தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மத்தியக் கிழக்கில் போர்ப் பதற்றம்: கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்கும் இந்தியா

2 mins read
c4525f0b-98df-4b95-98b4-da83dd6abc02
ஈரான் எல்லையை ஒட்டிய ஹோா்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் எண்ணெய் விநியோகத்தில் இடையூறு ஏற்படலாம் எனும் அச்சம் நிலவுகிறது. - படம்: ஊடகம்

புதுடெல்லி: இஸ்ரேல் - ஈரான் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்காவும் அதில் இணைந்துள்ளது.

மத்தியக் கிழக்கு வட்டாரங்களில் போர் பதற்றம் அதிகரித்துள்ளதால், ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் கொள்முதலைக் கணிசமான அளவு இந்தியா உயர்த்தியுள்ளது.

ஈரான் எல்லையை ஒட்டிய ஹோா்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் எண்ணெய் விநியோகத்தில் இடையூறு ஏற்படலாம் எனும் அச்சம் நிலவுகிறது.

இதனால், அதனைச் சமாளிக்க இந்தியா அம்முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்பட்டது.

உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் 20 விழுக்காட்டைக் கையாளும் ஹோர்முஸ் நீரிணை இந்தியாவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

அந்நீரிணை வழியாகவே இந்தியாவுக்குத் தேவையான 40 விழுக்காடு கச்சா எண்ணெய், 50 விழுக்காடு எரிவாயு உள்ளிட்டவற்றின் இறக்குமதி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவிலிருந்து இவ்வாண்டு ஜூனில் மட்டும் நாளொன்றுக்கு 20 முதல் 22 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்துள்ளது.

அதேபோல், அமெரிக்காவிடமிருந்து கடந்த மே மாதத்தில் நாளொன்றுக்கு 2.8 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், ஜூனில் 4.39 லட்சம் பீப்பாயாக அதிகரித்துள்ளது.

உலகின் மூன்றாவது பேரளவு எண்ணெய் இறக்குமதி நாடான இந்தியா, இவ்வாண்டு ஜூன் மாதத்தில் இதுவரை நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 51 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கியுள்ளது.

இதுவரை எண்ணெய் விநியோகத்தில் எந்தவொரு பாதிப்பும் இல்லையென்றாலும், மோதல் தீவிரமடையும் பட்சத்தில் ஹோா்முஸ் நீரிணையை ஈரான் மூடலாம் என்றும் சொல்லப்படுகிறது.

இதன்மூலம், கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 400 டாலா் வரை உயரலாம் என்று முன்னுரைக்கப்படுகிறது.

சீனாவும் அதன் எண்ணெய் தேவைக்கு மத்தியக் கிழக்கு நாடுகளையே நம்பியுள்ளது.

முன்பு எண்ணெய் தேவைக்கும் மத்தியக் கிழக்கு நாடுகளையே நம்பியிருந்த இந்தியா, கடந்த 2022ஆம் ஆண்டு உக்ரைன் படையெடுப்புக்குப் பிறகு ரஷ்யாவிடமிருந்து அதிக அளவு எண்ணெய்யை இறக்குமதி செய்யத் தொடங்கியது.

மேற்கத்தியத் தடைகள் காரணமாக ரஷ்ய எண்ணெய் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது கழிவு விலையில் கிடைப்பதும் இதற்கு முக்கியக் காரணம்.

குறுகிய காலத்தில், ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதி 1 விழுக்காட்டிலிருந்து 40 - 44 விழுக்காடாக உயா்ந்தது.

மத்தியக் கிழக்கு நாடுகளின் எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டால், ரஷ்யாவுடன் சேர்த்து அமெரிக்கா, நைஜீரியா, அங்கோலா, பிரேசில் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

குறிப்புச் சொற்கள்