ஹுவி இயோ இந்தியர் நற்பணிச் செயற்குழு, சிலேத்தார் சிராங்கூன் தொகுதி வரைபடத்தை நீரில் எரியும் எல்இடி அகல் விளக்குகளால் அலங்கரித்தது சிங்கப்பூர்ச் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றது.
தீபாவளியையொட்டி, சிலேத்தார் சிராங்கூன் குடியிருப்பாளார்களை ஒன்றிணைத்த ‘தீபாவளிக் கொண்டாட்டம் 2025’ கலை, கலாசார நிகழ்ச்சி நவம்பர் 15ஆம் தேதி நடைபெற்றது. ஏறத்தாழ 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்நிகழ்ச்சி ரோசைத் பள்ளியில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், அங் மோ கியோ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், தகவல், மின்னிலக்க மேம்பாட்டு மற்றும் கல்வி ஆகியவற்றின் துணை அமைச்சர் ஜாஸ்மின் லாவ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
இந்த வகை கலாசார நிகழ்ச்சிகளில் பல்லினத்தவர் இணைந்து பங்கேற்பது கலை, உணவு வகைகள், கலந்துரையாடல் ஆகிய அனுபவங்கள்மூலம் புரிதலை அதிகப்படுத்துவதாக அவர் சொன்னார். குறிப்பாக, இளையர்களுக்கு மரபுசார் அம்சங்களைத் தெரிந்துகொள்வதற்கு வாய்ப்பாக அமைவதாகவும் அவர் தெரிவித்தார். அனைவரையும் ஒன்றாகக் கருதுவதற்கும், பல கலாசாரங்களைக் கொண்டாடுவதற்கும் அது அவசியம் என்றும் குறிப்பிட்டார்.
“இந்த சிங்கப்பூர்ச் சாதனை புத்தகத்தில் இடம்பெறுவதற்கான முன்னெடுப்பு, தொகுதியின் அடையாளத்தையும், வட்டாரத்தின் பெருமையையும் கொண்டாடும் விதத்தில் அமைந்துள்ளது,” என்றார் துணை அமைச்சர் லாவ்.
“தற்போது புதிதாக ஏற்பட்டுள்ள சிலேத்தார் சிராங்கூன் பிரிவைக் கொண்டாட மாறுபட்ட விதத்தில் ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தோம். அதன் விளைவாக இந்தச் சாதனை முன்னெடுப்பு நடைபெற்றது,” என்றார் இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக் குழுவின் இணைத் தலைவரான அனுபிரியா பன்னீர்செல்வன், 39.
இந்த விளக்குகளில் பல்லின சமத்துவத்தைக் குறிக்கும் நோக்கில் இளஞ்சிவப்பு, நீலம், சிவப்பு, மஞ்சள் ஆகிய நான்கு நிறங்களில் தீபங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“குழுவின் இளையர்கள் இந்தப் புதுவித யோசனையை முன்வைத்தனர். 10 பேர் கொண்ட குழுவின் உழைப்பால் இது சாத்தியமானது. இது பெருமையானது,” என்றார் ஹுவி இயோ இந்தியர் நற்பணிச் செயற்குழுவின் தலைவரும், நற்பணிப் பேரவையின் தலைவருமான ரவீந்திரன் கணேசன்.
தொடர்புடைய செய்திகள்
ஹுவி இயோ இந்தியர் நற்பணிச் செயற்குழுவில் 15 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொண்டூழியம் செய்து வருபவர், மனிதவள நிறுவனம் ஒன்றை நடத்திவரும் நிஷா கட்டபொம்மன், 40. “முதன்முறையாக இவ்வகை முன்னெடுப்பைக் கையிலெடுத்தோம். ஒரு மாத காலமாகத் திட்டமிட்டோம். 500 அகல் விளக்குகளைக் கொண்ட இந்த அலங்காரத்தை இளையர்களின் ஈடுபாட்டினால், ஒரே மணிநேரத்தில் செய்து முடித்தோம். இதில் பங்காற்றியதில் மகிழ்ச்சி,” என்றார் நிஷா.

