அறிவியலில் ஆர்வத்தைத் தூண்டும் ‘ஸ்டெம்’ விழா

2 mins read
89eff3fb-e195-46e3-85a0-d2c455289f49
‘ஸ்டெம்’ விழா சிங்கப்பூர் அறிவியல் நிலையத்தில் மூன்று நாள்களுக்கு நடைபெறும். - படம்: சிங்கப்பூர் அறிவியல் நிலையம்

சிங்கப்பூரின் 60ஆம் பிறந்தநாளை முன்னிட்டு, கண்டுபிடிப்பும் உற்சாகமும் நிறைந்த ‘ஸ்டெம்’ விழாவில் குடும்பங்கள் கலந்துகொள்ளலாம்.

‘ஸ்டெம்’ (STEM) எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய துறைகளைச் சார்ந்து, சிங்கப்பூர் அறிவியல் நிலையத்தில் இவ்விழா மூன்று நாள்களுக்கு நடைபெறும்.

ஆகஸ்ட் 9ஆம் தேதியிலிருந்து 11ஆம் தேதி வரை, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை குறைந்த கட்டணத்தில் நுழைவுச்சீட்டுகளை பெறுவதோடு, சிறப்பு நிகழ்ச்சிகள், துடிப்புமிக்க நடவடிக்கைகள், விளையாட்டுகள் ஆகியவற்றிலும் வருகையாளர்கள் பங்கேற்கலாம்.

இவ்விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வார்.

சுற்றுலாத் தலங்களுக்குச் சிறப்பு அனுமதி

இம்மூன்று நாள்களிலும் சிங்கப்பூரர்களும் சிங்கப்பூர் நிரந்தரவாசிகளும் அறிவியல் நிலையத்திற்குச் செல்ல கட்டணமில்லை.

அத்துடன், சிங்கப்பூர் அறிவியல் நிலையத்தின் கிட்ஸ்டாப் (KidsSTOP), எஸ்கேப்@சிங்கப்பூர் அறிவியல் நிலையம் ஆகிய இடங்களுக்கு 50 விழுக்காட்டுத் தள்ளுபடியையும் வருகையாளர்கள் பெறலாம்.

மேலும், ‘ஸ்னோ சிட்டி’ இரு பெரியவர்களுக்கும் இரு சிறுவர்களுக்கும் ஒரு மணி நேர விளையாட்டை 60 வெள்ளி கட்டணத்தில் வழங்குகிறது.

துடிப்புமிக்க விளையாட்டுகளும் நடவடிக்கைகளும்

சிங்கப்பூரின் பல்வேறு வட்டாரங்களை எடுத்துக்காட்டும் விதமாக அறிவியல் நிலையத்தின் மண்டபம் 2, 3இல் உற்சாகமிக்க ஒரு கொண்டாட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலவச சிற்றுண்டிகள், கைவினைச் சாவடிகள், உணவுக் கடைகள், ‘ஸ்டெம்’ துறைகளைச் சார்ந்த நடவடிக்கைகள் எனப் பல சாவடிகள் மண்டபத்தில் அமைக்கப்படவுள்ளன.

சிலிர்ப்பூட்டும் அறிவியல் நிகழ்ச்சிகள்

காலை 10.30 மணிக்கும் மாலை 4.30 மணிக்கும் மண்டபம் 1இல் இரண்டு அறிவியல் நிகழ்ச்சிகளை வருகையாளர்கள் கண்டுமகிழலாம்.

தீச்சூறாவளிகள், ஹைட்ரஜன் பலூன் வெடிப்புகள், திரவ நைட்ரஜன் மேகங்கள் எனப் பிரமிக்கத்தக்க கூறுகளோடு 15 நிமிடங்களுக்கு ஒரு பிரம்மாண்ட அறிவியல் நிகழ்ச்சி நடைபெறும்.

மலும், ‘தி எலெக்ட்ரிஃபைட்’ (The Electrified) என்ற சிங்கப்பூர் அறிவியல் நிலையத்தின் விருதுபெற்ற நாடகத்தின் கண்ணோட்டமும் ஒரு விழாவாகப் படைக்கப்படும்.

இளைய ஆர்வலர்களின் அறிவியல் பயணம்

சிறுவர்கள் விஞ்ஞானிகளாக உருமாற மேற்கு நுழைவிற்குச் சென்று, ஆராய்ச்சியில் ஈடுபடலாம்.

நுண்ணோக்கிகளின் மூலம் மரபணுக்களைக் கண்டறிதல், பூச்சிகளின் வாழ்க்கைச் சுழற்சியைப் புரிந்துகொள்ளுதல் என வியப்பூட்டும் பல தகவல்களைச் சிறுவர்கள் தெரிந்துகொள்ளலாம்.

டிசம்பர் 31ஆம் தேதி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடவடிக்கைகளுள் இரண்டை முடிக்கும் சிறுவர்கள் எஸ்ஜி60 இளைய விஞ்ஞானி பதக்கத்தையும் பெறலாம்.

அறிவியல் விளக்கங்களைத் தாண்டி, பல கண்காட்சிகளின் மூலம் சிங்கப்பூரின் மரபையும் சமூகப் பங்களிப்பின் வலிமையையும் வருகையாளர்கள் உணரலாம்.

அறிவியல், ஆர்வம், வியப்பு நிறைந்த கொண்டாட்டமாக எஸ்ஜி60 வார இறுதிகள் விளங்கும் என்று அறிவியல் நிலையம் உறுதியளிக்கிறது.

குறிப்புச் சொற்கள்