ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் நியாயமானவை: சசி தரூர் பாராட்டு

3 mins read
1509ab84-998d-48ea-aa8c-735901dadb80
சீர்திருத்தங்கள் சாதாரண மக்களுக்குப் பெரும் நிம்மதியைத் தரும் என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் நம்பிக்கை தெரிவித்தார்.  - படம்:ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: இந்திய அரசாங்கம் அண்மையில் அறிவித்த பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) சீர்திருத்தங்கள் நியாயமானவை என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் பாராட்டியுள்ளார்.

இந்தச் சீர்திருத்தங்கள் சாதாரண மக்களுக்குப் பெரும் நிம்மதியைத் தரும் என்றும் அனைவருக்கும் இது சிறந்ததாக அமையும் என்றும் திரு தரூர் கூறினார். 

ஞாயிற்றுக்கிழமை ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய திரு தரூர், ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்ததாகக் கூறினார்.

“காங்கிரஸ் கட்சியினரிடம் நாங்கள் பல ஆண்டுகளாக இதைக் கேட்டு வருகிறோம். நான்கு விகிதங்களிலிருந்து இரண்டாகக் குறைக்கப்பட வேண்டும் அல்லது ஒரு நாள் ஒரே ஒரு விகிதமாக இருக்க வேண்டும் என்று எங்கள் தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். 

“ஏனெனில், இந்த நான்கு விகிதங்கள் மக்களுக்கு நியாயமற்றதாக இருந்தன. இது குழப்பமானதாகவும், சிக்கலானதாகவும் இருந்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை. இப்போது இது மிகவும் நியாயமான முறை என்று நான் நினைக்கிறேன். இது அனைவருக்கும் மிகவும் சிறந்ததாக அமையும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அந்த நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் அழுத்தம் அதிகரித்துள்ளதாகவும் தேர்தல் நெருங்குவதால் மத்திய அரசு ஜிஎஸ்டி சீர்திருத்தங்களைச் செயல்படுத்தியதாகவும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்னதாககுற்றம் சாட்டினார்.

இந்திய இறக்குமதிகளின்மீது அமெரிக்கா வரி விதித்ததையடுத்து, பிரதமர் நரேந்திர மோடியையும் திரு கார்கே குறைகூறினார்.

“நேருவின் காலத்திலிருந்தே நாம் அணிசேராக் கொள்கையைப் பின்பற்றி வருகிறோம். ஆனால், பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தபோது, ‘டிரம்ப் என் நண்பர்’ போன்ற வாசகங்களைக் கூறி வந்தார். பின்னர் திரு டிரம்ப் வெளியிட்ட அறிக்கைகள் நாட்டிலும் உலகிலும் சூழலைக் கெடுத்தன. இவர்கள் நமது வெளியுறவுக் கொள்கையைச் சரியாகச் செயல்படுத்தவில்லை,” என்று கார்கே கூறினார்.

செப்டம்பர் 3ல் நடைபெற்ற 56ஆவது ஜிஎஸ்டி மன்றக் கூட்டத்தில், பொருள் சேவை வரி இரண்டு விகிதங்களாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

12 விழுக்காடு மற்றும் 28 விழுக்காடு ஜிஎஸ்டி விகிதங்களை ஒன்றிணைத்து, 5 விழுக்காடு மற்றும் 18 விழுக்காடு என இரண்டு விகிதங்களாக மாற்றி அமைக்க முடிவெடுக்கப்பட்டது.

5 விழுக்காடு ஜிஎஸ்டி விகிதம் அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் சேவைகளான, வெண்ணெய், நெய், பாலாடைக் கட்டிகள், பால் பொருள்கள், உணவுப் பண்டங்களான ‘பஜ்ஜியா’, ‘மிக்சர்ஸ்’ மற்றும் சமையலறைப் பாத்திரங்கள், வேளாண்மை துணைக்கருவிகள், கைவினைப் பொருள்கள், சிறு-குறுந்தொழில் நிறுவனங்களின் தயாரிப்புகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் நோயறிதல் கருவிகள் ஆகியவற்றை உள்ளடக்கியது.

18 விழுக்காடு ஜிஎஸ்டி விகிதம் பெரும்பாலான பொருள்கள் மற்றும் சேவைகளுக்கான பொதுவான விகிதமாகப் பொருந்தும். இதில், சிறிய கார்கள், 350சிசி-க்கு உட்பட்ட மோட்டார் சைக்கிள்கள், மின்னணுப் பொருள்கள், வீட்டுப் பொருள்கள் மற்றும் சில தொழில்முறைச் சேவைகள் ஆகியவை அடங்கும். அனைத்து மோட்டார் வாகனபாகங்களுக்கும் ஒரே மாதிரியான 18 விழுக்காடு விகிதம் பொருந்தும்.

மேலும், புகையிலை, பான் மசாலா, சிகரெட்டுகள், பீடிகள், காற்றூட்டப்பட்ட சர்க்கரை பானங்கள், சொகுசு வாகனங்கள், 350சிசி-க்கு மேற்பட்ட உயர்தர மோட்டார் சைக்கிள்கள், சொகுசுப் படகுகள் உள்ளிட்ட பொருள்களுக்கு 40 விழுக்காடு ஜிஎஸ்டி விகிதம் விதிக்கப்படுகிறது.

தனிநபர் உடல்நலக் காப்பீடு, குடும்ப சுகாதாரக் காப்பீடு, ஆயுள் காப்பீடு ஆகியவற்றுடன் கல்வி மற்றும் சுகாதாரத்துடன் தொடர்புடைய  அத்தியாவசிய சேவைகளுக்கும் கல்வி சார்ந்த பொருள்களுக்கும் ஜிஎஸ்டி வரிவிதிப்பிலிருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
ஜிஎஸ்டிகாங்கிரஸ்வரிநாடாளுமன்ற உறுப்பினர்