பேரா (மொசாம்பிக்): ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கின் பேரா துறைமுகப் பகுதியில் நேர்ந்த படகு விபத்தில் இந்தியர் ஐவர் உயிரிழந்தனர்.
மேலும் ஐவர் என்னவாயினர் எனத் தெரியாத நிலையில் அவர்களைத் தேடும் பணி நடந்து வருவதாக மொசாம்பிக் நாட்டிற்கான இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
வழக்கம்போல் கடலுக்குள் இருந்த கொள்கலன் கப்பலுக்குப் பணியாளர்களை மாற்றியபோது இவ்விபத்து நேர்ந்தது. 14 இந்தியர்களுடன் சென்ற படகு கவிழ்ந்ததாகக் கூறப்பட்டது. அதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
கடலுக்குள் விழுந்தவர்களில் ஐவர் மீட்கப்பட்டு பாதுகாப்பாக இருப்பதாகவும் ஒருவர் பேரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தூதரகம் தெரிவித்தது.
மாயமான மற்ற ஐந்து இந்தியர்களைத் தேடும் பணியைத் தொடர உள்ளூர் அதிகாரிகளுடனும் கடல்துறை அமைப்புகளுடனும் அது ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது.
“மூன்று இந்தியர்கள் உட்பட உயிரிழந்தோரின் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறோம். அவர்களுக்கு ஆன உதவிகளைச் செய்து வருகிறோம்,” என்று இந்தியத் தூதரகம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
நிலைமையை அணுக்கமாகக் கண்காணித்து வருவதாகவும் அது தெரிவித்துள்ளது.