காலை நேரத்தில் ஒரு மருந்தியல் நிறுவனத்தில் பயன்பாட்டுத் தொழில்நுட்பராக (utilities technician) வேலை செய்யும் திரு குணசீலன் தங்கவேலு, 57, மாலை நேரங்களில் டேக்வாண்டோ பயிற்றுவிப்பாளராக மாறிவிடுகிறார் .
“‘Rocky’ என்ற ஒரு குத்துச்சண்டை பற்றிய ஆங்கில திரைப்படம் என்னை வெகுவாக பாதித்தது. நானும் அதுபோன்று ஒரு தற்காப்புக் கலையை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை எனக்குள் அப்படம் ஏற்படுத்தியது,” என்று திரு குணசீலன் கூறினார்.
அத்திரைப்படம் தாம் 1982ஆம் ஆண்டில் டேக்வாண்டோ தற்காப்புக் கலையை கற்றுக்கொள்வதற்கு ஊக்கமாக இருந்தது என்றார் அவர்.
1998ஆம் ஆண்டு தமது 30 வயதில் டேக்வாண்டோ பயிற்று[Ϟ]விக்கும் பயணத்தை ஹுவா சொங் தொடக்கக் கல்லூரியில் தொடங்கிய திரு குணசீலன், கடந்த 27 ஆண்டுகளாக அங்கு மாணவர்களுக்கு அதனைக் கற்றுக்கொடுக்கிறார்.
ஹுவா சொங் தொடக்கக் கல்லூரியைத் தவிர்த்து, 1998ல் ஜூரோங் மேற்கில் உள்ள நன்யாங் சமூக மன்றம் போன்ற சமூக மன்றங்களிலும் அவர் டேக்வாண்டோ கற்றுக் கொடுக்கத் தொடங்கினார்.
அவர் பயிற்றுவிக்கும் ஹுவா சொங் தொடக்கக் கல்லூரி, கடந்த 7 ஆண்டுகளாக தொடர்ந்து தேசிய பள்ளி விளையாட்டுகளில் ஆண்கள் பிரிவிலும் பெண்கள் பிரிவிலும் முதலாவதாக வந்துள்ளது.
எதிர்நோக்கிய சவால்கள்
“நேர நிர்வாகம் மிகப் பெரிய சவாலாக இருந்தது. எனது முழு நேர வேலையையும் இந்த டேக்வாண்டோ கற்பிப்பதையும் வைத்துக்கொண்டு, எனது குடும்பத்துடன் நேரம் செலவிடுவதற்கு சிரமப்பட்டேன்,” என்று சொன்னார் திரு குணசீலன்.
அவர் டேக்வாண்டோவைப் பகுதி நேர வேலையாகக் கருதாமல், முழு மனத்துடன் மிகவும் விரும்பிச் செய்யும் பணியாகக் கருதுகிறார்.
தொடர்புடைய செய்திகள்
டேக்வாண்டோ பயிற்றுவிப்பாளராகத் தான் நிறைய தியாகங்களைச் செய்துள்ளதாகவும் அவர் சொன்னார்.
மாணவர்களால் ஊக்கம்
“ஆசிரியர் தினத்தன்று மாணவர்கள் தங்களது ஆசிரியர்களுக்குக் கடிதங்களும் பரிசுகளும் வழங்குவதுபோல, என் மாணவர்களிடமிருந்து வரும் கடிதங்களை நான் பொக்கிஷமாகக் கருதுகிறேன்,” என்கிறார் திரு குணசீலன்.
மேலும், அக்கடிதங்கள்தான் தொடர்ந்து மாணவர்களுக்கு இன்னும் சிறப்பாகப் பயிற்சி அளிக்க ஊக்கமளிப்பதாக இருக்கிறது என்றும் இவர் சொன்னார்.
முன்னாள் தேசிய டேக்வாண்டோ பயிற்றுவிப்பாளராக இருந்த திரு ஜி. ராஜேந்திரன் தமக்கு ஒரு மிகப் பெரிய முன்மாதிரி என்று திரு குணசீலன் குறிப்பிட்டார்.
“மாணவர்களுக்கு எப்படிப் பயிற்சியளிக்க வேண்டும் என்று அவர் எனக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கினார். பயிற்றுவிப்பாளர் பணியை நான் தொடர்வதற்கு அவர் ஒரு முதன்மையான காரணம்,” என்றார் இந்த ஆசான்.
‘என்றைக்கும் எதையும் அரைக்கிணறு தாண்டியதும் விட்டுவிடக்கூடாது. நீ தொடங்கியதைப் பாதியிலேயே கைவிடா[Ϟ]மல் இறுதிவரை சென்று அதனை முடிக்க வேண்டும்’ என்ற தம் தந்தையின் அறிவுரையை மனத்தில் பதித்துள்ள இவர், அதுவே தான் தொடர்ந்து டேக்வாண்டோ கலையைக் கற்பிப்பதற்கான காரணம் என்றும் சொன்னார்.