சிங்கப்பூர் தேசிய கலைக்கூடத்தின் முதல் இருமொழி நாடகம்

1 mins read
aaf21392-fca2-46db-bf4a-ef39c56c05cf
‘புல் வெட்டுதல்’, ‘காடுகளைச் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபடும் இந்திய ஊழியர்கள்’ உள்ளிட்ட ஓவியங்களின் கதாபாத்திரங்கள் பங்குபெறும் நாடகக் காட்சியின் ஒத்திகை. - படம்: சிங்கப்பூர் தேசிய கலைக்கூடம்

சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகத்தின் அனுபவத்தையும் கலை ஆர்வத்தையும் சித்திரிக்கும் எட்டு ஓவியங்களை மையமாகக் கொண்ட ‘விடுதலை’ எனும் இருமொழி நாடகம் அரங்கேறவுள்ளது.

சிங்கப்பூர் தேசிய கலைக்கூடம் சார்பில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளில் இடம்பெறும் முதல் நாடகம் இது.

நவம்பர் 22, 23 ஆகிய தேதிகளில் முற்பகல் 11.30 மணிக்கும் பிற்பகல் 3 மணிக்கும் அந்நாடகம் மேடையேறும். தமிழில் நடைபெறும் இந்நாடகத்தினை அனைவரும் கண்டு ரசிக்கும் வண்ணம் ஆங்கில வசனவரிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

‘சிங்கப்பூர்க் கதைகள்’ எனும் கருப்பொருளில் தமிழ்ச் சமூகத்தின் கலை, பண்பாட்டு ஈடுபாட்டை எடுத்துரைக்கும் கதைகளைச் சொல்லும் எட்டு ஓவியங்களும் அவற்றின் பின்னணியும் ஒரு நிரந்தர கண்காட்சியாகச் சிங்கப்பூர் தேசிய கலைக்கூடத்தில் இடம்பெற்றுள்ளது. இக்கண்காட்சி, சமூகம் குறித்த கருத்துகளை அழகியலுடன் வெளிப்படுத்துகின்றது.

இதன் நீட்சியாக, ஒவ்வோர் ஓவியத்திலும் வரும் கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டி, அதனை ஒரு மணி நேர நாடகமாகப் படைக்கவுள்ளனர். ‘புல் வெட்டுதல்’, ‘காடுகளைச் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபடும் இந்திய ஊழியர்கள்’ உள்ளிட்ட ஓவியங்களின் கதாபாத்திரங்கள் மேடையில் தோன்றி, அக்கால வாழ்வியல் முறைகள், மொழிப் பயன்பாடு உள்ளிட்ட கூறுகளைச் சித்திரிக்கும் நாடகத்தைப் படைக்கவுள்ளனர்.

எழுத்தாளரும் இயக்குநருமான கிரேஸ் கலைச்செல்வியின் ஒருங்கிணைப்பில் ஆறு கலைஞர்கள் இணைந்து இதனை அரங்கேற்றவுள்ளனர்.

இந்நாடகத்துக்கு அனுமதி இலவசம். ஆயினும், முன்பதிவின்றிச் செல்ல முடியாது. முன்பதிவு செய்வதற்கு இந்த இணையத்தளத்தை நாடலாம். https://www.nationalgallery.sg/sg/en/workshops/Liberation.html

குறிப்புச் சொற்கள்