கோல்கத்தா: இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் இரண்டாம் ஆண்டு பயிற்சி மருத்துவர் ஒருவருக்குக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை இழைக்கப்பட்ட விவகாரத்தில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் துர்காபூர் நகரில் நிகழ்ந்தது. கூட்டுப் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்களைப் புரிந்த சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட மூவர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் உள்ளூர்வாசிகள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களின் அடையாளம் இன்னும் வெளியிடப்படவில்லை.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது பயிற்சி மருத்துவர் ஒருவர் துர்காபூரில் உள்ள ஷிவபூர் பகுதியில் ஐகியூ சிட்டி மருத்துவக் கல்லூரியில் படித்து வந்ததார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். வெள்ளிக்கிழமை (அக்டோபர் 10) ஆண் நண்பர் ஒருவருடன் அவர் வெளியே சென்றபோது கல்லூரி வளாகக் கதவுக்கு அருகே ஆடவர்கள் சிலர் அவர்களிடம் சென்றதாகவும் அவர்கள் அந்த மாணவியைக் கல்லூரிக்கு ஒரு கிலோமீட்டர் அப்பால் உள்ள பகுதிக்குக் கொண்டு சென்று பாலியல் வன்கொடுமை இழைத்ததாகவும் அதிகாரிகள் கூறினர்.
பிறகு அந்நபர்கள் தப்பியோடியதாகவும் குறிப்பிடப்பட்டது.
ஆண் நண்பரும் இதில் சம்பந்தப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தார் கூறுகின்றனர். அந்த நண்பர், பொய் சொல்லி மாணவியைக் காலியான பகுதிக்கு அழைத்துச் சென்றார் என அவர்கள் கூறினர்.
நண்பர், மாணவியிடமிருந்து கைப்பேசியையும் 5,000 ரூபாயையும் பறித்துக்கொண்டதாகப் புகாரில் பதிவுசெய்யப்பட்டது.
பாதிக்கப்பட்ட மாணவி தற்போது துர்காபூர் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் நன்கு குணமடைந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
அப்பெண்ணுக்கு மனநல ஆலோசனை வழங்கப்படும் என்று மேற்கு வங்க பெண்கள், சிறார் மேம்பாட்டு அமைச்சரும் அந்த மாநிலத்தின் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவருமான சஷி பஞ்சா சொன்னார். மேற்கு வங்கத்தில் பெண்கள் பாதுகாப்புக்கு முதல்வர் மம்தா பானர்ஜி அரசாங்கம் பொதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று பாரதிய ஜனதா கட்சித் (பாஜக) தலைவர்களில் ஒருவரும் அதன் தகவல் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவருமான அமித் மால்வியா சாடியதாக என்டிடிவி ஊடகம் கூறியது.
மாணவியின் ஆண் நண்பர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி வருவதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
குற்றம் புரிந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேற்கு வங்கக் காவல்துறை எக்ஸ் தளத்தில் உறுதியளித்தது. உறுதிசெய்யப்படாத தகவல்களைப் பகிரவேண்டாம் என்று காவல்துறை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டது.