$70,000 திரட்டிய தேசிய இயக்கம்

2 mins read
d44e5a19-e923-45f7-8196-bf3c89963d29
இவ்வாண்டின் ‘இன்கம் ஈக்கோ ரன்’ நெட்டோட்டத்தின் தொடக்கத்தில் பங்கேற்பாளர்கள். - படம்: இன்கம் இன்ஷூரன்ஸ்

ஏறத்தாழ 5,500 பங்கேற்பாளர்கள் ஒன்றிணைந்து நீடித்த நிலைத்தன்மையுடைய வாழ்க்கைமுறைக்காகவும் கழிவுகளற்ற சூழலுக்காகவும் முழங்கி 70,000 வெள்ளியைத் திரட்டியுள்ளனர்.

பெருமழை பெய்தபோதும் ஜூன் 8ஆம் தேதியன்று இளையர்கள் முதல் முதியவர்கள்வரை அனைத்துத் தரப்பு மக்களும் இன்கம் ஈக்கோ ரன் (Income Eco Run) நெட்டோட்டத்தில் பங்கேற்கத் திரண்டனர்.

இன்கம் இன்ஷூரன்ஸ் நிறுவனம் தனது 55வது ஆண்டுநிறைவை முன்னிட்டு, சுற்றுப்புறப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நெட்டோட்டத்திற்கு ஏற்பாடு செய்தது.

3 கி.மீ., 5 கி.மீ., 10 கி.மீ., 15 கி.மீ., 21.1 கி.மீ. பிரிவுகள், குழந்தைகளுக்கான பிரிவு ஆகியவற்றோடு இவ்வாண்டு புதிதாகச் செல்லப்பிராணிகளுக்கான பிரிவும் அறிமுகப்படுத்தப்பட்டது.

இப்பிரிவுகளில் ஓடிய 5,500 பங்கேற்பாளர்களைத் தவிர்த்து, சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டாளர்கள் 20 பேரும் 5 கி.மீ., 10 கி.மீ., 15 கி.மீ. பிரிவுகளில் பங்கேற்றனர்.

செல்லப் பிராணிகளுக்கான பிரிவின் தொடக்கத்தில் பங்கேற்பாளர்கள்.
செல்லப் பிராணிகளுக்கான பிரிவின் தொடக்கத்தில் பங்கேற்பாளர்கள். - படம்: இன்கம் இன்ஷுரன்ஸ்
தங்கள் பூனைகளோடு நெட்டோட்டத்தில் கலந்துகொண்ட பங்கேற்பாளர்கள்.
தங்கள் பூனைகளோடு நெட்டோட்டத்தில் கலந்துகொண்ட பங்கேற்பாளர்கள். - படம்: இன்கம் இன்‌ஷுரன்ஸ்.

ஒரு கிலோமீட்டர் செல்லப்பிராணிகளுக்கான பிரிவும் 100 செல்லப்பிராணிகள் பங்கேற்க நல்ல வரவேற்பைப் பெற்றது.

‘கழிவுகளற்ற சூழலுக்காக எவ்வளவு தொலைவு செல்வீர்கள்?’ என்ற கேள்வியை மையப்படுத்தி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஓட்ட நிகழ்ச்சியில் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ஒரு வெள்ளியை அளித்தது இன்கம் இன்ஷூரன்ஸ் நிறுவனம்.

அதன்மூலம் திரட்டப்பட்ட நிதி, இதுவரை இல்லாத அளவில் 70,000 வெள்ளியை எட்டியுள்ளது.

திரட்டப்பட்ட நிதி ஒற்றைப் பயன்பாட்டு உணவுப் பொட்டலங்களைக் குறைப்பது தொடர்பான ‘சிங்கப்பூர் இயற்கைக்கான உலகளாவிய நிதி’யின் முன்னோடித் திட்டத்திற்கு வழங்கப்படும்.

ஒவ்வொருநாளும் குப்பை நிரப்பும் நிலங்களுக்கு அனுப்பப்படும் கழிவுகளை 30% குறைக்க வேண்டும் என்ற ‘சிங்கப்பூர்ப் பசுமைத் திட்டம் 2030’இன் இலக்கை எட்டுவதற்கு இந்நிதி உதவும்.

நாடாளுமன்ற நாயகர் சியா கியன் பெங் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, 5 கி.மீ., 10 கி.மீ. பிரிவுகளுக்கான ஓட்டத்தைத் தொடங்கி வைத்ததோடு, தாமும் 5 கி.மீ. பிரிவில் கலந்துகொண்டார்.

“இரண்டாவது முறையாக இந்த ஓட்ட நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறேன். கழிவுப்பொருள் நிர்வாகம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மறுபயனீட்டை ஊக்குவிக்கவும் இன்கம் இன்ஷூரன்ஸ் நிறுவனம் எல்லைகளைத் தாண்டிச் செயல்படுவது உற்சாகம் தருகிறது,” என்றார் திரு பெங்.

பங்கேற்பாளர்கள் தங்கள் சொந்த ஆடைகளை அணிந்து ஓட அனுமதிப்பது, முற்றிலும் நெகிழியில்லாக் கிண்ணங்களைப் பயன்படுத்துதல், பங்கேற்பாளர்களுக்கு ஆகச் சிறிய ஓட்ட மேலாடைகளை (running bibs) வழங்குதல் போன்ற வழிமுறைகளைப் பின்பற்றும் இன்கம் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் முயற்சிகளையும் அவர் பாராட்டினார்.

அத்துடன், அழைப்பாளர்களுக்கு மட்டும் ஜூன் 7ஆம் தேதி இரவு 11 மணிக்கு 55 கி.மீ. ஓட்டமும் நடைபெற்றது. இன்கம் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தொடங்கிவைத்த அவ்வோட்டத்தில் ஒன்பது பேர் பங்கேற்றனர்.

குறிப்புச் சொற்கள்