அடுத்த ஆண்டு இறுதியில் பயணச் சேவையைத் தொடங்கவுள்ள ஜோகூர் பாரு-சிங்கப்பூர் ‘ஆர்டிஎஸ் லிங்க்’ எனப்படும் விரைவு ரயில் சேவையின் முதல் ரயில் சிங்கப்பூரில் சோதிக்கப்பட்டுவருகிறது.
அந்த ரயில் திங்கட்கிழமை (ஜூன் 30) காலை செய்தியாளர்களுக்குக் காட்டப்பட்டது.
இந்த ரயிலால் ஒரு மணி நேரத்துக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல முடியும் என்பதால் சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் நார்த்துக்கும் ஜோகூர் பாருவின் புக்கிட் சாகாருக்கும் இடையிலான பயணம் ஐந்து நிமிடங்களே நீடிக்கும்.
இதனால் உட்லண்ட்ஸ் குடிநுழைவுச் சோதனைச் சாவடியில் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மார்ச் மாதம் துவாசில் புதிதாகத் தொடங்கப்பட்ட $800 மில்லியன் மதிப்பிலான சிங்கப்பூர் ரயில் சோதனை நிலையத்தில் ரயில் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்குத் தற்காலிகப் போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவும் மலேசியப் போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக்கும் சிறப்பு வருகையளித்தனர்.
“இத்திட்டம் என் மனதுக்கு நெருக்கமானது; ஏனெனில் அதன் உருவாக்கத்தின் தொடக்கக் கட்டத்தில் நான் பங்கேற்றேன். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு கையெழுத்தான ஒப்பந்தத்தின் பலனை இன்று காணும்போது மகிழ்கிறேன். இது இருதரப்பினரின் பல்லாண்டுகால உழைப்பின் பலன்.
“இந்த ரயில் சேவைக்கு ஏற்புடைய சேவைக் கட்டணம் என்ன என்பதை ஆர்டிஎஸ்ஓ நிறுவனம் முடிவு செய்யும். மலேசியாவுக்குச் சென்றுவரும் மற்ற பேருந்து சேவைகளைக் குறைக்க தற்போது எந்த திட்டத்தையும் நாம் வைத்திருக்கவில்லை. நாம் கூடுதல் போக்குவரத்து வாய்ப்புகளைத்தான் ஏற்படுத்த விரும்புகிறோம்,” என்றார் அமைச்சர் ஜெஃப்ரி சியாவ்.
தொடர்புடைய செய்திகள்
“நாம் இப்போது இத்திட்டத்தின் கடைசி 18 மாதங்களில் இருக்கிறோம். இன்று நாம் புதிய ரயிலை மட்டும் அறிமுகப்படுத்தவில்லை - அதிலிருக்கும் அம்சங்களையும்தான். இரு நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பு, பகிர்ந்த பார்வை, கலந்துரையாடல்களை இது காட்டுகிறது. மே 2018ல் மலேசிய அரசாங்கம் மாறியபோது இத்திட்டம் ஊசலாடியது. ஆனால், நாம் அப்போதைய போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வானுடன் கலந்துரையாடி புதிய செயல்முறைக்கு ஒப்புக்கொண்டோம். இரு அரசாங்கங்களின் புரிந்துணர்வால் இது பிறந்தது.
“வேலை, குடும்பத்துக்காக நாடுகளிடையே அன்றாடம் பயணம் செய்வோருக்கானது இத்திட்டம். மற்ற நாடுகள் வர்த்தகத் தடைகளை ஏற்படுத்திவரும் வேளையில் நம் இரு நாடுகளும் இணைந்து தடைகளைத் தகர்க்கிறோம்.” எனப் பாராட்டினார் மலேசியப் போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக்.
விரைவு ரயில் சேவை அதிகாலை 6 மணி முதல் நள்ளிரவுவரை செயல்படும் என்பதே தற்போதைய திட்டம். ஆனாலும், அது குறித்து தொடர்ந்து மறுபரிசீலனை செய்வோம் என்றார் திரு லோக்.
“ரயில் சேவை நேரங்கள், ஊழியர்களின் பணி நேரத்துக்கு ஏற்றாற்போல் அமைக்கப்படும். சில ஊழியர்கள் சிங்கப்பூருக்கு அதிகாலை 5 மணிக்குக்கூட வருகின்றனர் என நான் கேள்விப்படுகிறேன். அதை நாம் கருத்தில்கொள்வோம். 24 மணி நேர சேவை சாத்தியமன்று. பழுதுபார்ப்புக்குச் சிறிது நேரம் ஒதுக்க வேண்டும்,” என்றும் அவர் கூறினார்.
பல பயணிகளைக் கொள்ளக்கூடியது
76 மீட்டர் நீளமும் 2.7மீட்டர் அகலமும் உள்ள இந்த ரயில் சிங்கப்பூரை ஏப்ரல் மாதம் வந்தடைந்தது.
ஒவ்வொரு ரயிலிலும் நான்கு பெட்டிகள் இருக்கும். உச்ச நேரங்களில் ரயிலில் 1,000க்கும் மேற்பட்டோர் பயணம் செய்யலாம். ஒவ்வொரு ரயிலிலும் 126 சாதாரண இருக்கைகளும் 16 மடக்கு இருக்கைகளும் உள்ளன.
தொடக்கத்தில், எட்டு ரயில்களுடன் ஆர்டிஎஸ் சேவை தொடங்கும். ஒட்டுமொத்தமாக, ஆர்டிஎஸ் இணைப்பில் ஒரு திசையில் ஒரு மணி நேரத்துக்கு 10,000 பயணிகள் வரை பயணம் செய்யலாம்.
உச்ச நேரங்களில் கிட்டத்தட்ட மூன்றரை நிமிடங்களுக்கு ஒரு ரயிலும், மற்ற நேரங்களில் ஆறு நிமிடங்களுக்கு ஒரு ரயிலும் இயக்கப்படலாம்.
புத்தாக்க, நவீன அம்சங்களைக் கொண்ட ரயில்
செவித்திறன் குறைபாடுள்ளவர்கள் ரயிலிலுள்ள அறிவிப்புகளை இன்னும் தெளிவாகக் கேட்கும் வகையில் ‘ஹியரிங் இண்டக்ஷன் லூப்’ எனும் தொழில்நுட்பம் சிங்கப்பூர், மலேசியாவைப் பொறுத்தவரை முதன்முறையாக ரயிலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால், கேட்பொறி பொருத்தியுள்ளவர்கள் ரயிலில் எங்கிருந்தாலும் அறிவிப்புகளைக் கேட்கலாம்.
ரயில் தானியங்கியாக ஓட்டுநரின்றி செல்லும். ஆனால், ரயில் சேவை ஊழியர்கள் ஆங்காங்கே ரயிலைக் கண்காணிப்பார்கள்.
ரயிலில் கண்காணிப்புப் படக்கருவிகள் உள்ளன.
நெருக்கடி நேரத்தில் ரயிலிலிருந்து வெளியேற வேண்டுமெனில், ரயில் நின்றதும் ரயில் கதவுகள் வழியாகவே வெளியேறலாம். தண்டவாளத்தை ஒட்டியுள்ள அவசரகால நடைபாதை மூலம் அருகில் உள்ள நிலையத்துக்குச் செல்லலாம்.
அடுத்தகட்ட சோதனை
ஆர்டிஎஸ் சேவை தொடங்கும்போது எட்டு ரயில்கள் இயக்கப்படும். அவற்றைச் சீன நிறுவனம் ஒன்று உருவாக்கி வருகின்றது.
அடுத்த சில மாதங்களில், ஆர்டிஎஸ் இணைப்பின் முதல் ரயிலில் கட்டமைப்பு ஒருங்கிணைப்புப் பணிகள் சிங்கப்பூர் ரயில் சோதனை நிலையத்தில் நடைபெறும்.
இதன்வழி ஆர்டிஎஸ் இணைப்பு ரயில் தடங்களில் ரயிலைச் சோதனை செய்வதற்கு முன்பே ஏதேனும் சமிக்ஞை சார்ந்த பிரச்சினைகள் இருந்தால் கண்டறியப்படும்.
மேலும் நான்கு ரயில்கள், மலேசியாவின் பத்து காஜாவிலுள்ள ரயில் தயாரிப்பு நிலையத்திற்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. அங்கு அமைப்புப் பணிகள் முடிந்ததும், மேலும் சோதனைக்காக அவை ஜோகூர் பாருவில் உள்ள வாடி ஹானா பணிமனைக்கு மாற்றப்படும்.
ஆர்டிஎஸ் இணைப்பில் பயணத்தைச் சீராக்க, புக்கிட் சாகார், உட்லண்ட்ஸ் நார்த் ஆகிய இரு நிலையங்களிலும் சுங்கத்துறை, குடிநுழைவு, தடைக்காப்பு வசதிகள் இருக்கும். புறப்படும் நிலையத்தில் மட்டுமே பயணிகள் குடிநுழைவுச் சோதனையைத் தாண்ட வேண்டும்.
புதிய இணைப்புவழி இரு நாட்டு மக்களும் பொருளியல், சமூக ரீதியாகப் பயனடைவர்; ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலத்தின் வளார்ச்சியும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.