பிள்ளையார் சிலையைக் கரைத்துவிட்டுத் திரும்பியபோது விபத்து

பிரிட்டன் விபத்தில் இந்திய மாணவர்கள் இருவர் மரணம்

1 mins read
3dd1b1e9-a5dc-4c74-a7e3-5a631f06b27e
விபத்தில் உயிரிழந்த சைதன்யா (இடது), ரிஷிதேஜா. - படங்கள்: எக்ஸ்
multi-img1 of 2

எசெக்ஸ்: பிரிட்டனின் எசெக்ஸ் பகுதியில் திங்கட்கிழமை (செப்டம்பர் 1) நேர்ந்த ஒரு சாலை விபத்தில் இந்திய மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர்.

பிள்ளையார் சதுர்த்தி கொண்டாடிவிட்டுத் திரும்பியபோது விபத்து நேர்ந்ததாகக் கூறப்பட்டது. மாணவர்கள் சென்ற இரு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதியதாக உள்ளூர் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. உள்ளூர் நேரப்படி அதிகாலை 4.15 மணியளவில் விபத்து நேர்ந்தது.

இவ்விபத்தில் ஒன்பது மாணவர்கள் காயமுற்றனர். அவர்களில் ஹைதராபாத்தைச் சேர்ந்த சைதன்ய தாரே, 23, ரிஷிதேஜா ரபோலு, 21, ஆகியோர் உயிரிழந்துவிட்டனர்.

முதுநிலைப் பட்டம் பயில்வதற்காகக் கடந்த எட்டு மாதங்களுக்குமுன் லண்டன் சென்ற சைதன்யா, சம்பவ இடத்திலேயே இறந்தார். ரிஷிதேஜா மருத்துவமனையில் உயிரிழந்தார்.

வாகனங்களை ஓட்டிச் சென்ற கோபிசந்த் பத்தமேகலா, மனோகர் சபானி என்ற இருவரையும் பிரிட்டிஷ் காவல்துறை கைதுசெய்தது. பின்னர் அவ்விருவரும் நவம்பர் 20ஆம் தேதிவரை பிணையில் விடுவிக்கப்பட்டதாக ‘டெய்லி மெயில்’ செய்தி தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இறந்த இரு மாணவர்களின் உடல்களையும் இந்தியாவிற்குக் கொண்டுவர விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி அவர்களின் குடும்பத்தினர் மத்திய, மாநில அரசுகளுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே, உயிரிழப்பை ஏற்படுத்திய விபத்தால் வருத்தத்தில் ஆழ்ந்துள்ளதாக பிரிட்டனில் உள்ள இந்திய தேசிய மாணவர், முன்னாள் மாணவர் சங்கம் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

விபத்தில் தொடர்புடைய ஒன்பது மாணவர்களும் தெலுங்குச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்