லக்னோ: முழுக்க முழுக்க பீங்கான் கழிவுகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் பூங்கா உத்தரப் பிரதேச மாநிலத்தில் விரைவில் திறக்கப்பட உள்ளது.
அங்குள்ள புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் உள்ள குர்ஜா பகுதியைப் பீங்கான் பொருள்களின் தலைநகரம் எனக் குறிப்பிடுகிறார்கள்.
இங்கு உருவாகும் பீங்கான் பொருள்களுக்கு உலக அளவில் பெரும் வரவேற்பு உள்ளது.
பீங்கான் பொருள்களைச் செய்யும்போது ஏராளமான கழிவுகள் தேங்கிப் போகும். அவற்றை வீணாக்காமல் பூங்கா அமைக்க உத்தரப் பிரதேச மாநில அரசு முடிவு செய்தது.
அதன்படி, 5.86 கோடி ரூபாய் செலவில் ஏறக்குறைய இரண்டு ஏக்கர் பரப்பளவில் குர்ஜாவில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா இம்மாத இறுதியில் திறக்கப்படும் எனத் தெரிகிறது.
இப்பூங்காவுக்கு ‘வித்தியாசமான உலகம்’ எனப் பொருள்படும் வகையில் ‘அனோகி துனியா’ என்று பெயரிட்டுள்ளனர்.
இந்தப் பூங்காவில், உடைந்த குடங்கள், கோப்பைகள், இருக்கைகள், குவளைகள், செயற்கை மரங்கள் என பீங்கான் கழிவுகளால் ஆன பல்வேறு பொருள்கள் இடம்பெற்றுள்ளன.
120 கைவினைஞர்களைக் கொண்ட குழு, பூங்காவில் உள்ள தனித்துவமான, நூறு கலைப்படைப்புகளை உருவாக்கி உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
மேலும், ‘செல்ஃபி’ புகைப்படம் எடுக்கும் இடம், உணவகங்கள், பசுமையான நிலப்பரப்பு ஆகிய இதர சுவாரசியங்களும் இடம்பெற்றுள்ளன.
பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்திழுக்கும் இடமாக இப்பூங்கா விளங்கும் என புலந்த்ஷாஹர் - குர்ஜா மேம்பாட்டு ஆணையத்தின் துணைத் தலைவர் டாக்டர் அங்கூர் லத்தார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
“குர்ஜாவின் வளமான கைவினைத்திறனை வெளிப்படுத்துவது மட்டுமின்றி, கழிவுகளை ஆக்கபூர்வமான, செயல்பாட்டுக் கலையாக மாற்றுவதன் மூலம் நிலையான வளர்ச்சியை எவ்வாறு அடைய முடியும் என்பதை நிரூபிக்கிறது இந்தப் பூங்கா,” என்றும் அவர் கூறினார்.

