தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தீபாவளிக்காக ஊழியர்களின் குடும்பங்களுக்கு மருத்துவக் காப்பீடு வாங்குவதாக நிறுவனம் அறிவிப்பு

2 mins read
54dd540e-f27d-49a5-beee-ae73c6b0c0c4
ஹன்‌ஷிகா இஞ்சினியரிங் நிறுவனர்கள் ராஜபாண்டியன், மாலதி உடன் ஊழியர்கள் தீபாவளியைச் சிறப்பாக வரவேற்றனர். - படம்: ஹன்‌ஷிகா இஞ்சினியரிங்
multi-img1 of 2

தீபாவளி அன்பளிப்பாக, தம் நிறுவனத்தில் பணியாற்றும் 87 வெளிநாட்டு ஊழியர்களின் குடும்பங்களுக்கும் மருத்துவக் காப்பீடு வாங்கித் தரவுள்ளதாக சிங்கப்பூரில் இயங்கும் ஹன்‌ஷிகா இஞ்சினியரிங், கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர்கள் ராஜபாண்டியன், மாலதி அறிவித்துள்ளனர்.

“மருத்துவமனைக்குச் சென்றால் சில சமயம் லட்சக்கணக்கில் செலவாகக்கூடும். எங்களுக்காகப் பணியாற்றும் ஊழியர்களுக்கு, அவர்களது குடும்பமும் பார்த்துக்கொள்ளப்படுகிறார்கள் என்ற மன நிம்மதியை அளிக்க விரும்புகிறோம்.

“இதனால் எங்களுக்கு ஆண்டுக்குக் கிட்டத்தட்ட $10,000 செலவானாலும் பரவாயில்லை; எங்கள் நிறுவனத்தில் பணியாற்றும்வரை ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் அவர்களின் காப்பீட்டுக்கான கட்டணத்தைச் செலுத்துவோம்,” என்றார் திரு ராஜபாண்டியன்.

“இனி புதிதாகச் சேரும் ஊழியர்களின் குடும்பங்களுக்கும் நாங்கள் காப்பீடு வாங்கித் தருவோம்,” என அவர் கூறினார்.

அக்டோபர் 18ஆம் தேதி இரவு அந்நிறுவனம் நடத்திய தீபாவளிக் கொண்டாட்டத்தில் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு, ஊழியர்களுக்குத் தீபத் திருநாள் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியது.

ஹன்‌ஷிகா இஞ்சினியரிங் தொடங்கி இதுவே பத்தாம் ஆண்டு; அதனால் பத்து பரிசுகள் அதிர்‌ஷ்டக் குலுக்கலில் வழங்கப்பட்டன. முதல் மூன்று பரிசுகள் $800, $500, $400 வங்கிக் காசோலைகள் பரிசுகளாகவும், பின்பு ஐபேட், திறன்பேசிகள், சாம்சங் டேப், மிதிவண்டிகள் ஆகியவற்றையும் ஊழியர்கள் பெற்று மகிழ்ந்தனர்.

அதிர்‌ஷ்டக் குலுக்கலில் பரிசு வென்ற ஊழியர்.
அதிர்‌ஷ்டக் குலுக்கலில் பரிசு வென்ற ஊழியர். - படம்: ஹன்‌ஷிகா இஞ்சினியரிங்

ஊழியர்கள் அனைவர்க்கும் புத்தாடைகள், பரிசுகள், அதிர்‌ஷ்டக் குலுக்கல், ஆடல் பாடல் கொண்டாட்டங்கள், அறுசுவை இரவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

ஒவ்வொருவருக்கும் மின்விசிறி, அரிசி குக்கர், அல்லது புளூடூத் ஒலிப்பெருக்கி வழங்கப்பட்டது. அவற்றுடன் $100 பண உறையும் வழங்கப்பட்டது. அலுவலக ஊழியர்களுக்கும் தனியே தீபாவளி அன்பளிப்புப் பணம் வழங்கப்பட்டது.

ஆண்டுதோறும் ஹன்‌ஷிகா இஞ்சினியரிங், தீபாவளி சமயத்தில் தம் ஊழியர்களுக்குப் பலவிதமான அன்பளிப்புகளையும் அளித்துவருகிறது. முந்தைய ஆண்டுகளில் தங்கத்தையும் ஊழியர்களுக்குப் பரிசாக வழங்கியது.

“எங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்குக் காரணம் எங்கள் ஊழியர்கள்தான். அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது எங்களுக்கும் மட்டற்ற மகிழ்ச்சி. ஊழியர்கள் அனைவரையும் எங்கள் சக குடும்பமாக எண்ணிக் கொண்டாடுகிறோம்,” என்றார் திருவாட்டி மாலதி.

“ஊரில் எந்த அளவுக்கு நாங்கள் மகிழ்ச்சியாகக் கொண்டாடியிருப்போமோ அதே அளவு இங்கு மகிழ்ச்சியாகக் கொண்டாடினோம்,” என்றார் ஊழியர் ல‌‌க்‌ஷ்மணன்.

அதிர்‌ஷ்டக் குலுக்கலில் அறிவார்ந்த கடிகாரம் வென்ற ஊழியர் ரெக்ஸ், “நான் சிங்கப்பூர் வந்து மூன்று மாதங்கள்தான் ஆகின்றன. உடனே இத்தகைய கொண்டாட்டங்களில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி,” என்றார்.

“இவ்வாண்டு உறுமி மேள சத்தத்துடன் நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்றது. யாருக்கும் பாகுபாடின்றி எங்களுக்குப் பரிசளித்த நிறுவனத்துக்கு நன்றி,” என்றார் தினே‌ஷ் குமார்.

ஹன்‌ஷிகா இஞ்சினியரிங், கட்டுமான நிறுவனத்தின் பத்தாம் ஆண்டைக் கேக் வெட்டிக் கொண்டாடிய நிறுவனத்தினர்.
ஹன்‌ஷிகா இஞ்சினியரிங், கட்டுமான நிறுவனத்தின் பத்தாம் ஆண்டைக் கேக் வெட்டிக் கொண்டாடிய நிறுவனத்தினர். - படம்: ஹன்‌ஷிகா இஞ்சினியரிங்
குறிப்புச் சொற்கள்