தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சாலையில் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபியின் மகன் - காங்கிரஸ் தலைவர் மோதல்

2 mins read
2d7d3f48-fe79-4d25-b8b2-714053f0f93d
புகார் எதுவும் அளிக்கப்படாததால் மாதவ் சுரேஷ் விடுவிக்கப்பட்டார். - படம்: இன்ஸ்டகிராம் / மாதவ் சுரேஷ்

திருவனந்தபுரம்: காங்கிரஸ் தலைவர் வினோத் கிருஷ்ணாவுடன் சாலையில் ஏற்பட்ட மோதலையடுத்து, நடிகரும் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபியின் மகனுமான மாதவ் சுரேஷை வியாழக்கிழமை (ஆகஸ்ட் 21) இரவு காவல்துறை பிடித்துச் சென்றது.

ஆயினும், மாதவ் மது அருந்தியிராதது மருத்துவச் சோதனையில் உறுதிப்படுத்தப்பட்டதால் சிறிது நேரத்தில் விடுவிக்கப்பட்டார். அவர்மீது முறையான புகாரும் பதிவுசெய்யப்படவில்லை.

கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தின் சாஸ்தாமங்கலத்தில் இரவு 11 மணியளவில் அவர்களுக்குள் வாக்குவாதம் மூண்டதாகச் சொல்லப்படுகிறது.

மாதவ் தம் வீட்டிலிருந்து காரில் கிளம்பி வெள்ளையம்பலம் நோக்கிச் சென்றதாகக் கூறப்பட்டது. அப்போது, கேரள மாநில காங்கிரஸ் குழு உறுப்பினர் வினோத் கிருஷ்ணா எதிர்த்திசையில் காரில் வந்தார். இருவரின் காரும் கிட்டத்தட்ட மோதிக்கொள்ளும் நிலை ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

அதனால், இருவரும் காரைவிட்டு இறங்கி, கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அது கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் நீடித்ததால் பரபரப்பான சாலைச் சந்திப்புப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனையடுத்து, வினோத் காவல்துறைக்குத் தகவல் அளித்தார். மதுபோதையில் மாதவ் காரோட்டி வந்ததாக அவர் குற்றஞ்சாட்டினார். அதனைத் தொடர்ந்து, மருத்துவப் பரிசோதனைக்காக மாதவ்வைக் காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.

வினோத்தும் காவல் நிலையத்திற்கு வரும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார். மருத்துவச் சோதனையில் மாதவ் மது அருந்தவில்லை என்பது உறுதியானது.

அதன்பின் இருதரப்பினர்க்கும் இடையே காவல்துறையினர் சமரச முயற்சியில் ஈடுபட்டனர். இறுதியில், அந்த விவகாரத்தை மேலும் தொடர விரும்பவில்லை என்று வினோத் எழுதிக் கொடுத்தார்.

புகார் எதுவும் அளிக்கப்படாததால், காவல்துறை வழக்கை முடித்துக்கொண்டது. அன்றிரவே மாதவ் விடுவிக்கப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்