புதுடெல்லி: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்கள் மீது விதித்துள்ள வரி தொடர்பில் சீனா, இந்தியாவுக்குப் பக்கபலமாக நிற்பதாக சீனத் தூதர் ஒருவர் கூறியுள்ளார்.
அண்மைக் காலமாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு மேம்பட்டுவருகிறது. அதன் அறிகுறியாக அவரின் இக்கருத்து பார்க்கப்படுகிறது.
இந்தியாவுக்கான சீனத் தூதர் ஸு ஃபெய்ஹோங், “அமெரிக்கா, இந்தியப் பொருள்கள் மீது 50 விழுக்காடு வரை வரிவிதித்துள்ளது. அதற்கும் மேல் வரிவிதிக்கப்படலாம் என்றும் அமெரிக்கா எச்சரித்திருக்கிறது. சீனா இதை வன்மையாகக் கண்டிக்கிறது,” என்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 22) கூறினார்.
“உலக வர்த்தக அமைப்பை மையமாகக் கொண்டு பலதரப்பட்ட வர்த்தக முறையை நிலைநாட்ட சீனா, இந்தியாவுக்கு ஆதரவாகப் பக்கபலமாக நிற்கும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
திரு டிரம்ப்பின் அரசாங்கத்துக்கும் இந்தியா, சீனா இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மோசமடைந்துள்ளது. அதனைத் தொடர்ந்து புதுடெல்லியும் பெய்ஜிங்கும் தங்களுக்கிடையிலான உறவை மறுசீரமைப்பு செய்துகொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளன.
அண்டை நாடுகளான இந்தியாவும் சீனாவும் சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதிகளில் நிலைமையைச் சீராக்கிக்கொள்ள இவ்வாரம் ஒப்புக்கொண்டன. சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டபோது இருதரப்பும் அதற்கு இணங்கின.
மூவாண்டுகளில் முதன்முறையாக அவர் இந்தியாவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டார். இம்மாத இறுதியில் சீனாவின் டியான்ஜின் நகரில் ஷாங்காய் வர்த்தக அமைப்புச் சந்திப்பு நடைபெறவுள்ளது. அதுகுறித்து இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் நடந்த கலந்துரையாடலில் திரு ஸு பேசினார்.
ஷங்காய் வர்த்தக அமைப்புச் சந்திப்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பார் என்றும் அவர் சீன அதிபர் ஸி ஜின்பிங்கைச் சந்திப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுவே ஏழு ஆண்டுகளில் திரு மோடி சீனாவுக்கு மேற்கொள்ளும் முதல் அதிகாரத்துவப் பயணமாகும்.