சிங்கப்பூரின் முஸ்லிம் சமூகம் தன் சுய மதிப்பையோ பண்பாட்டையோ இழக்காமல் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளதாக முன்னாள் அதிபர் ஹலிமா யாக்கோப் தெரிவித்துள்ளார்.
“சிங்கப்பூர் மலாய்-முஸ்லிம் சமூகம் தன்னம்பிக்கை கொண்டதாகவும், துடிப்புள்ளதாகவும், மற்றும் பரந்த சமூகத்தில் அதிக ஈடுபாடு கொண்டுள்ளதாகவும் மாறியிருக்கிறது. பல சமயத்தவருக்கு இடையேயான உறவுகளை வலுப்படுத்துவது, சமூக அமைதிக்கும் மனிதாபிமான திட்டங்களுக்குப் பங்களிப்பது உள்பட, இச்சமூகம் பல வழிகளில் பங்களிக்கிறது,” என்று அவர் கூறினார்.
தேசிய நூலக வாரியத்தில் அக்டோபர் 16 நடைபெற்ற ‘அஸ்சென்ட் டுவர்ட்ஸ் பின்னக்கல்’ (Ascent Towards Pinnacle) என்ற தலைப்பிலான புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய திருமதி ஹலிமா, உலகெங்கிலும் உள்ள முஸ்லிம் சிறுபான்மையினருக்கு முன்மாதிரியாக சிங்கப்பூரின் முஸ்லிம் சமூகம் திகழ்வதாகப் பாராட்டினார்.
ஆர்எஸ்ஐஎஸ் (RSIS)-இல் இணை மூத்த உறுப்பினராகவும், அல்ஜீரிய மக்கள் ஜனநாயகக் குடியரசுக்கான சிங்கப்பூரின் வெளிநாடு வாழ் தூதராகவும் இருக்கும் முகமது அலாமி மூசா எழுதிய இப்புத்தகம், 55 ஆண்டுகளுக்கும் மேலான தனிப்பட்ட செயல்பாட்டையும் தொகுப்பையும் அடிப்படையாகக் கொண்டது.
தற்போது சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தின் வேந்தராக (Chancellor) இருக்கும் திருமதி ஹலிமா, சிறுபான்மை முஸ்லிம் சமூகம் எப்படி பொருளாதார, அரசியல் மற்றும் சமூக நடவடிக்கைகளில் முழுமையாகப் பங்கேற்று மதச்சார்பற்ற நாட்டில் வெற்றிகரமாக எவ்வாறு வாழ்கிறது என்பதை விளக்குவதாகக் குறிப்பிட்டார்.
அதே சமயம் இங்குள்ள முஸ்லிம்கள், இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளில் சமரசம் செய்துகொள்ளவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
“ஒரு நல்ல முஸ்லிமாகவும் ஒரு நல்ல குடிமகனாகவும் இருப்பதற்கு இடையில் எந்த முரண்பாடும் இல்லை,” என்றார் முன்னாள் அதிபர்.
சிங்கப்பூரின் சவாலான சுதந்திரத்திற்குப் பிந்தைய வரலாற்றை நினைவு கூர்ந்த திருமதி ஹலிமா, மலேசியாவிலிருந்து பிரிந்த ஆரம்ப ஆண்டுகளை “நிச்சயமற்ற தன்மையும் பதற்றமும் நிறைந்தது என்று கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
ஒற்றுமை, கடின உழைப்பு, ஒத்துழைப்பு ஆகியவற்றால் முஸ்லிம் சமூகம் சவால்களிலிருந்து மீண்டு வந்ததாகத் திருமதி ஹலிமா கூறினார்.
ஜென் ஸி தலைமுறையையும் தமது உரையில் குறிப்பிட்டுப் பாராட்டி திருவாட்டி ஹலிமா, நற்பண்புகளை வலியுறுத்தும் அவர்களது போக்கையும் சுட்டினார்.
புத்தகத்தை எழுதிய 69 வயது திரு. அலாமி, தமது புத்தகத்தை முடிக்க சுமார் ஒன்றரை ஆண்டுகள் ஆனது என்றார்.
அவர் சமூகத்தின் 55 ஆண்டு காலப் பயணத்தை ஐந்து தனித்துவமான காலக்கட்டங்களாகப் பிரித்து, தனது எழுத்தை ஏழு அத்தியாயங்களாக அமைத்துள்ளார்.
இஸ்லாமியச் சட்ட நிர்வாகச் சட்டம் வரைவு செய்யப்பட்டது, சிங்கப்பூர் இஸ்லாமியச் சமய மன்றம் 1968 இல் நிறுவப்பட்டது ஆகிய நிகழ்வுகளின்போது நிலவிய சவால்களையும் கொந்தளிப்புகளையும் பற்றி திரு அலாமி புத்தகத்தில் குறிப்பிடுவதாகக் கூறினார்.
குறிப்பாக, 1970ல்,போதைப்பொருள் புழங்கியோரில் கணிசமானோர் மலாய் சமூகத்தினரைச் சேர்ந்தவர்கள் என்ற நிலை, சமூகத் தலைவர்களைக் கவலையில் ஆழ்த்தியதையும் அவர் சுட்டினார்.
“மலாய் முஸ்லிம் சமூகத்தின் தற்போதைய முன்னேற்றம் சிங்கப்பூரின் வெற்றிக் கதையின் ஒரு பகுதி. இனம், சமயம் பாராமல் சிங்கப்பூரர்கள் அனைவரும் இதனை நினைத்துப் பெருமைப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.

