புதுடெல்லி: வாக்காளர்கள் இனி வாக்காளர் அடையாள அட்டைக்காக நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய தேவையில்லை.
வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்பட்ட 15 நாள்களில், புதிய வாக்காளர் அடையாள அட்டையைப் பெற முடியும் என்றும் இதற்காகப் புதிய முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்றும் இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் வாக்காளர் அடையாள அட்டை முக்கியச் சான்று ஆவணமாக உள்ளது. பல இடங்களில் வாக்காளர் அட்டை குடிமக்களுக்கான அடையாள ஆவணமாக இருப்பதால் அதன் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், வாக்காளர் அடையாள அட்டையைப் பெறுவதில் கால தாமதம் ஏற்படுவதாக பல்வேறு தரப்பினரும் கூறிவந்தனர்.
இதையடுத்து, புதிய முறையை அறிமுகப்படுத்தி உள்ளது தேர்தல் ஆணையம். அதன்படி, வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்பட்ட 15 நாள்களுக்குள் வாக்காளர் புகைப்பட அட்டைகளை வழங்க முடியும்.
இதில் ஒரு வாக்காளர் புதிதாக விவரங்களைச் சேர்ப்பது அல்லது ஏற்கெனவே உள்ள வாக்காளர்களின் விவரங்களில் ஏதேனும் மாற்றம் செய்வது சாத்தியமாகும்.
“இது புதிதாகப் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களுக்கும் தங்கள் விவரங்களைப் புதுப்பிக்கும் ஏற்கெனவே உள்ள வாக்காளர்களுக்கும் பொருந்தும்.
“புதிய முறையில், வாக்காளர் பதிவு அதிகாரியால் அஞ்சல் துறை மூலம் வாக்காளருக்கு அட்டை வழங்கப்படும் வரை, ஒவ்வொரு கட்டத்தையும் நிகழ்நேரக் கண்காணிப்பை உறுதி செய்யும் வகையில், வாக்காளர்களுக்கு குறுந்தகவல் மூலம் அறிவிப்புகள் வழங்கப்படும்,” எனத் தேர்தல் ஆணையம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.