நூற்றாண்டு விழா காணும் தமிழறிஞர் அப்துஸ் ஸமத்

7 mins read
d988676a-2d1e-4d10-a255-2ab319bb4580
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சென்னையில் ஏற்பாடு செய்த அப்துஸ் ஸமத் நூற்றாண்டுத் தொடக்க விழாவில் சிங்கப்பூர் செம்மொழி இதழின் ஆசிரியர் எம். இலியாஸ் எழுதிய ‘உலக அரங்கில் சிராஜுல் மில்லத்’ நூலை, லீக்கின் தேசியத் தலைவரான பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் வெளியிட்டார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சிறப்புப் பிரதியைப் பெற்றுக்கொண்டார். - படம்: எம். இலியாஸ்
multi-img1 of 2

இலக்கிய மேடையானாலும், அரசியல் மேடையானாலும், இஸ்லாமிய விழாக்களானாலும், கட்டுரைகளானாலும் சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமத் அவர்களிடமிருந்து ஆழமான கருத்துகளும் வரலாற்றுக்குறிப்புகளும் வெளிப்படும். பிறர் அறியாத புதுப்புதுச் செய்திகள் அவர் பேச்சில் நிறைந்திருக்கும். அவர் நடையில் நல்ல தமிழ்ச் சொற்கள் துள்ளி விளையாடும்.

சிறந்த இலக்கியவாதியாக, ஆற்றல்மிக்க பத்திரிக்கையாளராக, சீர்மிகு சிந்தனையாளராக, சொல்லாற்றல் மிக்க சொற்பொழிவாளராக ஒரு முன்மாதிரியான அரசியல்வாதியாக, சமுதாயத் தலைவராகத் திகழ்ந்தார் திரு அப்துல் ஸமத்.

அரசியல், ஆன்மீகம், இதழியல், இலக்கியம் எனப் பல துறைகளிலும் எழுத்தாளராகவும் பேச்சாளராகவும் முத்திரை பதித்தார். எந்தத் தலைப்பிலும் இயல்பாக, தங்குதடையின்றி, கருத்துச் செறிவோடு பேசும் ஆற்றல் படைத்தவர் அவர். வரலாற்றுச் சம்பவங்களைத் தமது உரையில் அவர் விளக்கும் பாங்கும், கேட்பவர்களுக்குப் புரியும் வகையில் அவர் பேசும் பாணியும் தனித்துவமானது.

திருக்குர் ஆனை முதன்முதலில் தமிழில் முழுமையாக மொழி பெயர்த்த (தர்ஜுமதுல் குர்ஆன்) அல்லாமா அப்துல் ஹமீது பாகவியின் புதல்வரான அவர், தம் தந்தையாரின் தெய்வீகப் பணிக்குக் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்குமேல் எழுதுகரமாகத் தொண்டாற்றியவர்.

195ஆம் ஆண்டில் ‘மணிவிளக்கு’ மாத இதழைத் தொடங்கி அதன் மூலம் இலக்கியவாதிகளின் அணியை உருவாக்கிய பெருமைக்குரியவர் அவர்.

நல்ல தமிழில், இஸ்லாமிய இலக்கியங்களைத் தமிழறிந்த சகோதரச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் படிப்பதற்காகவே வெளியிட்டார்.

“முஸ்லிம் என்ற போதிலும் அவரிடம் தமிழ்ப் புலமை மிகுந்திருந்தது. அவர் பேசுகிற பாணி அவருக்கே உரித்தான தனிப்பாணி,” என்று சிலம்புச் செல்வர் மா.பொ.சிவஞானமும், “அழகுத் தமிழில் தெளிவாகப் பேசக்கூடியவரை இப்போதுதான் பார்க்கிறேன்,” என்று சொல்லின் செல்வர் ரா.பி. சேதுப்பிள்ளையும் திரு அப்துல் ஸமதைப் பாராட்டியுள்ளனர். “அறிஞர் அண்ணாபோல அற்புதத் தமிழ் பேசும் ஒரு பேச்சுச் சித்தர் அப்துஸ் ஸமத் மட்டுமே,” என்று போற்றியுள்ளார் வார்த்தைச் சித்தர் என்று புகழப்பட்ட வலம்புரிஜான்.

பேரறிஞர் அண்ணாவே, “அப்துஸ் ஸமதின் பேச்சைக் கேட்கத்தான் இந்தக் கூட்டத்திற்கு முன்னதாக வந்தேன்,” என்று ஒருமுறை கூறியதிலிருந்து அவரது பேச்சாற்றலை நாம் அறிய முடியும்.

ஒருமுறை அருட்செல்வர் பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்கள் ‘ஞானவயல்’ என்ற அனைத்து சமயக் கருத்தரங்கினை நடத்தினார். தமிழகத்தின் புகழ்பெற்ற சமயப் பெரியார்கள் பலரும் கலந்துகொண்டு தத்தமது வேதங்கள் பற்றிப் பேசிய அந்தக் கருத்தரங்கில், திருக்குர் ஆனைப் பற்றிப் பேச அப்துல் ஸமத் இறுதியாக அழைக்கப்பட்டார்.

தமது சொற்பொழிவைத் தொடங்கிய அவர் தாம் இறுதியாகப் பேச அழைக்கப்பட்டது குறித்துக் குறிப்பிட்டு, “இதுவும் ஒரு வகையில் பொருத்தம்தான்! காரணம் வேதங்களில் இறுதியாக அருளப்பட்டது திருக்குர் ஆன்தான்,” என்று சொல்லித் தமது பேச்சைத் தொடர்ந்தார்.

“ஒன்றைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். திருக்குர் ஆன் எழுதப்பட்ட நூலன்று! இறைவனால் அருளப்பட்ட வேதம்!” என்று ஒரு கணம் நிறுத்தி, நிதானமாக, ஆனால் அழுத்தமாகத் தமது உரையைத் தொடர்ந்தபோது, ஒட்டுமொத்தக் கூட்டத்தினரின் முழுக் கவனமும் கொஞ்சமும் சிதறாமல் அவர்மேல் விழுந்திருந்தது. கருத்துச் செறிவுமிக்க மிக அற்புதமான அந்த உரையைச் சகோதர, மாற்றுமத அறிஞர்கள் மிகக் கவனமாக, கருத்தூன்றிச் செவிமடுத்தார்கள். பின்னர் அவரது முழு உரையையும் ‘மணிவிளக்கு’ இதழில் வெளியிட்டிருந்தார்கள்.

கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் அருட்செல்வர் பொள்ளாச்சி மகாலிங்கத்தைச் சந்தித்துப் பேச எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் நடத்திய ‘ஞானவயல்’ கருத்தரங்கு குறித்து நினைவுபடுத்தி, சிராஜுல் மில்லத் அப்துல் ஸமத் பேசியதையும் குறிப்பிட்டு, அத்தகைய அவசியமான பயனுள்ள கருத்தரங்குகள் இப்போது நடப்பதில்லையே என்ற ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினேன். “ஆமாம்! ஆமாம்!” என்றவர் அவர் நடத்திய வேறு பல விழாக்கள் பற்றிக் கூறினார். பல ஆண்டுகளுக்கு முன்பு அவர் நடத்திய விழா குறித்துச் சிங்கப்பூரிலிருந்து சென்ற நான் நினைவுபடுத்திக் கூறியது அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.

சமுதாய நல்லிணக்கத்தை வளர்க்கும் வாசகங்கள் அப்துல் ஸமதின் எழுத்திலும், பேச்சிலும் எப்பொழுதும் நிறைந்திருக்கும். கலைஞர் கருணாநிதி குறிப்பிட்டதைப்போல, மேடையில் வீசிய மெல்லிய பூங்காற்று அவர்!

கண்ணியமிகு பெரியவராகப் போற்றப்பட்ட காயிதே மில்லத்தை வழிகாட்டியாகக் கொண்டு, சமுதாய, அரசியல் பணிகளில் ஈடுபட்ட அப்துஸ் ஸமத், அவரது நிழலாய் அரசியலில் பரிணாமம் பெற்றுத் திகழ்ந்தவர். தென்றலைப் போன்ற இனிய நடை, கண்ணியம் சிறிதளவும் குறையாத நல்ல தமிழ்ச் சொற்கள் அவரது உரைகளிலும் எழுத்துகளிலும் எப்போதும் மிளிரும்.

அரசியலில் ஈடுபட்டிருந்த காலகட்டத்தில், இந்தியக் குடியரசுத் தலைவர்கள், பிரதமர்கள், அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் அனைவருடனும் நெருக்கமான நட்புறவு கொண்டிருந்தவர். முன்னாள் இந்தியப் பிரதமர் திருமதி இந்திரா காந்தியை முன்னரே அனுமதி பெறாமலே சந்திக்கக்கூடிய நெருக்கம் உடையவர் அவர்.

தமிழக முதல்வர்களாக இருந்த அறிஞர் அண்ணா, கலைஞர், எம். ஜி. ஆர், ஜெயலலிதா ஆகியோருடன் அணுக்கமாகவும் இணக்கமாகவும் இருந்தவர்.

1958ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் அவர் கலந்துகொண்டு பேசிய நிகழ்ச்சிகள் பல.

1966ஆம் ஆண்டு, சிங்கப்பூரில் தமிழ் முஸ்லிம் யூனியன் (ஜமாஅத்) ஏற்பாட்டில் நடைபெற்ற திருக்குர் ஆன் மாநாடு அவற்றில் மிக முக்கியமானது.

தமது தலைவர் காயிதே மில்லத் அல்ஹாஜ் இஸ்மாயில் சாகிப்புடன் கலந்துகொண்டு அந்த மாநாட்டில், அப்போது சென்னை மாவட்ட முஸ்லிம் லீக் தலைவராக இருந்த திரு அப்துஸ் ஸமத் சுமார் ஒரு மணி நேரம் சிறப்புரையாற்றினார். காயிதே மில்லத் தலைமையில் நடந்த அந்த மாநாட்டைத் தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றியவர் சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூ.

அனைத்து சமய அறிஞர்கள் கலந்து கொண்ட அவ்விழாவில், தமிழ் முரசு நிறுவனர் தமிழவேள் கோ. சாரங்கபாணி, நாடாளுமன்ற உறுப்பினர் பி.கோவிந்தசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

17.7.1966 ஞாயிற்றுக்கிழமை காலை சிங்கப்பூர் தேசிய அரங்கில் திருக்குர் ஆன் மாநாட்டைத் திரு. லீ திறந்துவைத்துப் பேசிய பிறகு சிங்கப்பூரில் வாழும் தமிழ் முஸ்லிம்களின் சார்பில் அவருக்குத் திருக்குர் ஆன் அன்பளிப்பாக அளிக்கப்பட்டது. அரபு மொழியுடன் ஆங்கிலத்திலும் எழுதப்பட்ட விலையுயர்ந்த அத்திருமறையை பெற்றுக்கொண்ட திரு லீ, நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்.

மாநாட்டிற்குப் பிறகு நடைபெற்ற விருந்து உபசரிப்பில் தமிழவேள் கோ. சாரங்கபாணி திரு அப்துஸ் ஸமதுக்குப் பொன்னாடை அணிவித்துச் சிறப்பு செய்தார்.

17.7.1966ல் சிங்கப்பூர் தேசிய அரங்கில் நடைபெற்ற திருக்குர் ஆன் மாநாட்டைத் தொடர்ந்து நடந்த விருந்து உபசரிப்பில் தமிழவேள் கோ. சாரங்கபாணி, திரு அப்துஸ் ஸமதுக்குப் பொன்னாடை அணிவித்தார்.
17.7.1966ல் சிங்கப்பூர் தேசிய அரங்கில் நடைபெற்ற திருக்குர் ஆன் மாநாட்டைத் தொடர்ந்து நடந்த விருந்து உபசரிப்பில் தமிழவேள் கோ. சாரங்கபாணி, திரு அப்துஸ் ஸமதுக்குப் பொன்னாடை அணிவித்தார். - படம்: எம். இலியாஸ்

25.7.1992ல் எஸ். எல். எப். அரங்கத்தில் நடைபெற்ற தமிழ் முஸ்லிம் இலக்கியப் பண்பாட்டு மாநாட்டில், சிங்கப்பூரின் தகவல், கலைகள் அமைச்சர் பிரிகேடியர் ஜெனரல் ஜார்ஜ் இயோ திரு அப்துல் ஸமதுக்குச் சிறப்பு செய்தார்.

மார்க்கப் பற்றையும் மொழிப்பற்றையும் ஒரே நிலையில் வைத்தவர் அவர். “இஸ்லாம் எங்கள் வழி, இன்பத்தமிழ் எங்கள் மொழி,” என்பது தமிழ் முஸ்லிம் சமுதாயத்திற்கு அவர் தந்த முழக்க வரி மட்டுமன்று; முகவரியும் கூட!

தமிழர்களின் உயரிய பண்பை எடுத்துரைக்கும் விதத்தில் 1995ல் நடைபெற்ற எட்டாம் உலகத் தமிழ் மாநாட்டில் அவர் ஆற்றிய உரை அற்புதமாக அமைந்திருந்தது.

“தமிழ் தொன்மையான மொழி. அது மக்களை, மக்களது வாழ்வை, அவர்களின் எண்ணத்தை ஆண்டு இலக்கியமாக உருவெடுத்திருக்கிறது என்பதை நம்மால் உணர முடியும்.

“தமிழிலே கிடைத்திருக்கும் இலக்கியம், நமக்கு இலக்கணமாகவே அமைந்து விட்டது. உலகத்திலே இலக்கியத்தையே இலக்கணமாகக் கொண்டவன் தமிழன் ஒருவன்தான் என்பதை எண்ணும்போது தான் நமது பெருமை நமக்குத் தெரிகிறது.

“ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ‘சீனர்கள் தங்களைச் ‘சீனர்கள்’ என்றும் மற்றவர்களைப் ‘பிசாசுகள்’ என்றும் கூறினர். கிரேக்கர்கள் தங்கள் மக்களைக் குடிமக்கள் (சிட்டிசன்ஸ்) என்றும் மற்றவர்களை ‘அந்நியர்கள்’ என்றும் சொன்னார்கள். அரபுமக்கள் தங்களைப் ‘பேசத் தெரிந்தவர்கள்’ என்றும் மற்றவர்களை ‘ஊமைகள்’ என்றும் கூறினார்கள். கிரேக்க மக்கள் மற்றவர்களை உலகத்திலே ‘வாழ்வதற்கு உரிமையற்றவர்கள்’ என்று கூறினார்கள்.

“ரோம் நாட்டு மக்கள் பிற நாட்டினரைப் பார்த்து ‘அடிமைகள்’ என்று கூறிய நேரத்திலேதான் அந்த நாடுகளிலே அப்படிப்பட்ட நிலை நிலவியபோதுதான், “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற கருத்தைத் தமிழன் கூறி இலக்கியம் சமைத்தான் என்பதை நினைக்கும்போது, தமிழ்ப் பெருமக்கள் எப்படிப்பட்ட உயரிய பண்பாட்டிலே வாழ்ந்தார்கள்; எவ்வளவு தரமான நாகரிகத்தோடு, பண்பாட்டின் பிறப்பிடமாக வாழ்ந்தார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பாட்டு உணர்ச்சியை உலகுக்கு முதன்முதலாக எடுத்துக்காட்டி இலக்கியப் புரட்சி செய்தவன் உலகத்திலே தமிழனைத் தவிர வேறு யாரைக் கூற முடியும்?” என்று எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டுக் கருத்தரங்கில் முழக்கமிட்டார் திரு அப்துல் ஸமத்.

பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் தொகுத்த ‘சிராஜுல் மில்லத் சிந்தனைகள்’ ஓர் அற்புதமான தொகுப்பு! ஆன்மீகச் சிந்தனைகள், அரசியல் சிந்தனைகள், வரலாற்றுச் சிந்தனைகள், அறிவியல் சிந்தனைகள் மற்றும் சிந்தனையில் நிறைந்த தலைவர்கள் என்று பகுத்து, வகுத்து நேர்த்தியாகத் தொகுத்துத் தந்துள்ளார்.

திருக்குர் ஆன் தமிழ் மொழிபெயர்ப்புக்கு எழுதிய ‘அற்புத வேதம்’ எனும் மதிப்புரை, வழிகாட்டியாகவும் அரசியல் தலைவராகவும் தாம் ஏற்றுக்கொண்ட காயிதே மில்லத் அவர்களை முதன்முதலில் சந்தித்தது குறித்து எழுதிய ‘அந்தச் சந்திப்பு’ கட்டுரை, ‘ஞானவயல்’ கருத்தரங்கில் திருக்குர்ஆன் பற்றிய உரை, எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டுக் கருத்தரங்கில் ஆற்றிய தமிழ் மற்றும் தமிழர்களின் பெருமை குறித்த உரை, பத்திரிகையில் எழுதிய ‘எண்ணுவதை எழுதுகிறேன்’, ‘அன்புத்தம்பிக்கு ஷிப்லி எழுதும் கடிதங்கள்’ போன்றவை அற்புதமானவை!

மணி விளக்கு - மாத இதழ், மணிச்சுடர், வார இதழ் மற்றும் தினசரி, அறமுரசு தினசரி, கிரசண்ட் ஆங்கில மாத இதழ் ஆகிய இதழ்களை நடத்திய பத்திரிகையாளர், எழுத்தாளர், பேச்சாளர், சமுதாயத் தலைவர், இந்திய நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் எனப் பல நிலைகளில் சிறந்து விளங்கிய அப்துல் ஸமத் 4.11.1999ல் காலமானார்.

4.10.1926ல் பிறந்த அவருக்கு இது நூற்றாண்டுத் தொடக்கம். அதனை முன்னிட்டு நூற்றாண்டு விழாவுக்கு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஏற்பாடு செய்திருந்தது.

அவ்விழாவில் நான் எழுதிய ‘உலக அரங்கில் சிராஜுல் மில்லத்’ என்ற நூலை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசியத் தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் வெளியிட்டார்.

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா, நவாஸ்கனி, இந்திய தேசிய காங்கிரசின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான பீட்டர் அல்போன்ஸ், தமிழ்நாடு ஜமா அத்துல் உலமா சபையின் துணைப் பொதுச்செயலாளர் மௌலவி K.M. இலியாஸ் ரியாஜி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அப்துல் பாஸித், அப்துஸ் ஸமதின் புதல்வியர் அலவியா, பாத்திமா முஸப்பர், ஈரோடு தாஜ் முகைதீன், ஏ. எஸ். அப்துல் ரஹ்மான் ரப்பானி, ஆடுதுறை ஷாஜஹான் ஆகியோர் மேடையில் சிறப்பு நூல் பிரதிகளைப் பெற்றுக்கொண்டனர்.

குறிப்புச் சொற்கள்