அமராவதி: உலக வங்கி இந்த ஆண்டு டிசம்பரில் அமராவதி நகரின் முதற்கட்ட உருவாக்கத்துக்கு மேலும் 200 மில்லியன் அமெரிக்க டாலரை (S$260 மில்லியன்) வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆந்திரப் பிரதேச மாநில அரசாங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை (அக்டோபர் 23) இத்தகவலை வெளியிட்டார்.
அமராவதி நகரின் கட்டுமானத்துக்கு உலக வங்கி 800 மில்லியன் அமெரிக்க டாலரை வழங்க உறுதியளித்துள்ளது. ஆசிய மேம்பாட்டு வங்கியும் அதன் பங்கிற்கு 800 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்க உறுதியளித்துள்ளது.
இரு வங்கிகளும் வழங்கும் இந்தத் தொகையுடன் (மொத்தம் ரூ.13,600 கோடி) இந்தியாவின் மத்திய அரசாங்கமும் ரூ.15,000 கோடியை முதற்கட்ட கட்டுமானத்திற்கு வழங்க உறுதியளித்துள்ளது. அதில், ரூ.1,400 கோடி இப்போது வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக வங்கி ஏற்கெனவே கடந்த மார்ச் மாதம் வழங்கிய 207 மில்லியன் அமெரிக்க டாலரைப் பயன்படுத்திப் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக உள்ளூர் அதிகாரிகள் கூறினர். அந்தத் தொகையில் 75 விழுக்காட்டை மாநில அரசாங்கம் செலவிட்ட பிறகே அடுத்ததாகக் கடன் தொகையை வழங்கும்படி உலக வங்கியிடம் கேட்க முடியும் என்று அவர்கள் கூறினர்.
ஒவ்வொரு மாதமும் உலக வங்கியும் ஆசிய மேம்பாட்டு வங்கியும் அமராவதியில் ஆய்வு மேற்கொள்வதாக அவர்கள் தெரிவித்தனர். இரு வங்கிகளின் அதிகாரிகளும் மாநில அரசாங்க அதிகாரிகள் குழுவுடன் சந்திப்பு நடத்தி, களப் பணிகளையும் ஆய்வு செய்வர் என்று தெரிவிக்கப்பட்டது.
உலக வங்கி அண்மையில் இந்தத் திட்டம் குறித்து வெளியிட்டிருந்த அறிக்கையில், அமராவதியில் மேற்கொள்ளப்படும் பணிகள் திருப்தி அளிப்பதாகக் கூறியிருந்தது.

