சிங்கப்பூரில் 20 ஆண்டுகளுக்கு முன் ரேஸ் கோர்ஸ் சாலையில் முதல் கடையைத் தொடங்கி, இன்று ஆறு கிளைகளோடு நாடு முழுதும் மக்களுக்குப் பாரம்பரிய இந்திய உணவை வழங்கி வருகிறது அஞ்சப்பர் செட்டிநாடு உணவகம்.
சிங்கையின் புகழ்பெற்ற இந்திய அசைவ உணவகங்களுள் ஒன்றாக வெற்றிநடைபோடும் அஞ்சப்பர், ஜூலை 1ஆம் தேதி அதன் இருபதாம் ஆண்டுநிறைவைக் கொண்டாடுகிறது.
மாறாத தரத்தோடும் தனித்துவமான செட்டிநாட்டுச் சுவையோடும் வாடிக்கையாளர்களின் மனங்கவர்ந்து வருகின்றது அஞ்சப்பர் உணவகம்.
விரிவடைந்த கிளைகள்
முதன்முறையாக 2005ஆம் ஆண்டு ரேஸ் கோர்ஸ் சாலை கிளைமூலம் சிங்கப்பூரில் கால்பதித்த அஞ்சப்பர், 2006ஆம் ஆண்டு சையது ஆல்வி சாலையில் இரண்டாவது கிளையைத் திறந்தது.
அதன்பின், லிட்டில் இந்தியா வட்டாரத்திலிருந்து விரிவடைந்து, 2010இல் சாங்கி தொழிற்பேட்டை, 2012இல் வெஸ்ட்கேட் கடைத்தொகுதியென அடுத்த இரண்டு கிளைகளும் திறக்கப்பட்டன.
24 மணி நேரம் இயங்கும் முதல் அஞ்சப்பர் கடை சாங்கி விமான நிலையத்தின் முதலாம் முனையத்தில் 2020ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. கடந்த ஆண்டு கிளமெண்டியில் ஆறாவது கிளையும் திறக்கப்பட்டது.
இன்றியமையாத வாடிக்கையாளர்கள்
இந்த இருபதாண்டுப் பயணத்தில், ஏராளமான வாடிக்கையாளர்களின் நம்பிக்கையையும் ஆதரவையும் அஞ்சப்பர் பெற்றுள்ளது.
“சிறுபிள்ளையிலிருந்து தொடர்ந்து அஞ்சப்பர் உணவகத்தில் சாப்பிட்டு வளர்ந்த பிறகும் இங்குவரும் வாடிக்கையாளர்கள் பலர் இருக்கின்றனர்.” என்றார் அஞ்சப்பர் சிங்கப்பூரின் நிர்வாக இயக்குநர் அசோகன், 66.
தொடர்புடைய செய்திகள்
இந்த அளவிற்கு வாடிக்கையாளர்கள் தொடர்ந்து அஞ்சப்பர் உணவகத்திற்கு ஆதரவளிக்க, உணவின் மாறாத சுவையே காரணம் என்று அவர் கருதுகிறார்.
தனித்துவமான சுவை
60 ஆண்டுகளுக்குமுன் இந்தியாவில் தொடங்கப்பட்ட அஞ்சப்பர் செட்டிநாட்டின் சுவையைக் கட்டிக்காக்க, சிங்கப்பூரில் பணியாற்றும் முக்கியத் தலைமை சமையற்காரர்கள் இந்தியாவில் பயிற்சி பெறுகின்றனர்.
பாரம்பரிய நறுமணப்பொருள்களைப் பயன்படுத்தி, தனித்துவமாகத் தயாரிக்கப்படும் மசாலா உணவிற்கு மேலும் சுவை சேர்க்கிறது.
“20 ஆண்டுகளுக்குமுன் சாப்பிட்ட உணவில் இருந்த சுவை இன்றுவரை அப்படியே இருக்கும். தொடர்ச்சியாகத் தரமான உணவை அற்புதமான சுவையில் கொடுப்பதே அஞ்சப்பர் உணவகத்தின் தனித்துவம்,” என்றார் திரு அசோகன்.
அவ்வாறு சீரக சம்பா சிக்கன் பிரியாணி, மட்டன் சுக்கா, அஞ்சப்பர் சிக்கன் மசாலா, சிக்கன் லாலிபாப் போன்ற பாரம்பரிய உணவு வகைகள் அன்றுமுதல் இன்று வரை வாடிக்கையாளர்களிடையே பெருவரவேற்பைப் பெற்று வருகின்றன.
பாரம்பரிய உணவைத் தாண்டி, சிங்கப்பூர் மக்களுக்கு ஏற்றவாறு சில உணவு வகைகளும் வடிவமைக்கப்பட்டன. மீன் தலைக் குழம்பு போன்ற பிரபல உள்ளூர் உணவு வகைகளும் உணவுப் பட்டியலில் சேர்க்கப்பட்டன.
மாற்றமடைந்துள்ள செயல்பாடுகள்
செயல்பாடுகளை விரிவுபடுத்தவும் வாடிக்கையாளர்களுக்குத் தரமான சேவையை வழங்கவும் பல மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.
உணவு வாங்கும் முறையை முதன்முதலில் மின்னிலக்கமயமாக்கிய உணவகங்களில் அஞ்சப்பர் உணவகமும் அடங்கும்.
வாடிக்கையாளர்கள் கேட்கும் உணவைச் சுயமாகக் கவனத்தில் கொள்வதற்கு பதிலாக மின்னிலக்க சாதனங்கள் பயன்படுத்தப்பட்டன.
அத்துடன், உற்பத்திதிறனை அதிகரிக்க 2009ஆம் ஆண்டு அட்மிரல்டியில் மையப்படுத்தப்பட்ட சமையலறை (centralised kitchen) அமைக்கப்பட்டது.
தானியக்கக் கருவிகளோடு இயங்கும் அச்சமையலறையில் சமைக்கப்படும் உணவு, அஞ்சப்பரின் ஆறு கிளைகளுக்கு விநியோகிக்கப்படுகிறது.
சிறப்புத் தள்ளுபடிகள்
கடந்த 20 ஆண்டுகளாகத் தங்களுக்கு ஆதரவளித்த வாடிக்கையாளார்களுக்கு நன்றிகூறும் விதமாக அஞ்சப்பர் சிங்கப்பூர், சில சிறப்புத் தள்ளுபடிகளையும் அறிவித்துள்ளது.
ஜூலை 1 ஆம் தேதி மட்டும் அனைத்து அஞ்சப்பர் கிளைகளிலும் நாள்தோறும் 20 விழுக்காடு தள்ளுபடி வழங்கப்படும்.
மேலும், ரேஸ் கோர்ஸ் சாலையில் அமைந்துள்ள அஞ்சப்பர் கிளையில், ஜூலை 1 முதல் ஜூலை 17 வரை, ஒரு பிரியாணி வாங்குபவர்களுக்கு ஒரு பிரியாணி இலவசமாக வழங்கப்படும். இந்தச் சலுகை திங்கள் முதல் வியாழன் வரை மட்டுமே வழங்கப்படும்.