தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
சன்லவ் பராமரிப்பு இல்லத் தீபாவளிக் கொண்டாட்டம்

இளையர்களுக்குப் பொறுப்பளிப்பதால் தழைக்கும் அறப்பணி

2 mins read
2f7075e3-fd6a-4485-8316-f7bf53eb4fe9
சன்லவ் இல்லத்துத் தொண்டூழியர்கள், இல்லவாசிகள். - படம்: சன்லவ்

சமூக உணர்வைச் சுடராக ஏற்ற முற்படும் சன்லவ் பராமரிப்பு இல்லத்தின் தீபாவளிக் கொண்டாட்டத்தில் முதியோரும் தொண்டூழியர்களும் கலந்துகொண்டு மகிழ்ந்தனர்.

கிட்டத்தட்ட 120 இல்லவாசிகளுக்கு நடன, ஆடல் பாடல், சிலம்ப நிகழ்வுகள் படைக்கப்பட்டன. 90 தொண்டூழியர்களின் கரங்கள் இதற்காக ஒன்றிணைந்தன.

ஸ்பிரெடிங் ஸ்மைல்ஸ் தொண்டூழிய அமைப்பு, சாய் ஒன்னஸ் அமைப்பு ஆகியவற்றுடன் என்பிஎஸ் அனைத்துலகப் பள்ளி மாணவர்களும் இணைந்து கொண்டாட்டத்தில் பங்கேற்று மகிழ்ந்தனர். 

அங் மோ கியோ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் விக்டர் லாய், நிகழ்ச்சியைச் சிறப்பித்தார். 

சிங்கப்பூர் சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடுவதற்காக இந்தக் கொண்டாட்டம் கூடுதலான பிரம்மாண்டத்துடன் நடத்தப்பட்டதாக இல்லத்தின் தாதிமை நிர்வாகி இந்திரா தேவன் தெரிவித்தார்.

“மாணவர்களே  நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டுக் குழுவினராகச் செயல்பட்டனர். மற்றவர்கள் இளையர்களுக்கு ஆதரவு வழங்கினர்,” என்று அவர் கூறினார்.

இதுபோன்ற வாய்ப்புகள் வழி புதிய தலைவர்களை உருவாக்குவது திட்டத்தின் நோக்கம் என்று திருவாட்டி இந்திரா கூறினார். 

தொண்டூழியம் அடுத்த தலைமுறைக்கும் தழைக்கவேண்டும் என்பதற்காக உளவியல் ரீதியான பராமரிப்பை கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கி வரும் சன்லவ், தனது இல்லவாசிகளின் முழுமையான நலன்களுக்கு முன்னுரிமை தர முனைவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதன் மூலம் தலைமைத்துவப் பண்புகளையும் பொறுப்புணர்வு பற்றியும் கற்றுக்கொண்டதாக 17 வயது மாணவர் அரூஷ் நாயர் தெரிவித்தார். 

“தலைவர் என்ற முறையில் தெளிவாக தொடர்புகளைச் செய்வது, சக தொண்டூழியர்கள் மீது நம்பிக்கை வைப்பது ஆகியவற்றைக் கற்றேன். நேர நிர்வாகம், நெருக்கடியான காலகட்டங்களிலும் அமைதி காப்பது போன்ற பண்புகளையும் வளர்த்துக்கொண்டேன்,” என்று அவர் கூறினார்.

எல்லோரையும் மகிழ்வித்து புத்துணர்வு ஊட்டும் கொண்டாட்டங்கள் முதியோர்க்கும் உடல்நலம் குன்றியோர்க்கும் தேவைப்படுவதாக சன்லவ் இல்லத்தின் தலைமைத் திட்ட அதிகாரி கே. ராஜமோகன் தெரிவித்தார். 

“எனவே, பிறரை மகிழ்விக்க நினைப்பவர்கள், தொண்டூழியம் ஆற்ற விரும்புவோருடன் தொடர்புகொள்ள விரும்புபவர்கள், திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்த எண்ணுபவர்கள் போன்ற நல்ல நோக்கம் உடையவர்கள் எங்களைத் தாராளமாக அணுகலாம்,” என்று திரு மோகன் கூறினார்.

குறிப்புச் சொற்கள்