புதுடெல்லி: மாசு குறைந்திருப்பதால் யமுனை நதி கடந்த ஆண்டைவிட மிகவும் சுத்தமாக காணப்படுவதாக டெல்லி நீர்வளத்துறை அமைச்சர் பர்வேஷ் வர்மா தெரிவித்துள்ளார்.
வட மாநிலங்களில் ‘சத் பூசை’ நிகழ்வு நான்கு நாள்களுக்குக் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற பூசையில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். நீர் நிலைகளில் லட்சக்கணக்கான மக்கள் கூடும் நிலையில், யமுனை நதி மிகவும் மாசடைந்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி குற்றஞ்சாட்டியது.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் பர்வேஷ் வர்மா, யமுனை நதிப் பாதையின் எட்டு இடங்களில் கடந்த 9, 20ஆம் தேதிகளில் டெல்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு யமுனையின் நீர் மாதிரியை சேகரித்து பரிசோதனை செய்ததாகக் குறிப்பிட்டார்.
“யமுனை நதி நீரில் கிருமிகளின் அளவு கடந்த ஆண்டு 100 மில்லிக்கு 11 லட்சம் யூனிட்டுகளாக இருந்தது. அதுவே இந்த ஆண்டு நிஜாமுதீனில் 100 மில்லிக்கு 7,900 யூனிட்டுகளாக குறைந்துள்ளது. அதேபோல மற்ற இடங்களின் கிருமித்தாக்கம் குறைந்துள்ளது.
“ஆனால் ஆம் ஆத்மி கட்சியினர் யமுனை நதி மாசுபட்டுள்ளதாக வதந்தி பரப்பி வருகின்றனர். ஆம் ஆத்மி ஆட்சிக் காலத்தில் இதுபோன்ற நீர் மாதிரி எடுத்து பரிசோதனை அறிக்கை வெளியிடவில்லை,” என்றார் திரு பர்வேஷ் வர்மா.
முன்னதாக ஆம் ஆத்மி டெல்லி மாநிலத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான சவுரவ் பரத்வாஜ் யமுனை நதி மிகவும் மாசடைந்து காணப்படுவதாகச் சாடியிருந்தார்.
“யமுனை நதிநீர் குளிக்கக்கூட ஏற்றதல்ல. அதில் மனிதக் கழிவுகள் ஏராளமாக கலந்து இருக்கிறது,” எனத் தமது சமூக ஊடகப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

