வடிவமைப்பில் புத்தாக்கத்தை அங்கீகரித்த டான் நோர்மன் விருது உச்சநிலை மாநாடு

3 mins read
50971469-c359-4513-b8ef-3ba87c148e1d
துணியை மறுசுழற்சி செய்யும் ‘காமனர்ஸ்’ (Commenhers), டான் நோர்மன் விருதைப் பெற்றது. படத்தில், விருதைப் பெற்றும் அதன் இணை நிறுவனர் நூர்யானி அனி‌‌‌ஷா. விருதை வழங்கினர் பேராசிரியர் டான் நோர்மன் (இடம்), விருது, மாநாட்டின் தலைமை நிர்வாகி ஸ்ரீனி ஸ்ரீநிவாசன். - படம்: சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி

மறுசுழற்சிசெய்த துணியாலான அறிமுக அட்டைகளை (Flexiyard) உருவாக்கியுள்ளார் சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி தகவல் தொழில்நுட்ப மாணவி மகேஸ்வரி, 18. இந்த அறிமுக அட்டையை, துணிப்பை, அட்டைப் பிடிப்பி (card holder), ஏடு கட்டும் ரிப்பன் (binder) என வெவ்வேறு பொருள்களாக மாற்றலாம். “மாநாடுகளில் கிடைத்த அறிமுக அட்டைகளைத் தாம் வழக்கமாக வீசிவிடுவதாகப் பலரும் கூறினர். அதனால் அவற்றுக்கு மறுவாழ்வு கொடுக்க விரும்பினோம்,” என்றார் மகேஸ்வரி.

தன் குழுவினருடன், மறுசுழற்சிசெய்த துணியாலான அறிமுக அட்டைகளை உருவாக்கியுள்ள சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவி மகேஸ்வரி.
தன் குழுவினருடன், மறுசுழற்சிசெய்த துணியாலான அறிமுக அட்டைகளை உருவாக்கியுள்ள சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவி மகேஸ்வரி. - படம்: சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி

கழிவறையிலிருந்து எழுந்து நிற்க முதியோருக்குக் கைகொடுக்கும் கருவியான ‘இன்லூ’, பேசச் சிரமப்படுவோருடன் உரையாட வழிவகுக்கும் செயலி ‘AAC Messenger’ - இதுபோல் பல புத்தாக்கங்களையும் புதன்கிழமை (நவம்பர் 19) சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரியில் காணமுடிந்தது.

அதற்குக் காரணம், நவம்பர் 19 முதல் 21 வரை ஆசியாவில் முதன்முறையாக நடைபெறும் ‘டான் நோர்மன் வடிவமைப்பு விருது’ உச்சநிலை மாநாடு. அது சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரியில் நடக்கிறது.

சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரியில் புதிய சுவரோவியத்தைத் திறந்துவைத்தார் அமைச்சர் ஜனில். மாணவர்களால் செய்யப்பட்ட இந்த ஓவியம், யுஓபி, எஸ்ஜி இகோ ஃபண்ட் நடத்தும் கிரீன் மொசைக் திட்டத்தில் ஓர் அங்கமானது.
சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரியில் புதிய சுவரோவியத்தைத் திறந்துவைத்தார் அமைச்சர் ஜனில். மாணவர்களால் செய்யப்பட்ட இந்த ஓவியம், யுஓபி, எஸ்ஜி இகோ ஃபண்ட் நடத்தும் கிரீன் மொசைக் திட்டத்தில் ஓர் அங்கமானது. - படம்: சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி

‘யுனெஸ்கோ’ புத்தாக்க வடிவமைப்பு நகரமான சிங்கப்பூரில் இம்மாநாட்டை நடத்துவது, சமூகத் தாக்கம் ஏற்படுத்துவதில் ஆசியாவின் வளரும் பங்கை அங்கீகரிப்பதாகக் கூறினார் கல்வி, நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணையமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரி.

இம்முறை அனைத்துலக அளவில் பல திட்டங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அவற்றில் ஐந்துக்கு நிதி விருதுகளும் கிடைத்தன. ஈசூன் சமூக மருத்துவமனைக்கு அதன் அன்பான சமூகங்கள் முயற்சிக்குத் ‘தேர்ச்சி’ விருது கிடைத்தது.

துணியை மறுசுழற்சி செய்யும் ‘காமனர்ஸ்’ (Commenhers), உடற்குறையுள்ளோருக்கும் மூத்த வாடிக்கையாளர்களுக்கும் “அமைதி நேரங்கள்’, மறதிநோய் உதவியிடங்கள் போன்றவற்றை வழங்கும் ஃப்ரேசர்ஸ் பிரோபர்ட்டி சிங்கப்பூர், பொதுச் சேவைப் பிரிவின் சுகாதார வட்டாரம்@குவீன்ஸ்டவுன் ஆகியவையும் விருதுகள் வென்றன.

கழிவறையிலிருந்து எழுந்து நிற்க முதியோருக்குக் கைகொடுக்கும் கருவியான ‘இன்லூ’, இவ்வாண்டின் டான் நோர்மன் விருதுக்கான இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றது. இந்திய அணி ஒன்று இதை உருவாக்கியுள்ளது. மேல்விவரங்களுக்கு https://www.inloo.life/
கழிவறையிலிருந்து எழுந்து நிற்க முதியோருக்குக் கைகொடுக்கும் கருவியான ‘இன்லூ’, இவ்வாண்டின் டான் நோர்மன் விருதுக்கான இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றது. இந்திய அணி ஒன்று இதை உருவாக்கியுள்ளது. மேல்விவரங்களுக்கு https://www.inloo.life/ - படம்: ‘இன்லூ’

இரண்டாம் முறையாக நடைபெறும் இவ்விருது மாநாடு, ‘பயனாளர் அனுபவம்’ என்பதை உருவாக்கியவரான புகழ்பெற்ற வடிவமைப்பாளர் டான் நோர்மனின் செயல்முறைகளின் அடிப்படையிலானது.

‘மனிதனை மையப்படுத்தும் வடிவமைப்பு: கல்வி, வர்த்தகம், சமூகத்தின் எதிர்காலம்’ என்பதே மாநாட்டின் கரு. “ஒரு புத்தாக்கத்தை உருவாக்கும்போது நீங்கள் யாருக்காக அதை உருவாக்குகிறீர்களோ, அவர்களையும் வடிவமைப்புச் செயல்முறையில் ஈடுபடுத்தினால்தான் இவ்விருதுக்குத் தகுதிபெற முடியும்,” என்றார் விருது, மாநாட்டின் தலைமை நிர்வாகி ஸ்ரீனி ஸ்ரீநிவாசன்.

சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரியின் பயனாளர் அனுபவ நிலையம், பேராசிரியர் டான் நோர்மனை முன்னுதாரணப்படுத்தி, மனிதநேயத்தை மையமாக்கும் வடிவமைப்புபற்றி விளக்கும் புதிய நூலையும் வெளியிட்டது.

அந்த அனுபவ நிலையம் 2024ல் கல்விக்கான டான் நோர்மன் வடிவமைப்பு விருதையும் பெற்றது.

DT|UX வட்டாரக் கூட்டுச்சங்கத்தில் இணைந்த மூன்று புதிய பங்காளிகளில் ஒன்று டெல்லியிலும் இத்தாலியிலும் அமைந்துள்ள ‘டிசைன் வில்லேஜ்’ பல்கலைக்கழகம். அதன் நிறுவனர் திரு சவ்ரப் குப்தா, இன்று பல நாடுகளும் சந்திக்கும் சவால்களில் ஒற்றுமைகள் இருப்பதாகக் கூறினார்.

‘டிசைன் வில்லேஜ்’ பல்கலைக்கழகம், நான்காண்டுப் பட்டப்படிப்பு முழுவதும் வடிவமைப்பில் பரந்துபட்டக் கல்வியை வழங்குவதாக அவர் கூறினார். “பொதுவாகக் கற்றால்தான் அனைத்து கோணங்களிலிருந்தும் ஒரு சவாலுக்குத் தீர்வுகள் அளிக்கமுடியும்,” எனக் கூறினார்.

DT|UX வட்டாரக் கூட்டுச்சங்கத்தில் இணைந்த மூன்று புதிய பங்காளிகளில் ஒன்று டெல்லியிலும் இத்தாலியிலும் அமைந்துள்ள ‘டிசைன் வில்லேஜ்’ பல்கலைக்கழகம். அதன் நிறுவனர் திரு சவ்ரப் குப்தா (இடமிருந்து மூன்றாவது).
DT|UX வட்டாரக் கூட்டுச்சங்கத்தில் இணைந்த மூன்று புதிய பங்காளிகளில் ஒன்று டெல்லியிலும் இத்தாலியிலும் அமைந்துள்ள ‘டிசைன் வில்லேஜ்’ பல்கலைக்கழகம். அதன் நிறுவனர் திரு சவ்ரப் குப்தா (இடமிருந்து மூன்றாவது). - படம்: சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி

செயற்கை நுண்ணறிவால் வடிவமைப்பாளர்களின் வேலைகள் பறிபோகுமா என்பதற்குப் பேராசிரியர் டான் நோர்மன், “புத்தாக்கச் சிந்தனையில் அதிகக் கவனம் செலுத்த உதவும் கருவியாகத்தான் ஏஐயைப் பார்க்க வேண்டும்,” என்றார்.

தாய்லாந்தின் தமசாட் பல்கலைக்கழகம், சிவில் சேவைக் கல்லூரி, ‘கின் லிவிங்’ (Kin Living), ‘புரோஜெக்ட் டிக்னிட்டி’ ஆகியவற்றுடன் சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டது. தமசாட் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த முனைவர் ஸ்ரீதர் ரியாலி, செயற்கை நுண்ணறிவு உலகில் கற்பித்தல்முறைகளின் எதிர்காலம் பற்றித் தெரிந்துகொள்ள வந்ததாகக் கூறினார். “மாணவர்களுக்குக் கற்பித்தலே கல்வி; பாடத்தைச் சொல்லிக் கொடுப்பதல்ல,” என்றார்.

கூடுதல் விவரங்களுக்கு https://dnda.design/award/2025-laureates/ இணையத்தளத்தை நாடலாம்.

குறிப்புச் சொற்கள்