புதுடெல்லி: செங்கோட்டைக்கு அருகே திங்கட்கிழமை (நவம்பர் 10) நடந்த குண்டுவெடிப்பில், ஐ20 காரை ஓட்டிச்சென்றது டாக்டர் உமர் முகம்மதுதான் என்பது மரபணுச் சோதனைகளில் உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதில் பலர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமுற்றனர். சம்பவம் குறித்த விசாரணையை இந்தியாவின் தேசியப் புலனாய்வு அமைப்பு மேற்கொண்டுள்ளது.
டாக்டர் உமர், ஃபாரிதாபாத்தில் உள்ள அல் ஃபாலா மருத்துவக் கல்லூரியில் மூத்த மருத்துவராகப் பணியாற்றிவந்தார். உமரின் மரபணு மாதிரி, அவருடைய அம்மா, சகோதரருடன் 100 விழுக்காடு பொருந்துவதாகக் கூறப்பட்டது. காரில் கண்டெடுக்கப்பட்ட உமரின் எலும்புகள், பற்கள், உடையின் சில பகுதிகளுடன் மரபணு ஒத்துப்போனது.
முன்னதாக உமரின் தாயார், மரபணுச் சோதனைக்காகப் புல்வாமா நகரில் தடுத்துவைக்கப்பட்டார்.
வெடிப்புக்குப் பிறகு, அன்றிரவே அவரின் இரு சகோதரர்களும் விசாரணைக்காகத் தடுத்துவைக்கப்பட்டனர்.
ஹரியானாவில் இரண்டு குடியிருப்புக் கட்டடங்களில் ஏறக்குறைய 3,000 கிலோகிராம் வெடிபொருள்களை ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினர் கைப்பற்றிய ஒருசில மணிநேரத்தில் குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்தது. அதனைத் தொடர்ந்து, டாக்டர் முஸாம்மில் ஷக்கீல் என்பவரைக் காவல்துறையினர் கைதுசெய்தனர். அவர், நிபுணர்கள் பலரைக் கொண்ட பயங்கரவாதக் கட்டமைப்பின் முக்கிய நபர் என்பது தெரியவந்தது.
ஷக்கீலும் அல் ஃபாலா மருத்துவக் கல்லூரியில் பணிபுரிந்தார். டாக்டர் அடில் ராத்தர் என்பவர் கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் பிடிபட்டார். உத்தரப்பிரதேசத்தின் சஹரான்பூரில் வசித்த அடில், தடைசெய்யப்பட்ட ஜெய்ஷ்-இ-முகம்மது பயங்கரவாத அமைப்பின் பதாகைகளை வைத்ததற்காகக் கைதானார்.
ஷக்கீலும் ராத்தரும் பிடிபட்டதால் பதற்றம் அடைந்த உமர், செங்கோட்டைக்கு அருகே காரில் இருந்த குண்டுகளை வெடிக்கச்செய்ததாகக் கூறப்படுகிறது.
வெடிப்புக்கு ஒருசில மணிநேரத்திற்கு முன்பு, உமர், செங்கோட்டைக்கு அருகே இருந்த பள்ளிவாசலுக்குச் சென்று தொழுதது கண்காணிப்புப் படக்கருவியில் தெரியவந்தது. அவர் அங்கு மூன்று மணி நேரம் இருந்தார் என்றும் பின்னர் செங்கோட்டையை நோக்கிச் சென்றார் என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

