தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உழைக்கும் கரங்களும் தீபம் ஏந்திக் கொண்டாடலாம்

3 mins read
46ed66c3-756e-4898-87e9-34f99c66ff6f
கரையோரப் பூந்தோட்டத்தில் உள்ள ‘ஃப்ளவர் டோமில்’ ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ‘சங்கம்’ தீபாவளிக் கொண்டாட்ட நிகழ்வில், வெளிநாட்டு ஊழியர்களுடன் ஓவியம் வரைதல் நடவடிக்கைகளில் பங்கேற்ற மனிதவள துணையமைச்சர் தினேஷ் வாசு தாஸ் (நடுவில்). - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தித்திக்கும் தீபாவளியை இனிதாக்குவது அறுசுவை உணவே.

பலரும் தீபாவளியன்று உற்றார் உறவினருடன் இணைந்து சுவையான விருந்தை உண்ணும்போது, தீபாவளியன்றும் அயராது உழைக்கின்றனர் உணவகங்களில் பணியாற்றும் சமையல் நிபுணர்கள்.

“தீபாவளியன்றுதான் எங்களுக்கு அமோகமான விற்பனை இருக்கும். கடந்த தீபாவளியன்று, அதிகபட்சம் 500 பேர் உண்ணும் கேட்டரிங்தான் வரும் என்று நினைத்தோம்.

“ஆனால் எதிர்பாராவிதமாக 4,500 பேர் உண்ணும் கேட்டரிங் வந்தது. முதலாளியும் வந்து ஆதரவளித்து வேலை செய்யும் மக்கள் அனைவரும் இரவு பகலாக உழைத்து அத்தனை பேருக்கும் நல்லபடியாகச் சமைத்துக் கொடுத்தோம்,” என்றார் சையது கஃபேயின் கிளைகளுக்குத் தலைமை சமையல் நிபுணராக உள்ள கு கண்ணன், 45.

தீபாவளிப் பலகாரங்களைச் சமைப்பதில் கைதேர்ந்தவர் A2B உணவகத்தின் சமையல் நிபுணர் சதீ‌ஷ்குமார், 36. அதிரசம், காஜு கட்லி, மைசூர் பாக் போன்றவற்றைத் தயாரித்து வாடிக்கையாளர்களை மகிழ்விக்கிறார் அவர்.

தீபாவளிக்கு மறுநாள் தமக்கு விடுமுறை கிடைக்கும் என்று திரு கண்ணன், திரு சதீ‌ஷ்குமார் இருவரும் கூறினர். “எங்கள் முதலாளி எங்களுக்குப் புத்தாடை வாங்கித் தந்து, அறுசுவை உணவு விருந்தும் போனஸ்சும் தருகிறார்,” என்றார் அவர்.

இந்தத் தீபாவளியன்று அவர்கள் இன்னும் புத்துணர்ச்சியுடன் சமைப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.

ஏனெனில், மனிதவள அமைச்சின் ‘ஏஸ்’ குழுவும், சிங்கப்பூரிலுள்ள இந்திய மேலாண்மைக் கழக முன்னாள் மாணவர் சங்கமும் இணைந்து கரையோரப் பூந்தோட்டத்தின் மண்டபத்தில் தீபாவளிக்கு முந்தைய தினம் (அக்டோபர் 19) 400க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்களுக்காகவும் இல்லப் பணிப்பெண்களுக்காகவும் தீபாவளிக் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்திருந்தன.

நிகழ்ச்சிக்கு வருகையளித்த மனிதவளத் துணையமைச்சர் தினே‌ஷ் வாசு தாஸ், “நீங்கள் அனைவரும் உங்கள் குடும்பங்களைவிட்டுப் பிரிந்து இங்கு இருக்கிறீர்கள். அது கடினம் என எனக்குத் தெரியும்,” என்றார்.

“வெளிநாட்டு ஊழியர்கள் இல்லாமல் நமக்கு இன்று இருப்பதைக் கட்டியமைத்திருக்க முடியாது. அதே சமயம், வெளிநாட்டு ஊழியர்களும் சிங்கப்பூர் இடங்களை நினைவில் கொள்ள வேண்டும். பெரிய குழுக்களில் செல்லாமலிருக்க முயற்சி செய்யுங்கள்,” என நினைவூட்டினார் அவர்.

தன் வாழ்வில் பெரும்பான்மை சிங்கப்பூரில்தான் வேலை செய்துள்ளார் வெளிநாட்டு ஊழியர் பழனி கெண்டர் கணேசன், 45.

தன் 20வது வயதில் சிங்கப்பூர் வந்தார் திரு கணேசன். எனினும், கரையோரப் பூந்தோட்டத்துக்கு வருவது அவருக்கு இதுவே முதன்முறை.

கடந்த 17 ஆண்டுகளாகப் பாரந்தூக்கி இயக்குபவராக அவர் பணியாற்றிவந்துள்ளார். “என் மகனுக்கு 15 வயது, அவரைக் கணினி அறிவியல் படிக்க வேண்டும். மகளுக்கு 12 வயது. அவள் வழக்கறிஞராகவேண்டும் என்பதே என் கனவு,” என்றார் அவர்.

20 வயதிலிருந்து சிங்கப்பூரில் இருந்துவந்துள்ள திரு பழனி கணேசன், துணையமைச்சர் தினே‌ஷின் முன்னிலையுல் தீபம் ஏற்றுகிறார்.
20 வயதிலிருந்து சிங்கப்பூரில் இருந்துவந்துள்ள திரு பழனி கணேசன், துணையமைச்சர் தினே‌ஷின் முன்னிலையுல் தீபம் ஏற்றுகிறார். - படம்: ரவி சிங்காரம்

இந்தியாவிலிருந்து வந்த இல்லப் பணிப்பெண் சண்முகம் கவிதா, 53, அதே சிங்கப்பூர்க் குடும்பத்துக்கு 2006 முதல் பணியாற்றிவந்துள்ளார். “தமிழ்நாட்டுக்கு அடுத்து எங்கள் தாய்நாடு சிங்கப்பூர். இங்கு நான் வந்து சம்பாதித்து மகனைப் படிக்கவைத்தேன்; இன்று அவர் நல்ல நிலைக்கு உயர்ந்துள்ளார்,” என்றார் அவர்.

லாப நோக்கற்ற அமைப்பான பிராம் சென்டரில் அவரும் அவர் தோழிகளும் ஆங்கில வகுப்புகள், யோகா வகுப்புகள் போன்றவற்றுக்குச் சென்று பயனடைகின்றனர். “லிட்டில் இந்தியாவிலும் இதுபோன்ற வகுப்புகள் நடத்தினால் எங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்,” என்றார் அவருடைய தோழி குமார் மலர், 52.

ஆகஸ்ட் மாதம் ஐஐஎம் முன்னாள் மாணவர் சங்கம் கிராஞ்சி பொழுதுபோக்கு நிலையத்தில் வெளிநாட்டு ஊழியர்களுக்காகக் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்திருந்தது. அடுத்து, நவம்பர் மாதமும் மற்றொரு நிகழ்ச்சியையும் அவர்களுக்காக அது ஏற்பாடு செய்யவுள்ளது.

தன் தோழிகளுடன் சண்முகம் கவிதா
தன் தோழிகளுடன் சண்முகம் கவிதா -
குறிப்புச் சொற்கள்