தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜூலை 9ஆம் தேதிக்குள் இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம்: டிரம்ப்

2 mins read
618db8a2-50f9-42e2-8f21-b69840a47f70
அமெரிக்கா சென்றுள்ள இந்தியக் குழு பேச்சுவார்த்தைக்காக அங்கு கூடுதல் நாள்கள் தங்கியிருப்பதாகத் தெரிவித்தது. - கோப்புப்படம்: ஊடகம்

புதுடெல்லி: இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தம் ஜூலை 9ஆம் தேதிக்குள் இறுதியாகும் என அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஜூலை 9ஆம் தேதிக்குப் பிறகு உலகளாவிய வரிகள் தொடர்பாக அமெரிக்கா அறிவித்திருந்த இடைநிறுத்தத்தை நீட்டிக்கத் தேவையில்லை என்றும் அதற்காக தாம் திட்டமிடவில்லை என்றும் அவர் கூறினார்.

முன்னதாக, அமெரிக்கா சென்றுள்ள இந்தியக் குழு பேச்சுவார்த்தைக்காக அங்கு கூடுதல் நாள்கள் தங்கியிருப்பதாகத் தெரிவித்தது.

எனவே, ஜூன் 28ஆம் தேதிக்குள் இருதரப்புக்கும் இடையே இடைக்கால ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்புள்ளதாக ப்ளூம்பெர்க் குறிப்பிட்டிருந்தது.

இந்தியாவுக்கு அறிவிக்கப்பட்ட 27 விழுக்காடு வரியை முழுமையாக நீக்க கோரப்பட்டுள்ளது.

அமெரிக்கா அறிவித்துள்ள காலக்கெடுவான ஜூலை 9ஆம் தேதிக்குள் பேச்சுவார்த்தை சாதகமாக முடியவில்லை என்றால், புதுப்பிக்கப்பட்ட வரிச்சுமையை இந்தியா எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

இந்நிலையில், இந்தக் காலக்கெடுவை நீட்டிப்பதற்கு அமெரிக்கா திட்டமிடவில்லை என அதிபர் டிரம்ப் ஃபாக்ஸ் நியூஸ் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.

அவ்வாறு செய்ய வேண்டிய அவசியம் இருப்பதாக தாம் கருதவில்லை என்றும் தம்மால் அதற்கு முன்பாகவே பேச்சுவார்த்தைகளை முடிக்க இயலும், அது தமக்கு பெரிய விஷயமல்ல என்றும் அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

“சம்பந்தப்பட்ட நாடுகள் அமெரிக்காவை எவ்வாறு நடத்துகிறது, அவை நல்ல நாடுகளா என்பதைக் கவனிப்போம். சில நாடுகள் குறித்து கவலைப்படவில்லை,” என்றார் டிரம்ப்.

இருநூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அனைத்து நாடுகளுடனும் பேச இயலாது என்றார்.

90 நாள்களில் 90 வர்த்தக ஒப்பந்தங்களை எட்ட வேண்டும் என்பதை அதிபர் டிரம்ப் நிர்வாகம் இலக்காகக் கொண்டுள்ளது.

இந்தியாவின் விவசாயச் சந்தையை அமெரிக்கா குறி வைத்திருப்பதாக இந்திய சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். இந்திய விவசாயச் சந்தையை மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்குத் திறக்க வேண்டும் என்று அமெரிக்க அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

எனினும், இது தொடர்பான அழுத்தங்களை புறந்தள்ளியுள்ள இந்திய அரசு, சந்தையைத் திறக்க மறுத்துவிட்டது.

இந்த நடவடிக்கையால் இந்திய விவசாயிகளுக்கு ஆபத்து ஏற்படும் என்றும் புதுடெல்லி நிர்வாகம் கூறுகிறது. இதுபோன்ற அம்சங்களை உள்ளடக்காத ஒப்பந்தத்தில் கையெழுத்திட இயலாது என்பதே இந்தியாவின் நிலைப்பாடாக உள்ளது.

இத்தகைய சூழலில் இந்தியாவுடன் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பெரிய ஒப்பந்தம் ஏற்படும் என அதிபர் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

விவசாயம், பால், எரிசக்தி போன்ற துறைகளைத் திறக்கவும், சோயா, கோதுமை, சோளம், எத்தனால், ஆப்பிள் போன்ற பொருள்களுக்கான வரிகளைக் குறைக்வும் அமெரிக்கா இந்தியாவை வலியுறுத்துகிறது.

குறிப்புச் சொற்கள்