பெரித்தா ஹரியான் சாதனையாளர் விருதுகள்

3 mins read
4632ff84-bedb-4c0b-aa46-8a04af9b2a89
பெரித்தா ஹரியான் சாதனையாளர் விருதைப் பெற்ற பிரிகேடியர் ஜெனரல் ஃபைரோஸ் ஹசான், பெரித்தா ஹரியான் இளம் சாதனையாளர் விருதைப் பெற்ற நூர் ஆய்‌‌‌ஷா லியானா உடன் அமைச்சர் சான். - படம்: பெரித்தா ஹரியான்

மலாய் நாளிதழான பெரித்தா ஹரியான் வழங்கும் சாதனையாளர் விருதான ‘அனுகரா ஜாவ்ஹாரி பெரித்தா ஹரியான்’, இவ்வாண்டு, பிரிகேடியர் ஜெனரல் ஃபைரோஸ் ஹசானுக்கு வழங்கப்பட்டுள்ளது.

27வது ஆண்டாக வழங்கப்படும் இவ்விருது, 31 வயதுக்கு மேற்பட்ட தலைசிறந்த மலாய்/முஸ்லிம் சிங்கப்பூரர்களை அங்கீகரிக்கிறது.

சிங்கப்பூர் ஆயுதப்படை வரலாற்றில் பிரிகேடியர் ஜெனரல் பதவியை எட்டிய இரண்டாம் மலாய்/முஸ்லிம் வீரர், திரு ஹசான். அவர் ஒன்பதாம் சிங்கப்பூர் ராணுவப் படைப் பிரிவின் தளபதியாகவும் தலைமைக் காலாட்படை வீரராகவும் பணியாற்றுகிறார்.

எஸ்ஜி50 தேசிய தின அணிவகுப்பு, பிற நாட்டு இயற்கைப் பேரிடர்களுக்கு அவசரகால உதவி வழங்கிய குழுக்களிலும் அவர் இடம்பெற்றிருந்தார்.

“2005 பாண்டா அச்சே சுனாமிக்குப் பிறகு நான் ஒரு சிறு குழுவின் உறுப்பினராக அங்குச் சென்றேன். எப்படிச் சிறு குழுவாக மற்ற பெரிய ராணுவச் சேவைகளின் மத்தியில் பங்காற்றமுடியும் எனச் சிந்தித்தேன். ஆனால், உண்மையில் எங்களால் இந்தோனீசியர்கள், ஐக்கிய நாட்டு அமைப்புகள், ராணுவங்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளைச் சிறப்பாக நடத்தமுடிந்தது,” என்றார் திரு ஹசான்.

தற்காப்பு அமைச்சரும் பொதுச் சேவைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான சான் சுன் சிங், நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

“நானும் ஃபைரோசும் ஒன்றாகச் சேவையாற்றிய அதிகாரிகள். நான் சிறுவயதிலிருந்தபோது என் தளபத்திய அதிகாரியாக இருந்தவர் பிரிகேடியர் ஜெனரல் இ‌‌‌ஷாக். எதிர்காலத் தலைமுறையை நாம் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதை அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்டேன். தன் கவனிப்பில் உள்ள வீரர்களை ஃபைரோஸ் நன்றாகப் பார்த்துக்கொள்வார் என நான் உறுதியாக நம்புகிறேன்,” என்றார் அவர்.

பெரித்தா ஹரியானின் இளம் சாதனையாளர் விருதை (Anugerah Jauhari Harapan), நூர் ஆய்‌‌‌ஷா லியானா முகமது சத்ரியா, 28, பெற்றுக்கொண்டார். ‘மேஜா ஜுன்டிங்’ எனும் இளையர் எழுத்துக் கூட்டுக்குழுவை அவர் 2024ல் நிறுவினார். கலைவழி சமூகப் பிரச்சினைகளுக்கு அவர் குரல்கொடுத்து வருகிறார்.

நிதிப் பிரச்சினைகள், உணவுப் பற்றாக்குறை போன்றவற்றுக்கு இடையில் வளர்ந்த அவர் பல்கலைக்கழகத்தில் படித்தபோது, அவரது தாயாருக்கு மூளையில் கட்டி இருப்பது தெரியவந்தது. தாயார் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட மறுநாள் தந்தைக்குப் பக்கவாதம் ஏற்பட்டது. அப்போது தன் மூன்று சகோதரர்களைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு ஆய்‌‌‌ஷாவிடம் வந்தது.

நிகழ்ச்சியில் கண்ணீர் மல்க, தம் வாழ்க்கை அனுபவத்தை உருக்கமாகப் பகிர்ந்துகொண்டார் ஆய்‌‌‌ஷா. “பல்கலைக்கழகத்துக்கும் மருத்துவமனைக்கும் இடையே ஓடிக்கொண்டே இருந்தேன். பயணங்களின்போது என் வீட்டுப்பாடங்களைச் செய்தேன்,” என்றார் ஆய்‌‌‌ஷா. பகுதிநேர வேலையையும் அவர் செய்யவேண்டியிருந்தது.

அத்தனை சவால்களின் மத்தியிலும் அனைத்துலகப் படிப்பு, மலாய் மொழிக் கல்வி என தேசியப் பல்கலைக்கழகத்திலிருந்து இரட்டைப் பட்டம் (முதல் ரக ஹானர்ஸ்) பெற்றார்.

தன் சோகத்துக்கு எழுத்துரு கொடுக்கத் தொடங்கினார் ஆய்‌‌‌ஷா. 2020ல், 2024ல் நடைபெற்ற தேசிய கவிதைப் போட்டியில் வாகைசூடினார். ‘பத்துல் இஸ்சுதின் அனைத்துலகக் குடிமகன்’ விருதையும் வென்றார். 2024ல் மூத்த அமைச்சர் லீ சியன் லூங்குக்கு அர்ப்பணிப்பாக ஒரு கவிதையையும் எழுதினார்.

கலையுலகுக்குத் தம்மை அர்ப்பணித்த இவரது தாயார் ஈராண்டுகளுக்கு முன்பு தவறினாலும், அவருக்குப் பெருமை சேர்த்துவருகிறார் ஆய்‌‌‌ஷா. தாயார் எழுதிய நாடகத்தை அண்மையில் ஜோகூரிலும் படைத்தார். தற்போது ஆய்‌‌‌ஷா ஃபிரான்ஸ், ஸ்பெயினில் தொழில்நுட்பம், அனைத்துலக விவகாரங்களில் இரட்டை முதுநிலைப் பட்டம் பயில்கிறார்.

மெண்டாக்கியிலும் ‘பியோண்ட் சோ‌‌ஷியல் சர்வீசஸ்’ அமைப்பிலும் அவர் சில ஆண்டுகள் சமூகத் தொண்டாற்றியுள்ளார்.

“ஆய்‌‌‌ஷாவின் வளர்ச்சி எனக்கு மிகுந்த உந்துதலளிக்கிறது. இவ்வளவு சவால்களைக் கடந்தும் அவர் சமூகத்தை நினைவுகூர்ந்து பங்காற்றுகிறார்,” என்று அமைச்சர் சான் பாராட்டினார்.

குறிப்புச் சொற்கள்