சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் புதிய தலைவராக, முன்னாள் துணைத் தலைவர் சு. முத்துமாணிக்கம் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 29) காலை சிண்டா உள்ளரங்கத்தில் நடைபெற்ற 24வது பொதுக்கூட்டத்தில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
49 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் கழகத்தின் தற்போதைய உறுப்பினர்கள் 123 பேரில் 50 பேர் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் வரவேற்புரை ஆற்றிய செயலாளர் பிரேமா மகாலிங்கம், 2023ஆம் ஆண்டிலிருந்து கழகம் சிங்கப்பூரில் இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ்மொழி வளர்ச்சிக்கும் பங்காற்றியுள்ள விவரங்களைப் பகிர்ந்துகொண்டார்.
அதனைத் தொடர்ந்து பேசிய தலைவர் நா.ஆண்டியப்பன், தாம் கழகத்தில் சேர்ந்த சூழ்நிலையையும் பின்னர் 1995ல் செயலாளராகி 2005ல் போட்டியின்றித் தலைவர் பொறுப்பேற்றதையும் நினைவுகூர்ந்தார்.
தேசியக் கலை மன்றத்தின் ஆதரவுடன் சிங்கப்பூர்ப் படைப்புகளை மீண்டும் சென்னைப் புத்தகக் காட்சிக்குக் கொண்டுசென்றதையும், எஸ்.ஜி.60 தமிழ்ப் புத்தகத் திருவிழாவுக்குப் பேரளவில் நிதியாதரவு வழங்கியதையும் அவர் சுட்டினார்.
கூட்டத்திற்கு வந்திருந்த உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவுடன் செயலாளர் அறிக்கை, 2023-2025 ஆண்டுகளுக்கான கணக்கு, நன்றி, இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்த பின்னர், தற்காலிகத் தலைவராகச் செயல்பட்ட முனைவர் அ.வீரமணி புதிய செயலவை போட்டியின்றித் தேர்வுபெறுவதாக அறிவித்தார்.
48 ஆண்டுகளுக்கும் மேலாகக் கழகத்தின் வளர்ச்சிக்கு ஆணிவேராகவும் உந்து சக்தியாகவும் திகழ்ந்த திரு. நா.ஆண்டியப்பன் புதிதாக நியமிக்கப்பட்ட முன்னாள் அண்மைத் தலைவர் (Immediate Past President) என்ற பொறுப்பை ஏற்று புதிய செயலவைக்கு வழிகாட்டவுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
புதிய துணைத் தலைவராகத் திரு இரா.அன்புச்செல்வனும் உதவித் தலைவர்களாகத் திருவாட்டி மலையரசி சீனிவாசன், திரு. கோ.இளங்கோவன் ஆகியோரும் பொறுப்பேற்றுள்ளனர்.
திருவாட்டி பிரேமா மகாலிங்கம் செயலாளராகவும், திருவாட்டி மணிமாலா மதியழகன் பொருளாளராகவும் நீடிக்கின்றனர்.
கழகத்தின் துணைச் செயலாளராகத் திரு. பாலசுப்ரமணியன் ரமேஷும் உதவிப் பொருளாளராகத் திரு. ந.சரவணனும் நியமிக்கப்பட்டுள்ளனர். செயலவை உறுப்பினர்களாகத் திருவாட்டி பிரதீபா வீரபாண்டியன், திருவாட்டி ஷோபா குமரேசன் இருவரும் நீடிக்கின்றனர். திரு. சரவணபவன் ஆதவன், திருவாட்டி எழிலி கருணாகரன், திருவாட்டி அனுராதா, திரு. சிவக்குமார் ஆகியோர் புதிதாகச் செயலவையில் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். இளையர் பிரிவுத் தலைவராகச் செல்வி கிருஷ்மிதா ஷிவ்ராம் தொடர்கிறார்.
1993ஆம் ஆண்டு சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தில் தனது பயணத்தைத் தொடங்கி, கழகத்தில் பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்து, சிங்கப்பூரில் முதல் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு, சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்களை உலகறியச் செய்ய நான்காண்டுகள் சென்னையில் கலந்துகொண்ட புத்தகக் கண்காட்சி, சிங்கப்பூரின் முதல் பிரதமர் அமரர் லீ குவான் இயூவின் 90வது பிறந்த நாளைக் கொண்டாட தமிழிலும் ஆங்கிலத்திலும் படைத்த கவிதைத் தொகுப்பு, நூற்றாண்டு விழாவில் அவரது 100 கருத்துரைகள் அடங்கிய கையேடு, முதன் முதலாக இந்தியா, மலேசியா, சிங்கப்பூர்த் தமிழ்ப் பதிப்பாளர்கள், புத்தகக்கடை உரிமையாளர்களுடன் இணைந்து நடத்திய எஸ்ஜி60 புத்தகத் திருவிழாவோடு மேலும் பல விழாக்களையும் நிகழ்ச்சிகளையும் சிறப்பாக ஏற்பாடு செய்த தலைவர் நா.ஆண்டியப்பனுக்கு நன்றி கூறும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கவிஞர் கோ.இளங்கோவன் எழுதிய பாராட்டுக் கவிதை வாசிக்கப்பட்டு, திரு ஆண்டியப்பனுக்குச் சிறப்பு செய்யப்பட்டது.
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் சு.முத்துமாணிக்கம், முந்தைய தலைவரின் தலைமையில் கழகம் அடைந்துள்ள முன்னேற்றத்தில் தானும் ஓர் அங்கம் வகித்ததில் பெருமைகொள்வதாக உணர்வுபூர்வமாகக் குறிப்பிட்டார். மேலும், அடுத்த ஆண்டு பொன்விழா காணவிருக்கும் கழகத்தின் செயல்பாடுகளில் கைகொடுக்குமாறு உறுப்பினர்களிடம் கேட்டுக்கொண்டார்.
எழுத்தாளர் கழகத்தைச் சிறப்பான உயரத்திற்குக் கொண்டு சென்றுள்ள திரு நா.ஆண்டியப்பன் அவர்களின் வழிகாட்டுதலுடன் அவரிடம் கற்றுக்கொண்ட அனுபவங்களோடு புதிய தலைவருடன் இணைந்து செயலாற்றுவோம் என்று நன்றியுரையில் செயலாளர் பிரேமா மகாலிங்கம் தெரிவித்தார்.