிப்புச் சொற்கள்