நூற்றுக்கணக்கான மரங்களை தனது குழந்தைகள் போல் வளர்த்த திம்மக்கா காலமானார்

2 mins read
f1cfb167-876e-46fb-8084-7119ab66aca6
பத்மஸ்ரீ விருது பெற்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் சாலுமரத திம்மக்கா. - படம்: பிடிஐ

பெங்களூரு: பல்லாண்டு காலமாக விடாமுயற்சியுடன் மரங்களை நட்டு, இந்தியாவின் பாராட்டுக்குரிய சுற்றுச்சூழல் ஆளுமைகளில் ஒருவராக அறியப்பட்டவர் சாலுமரத திம்மக்கா.

இவர், வெள்ளிக்கிழமை (நவம்பர் 14) பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வயது முதிர்வு காரணமாக காலமானார். அவருக்கு வயது 114.

துமகுரு மாவட்டத்தில் உள்ள குப்பி தாலுக்காவில் 1911ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு முறையான பள்ளிப்படிப்பு இல்லை.

காலப்போக்கில் குழந்தை பாக்கியமும் இல்லாமல் போகவே, அந்த ஏக்கத்தைப் போக்கும் வகையில் மரக்கன்றுகளை நடத் தொடங்கினார்.

பல ஆண்டுகளாக, அவர் தன் சொந்த குழந்தைகளைப் போலவே பாசத்துடனும் கவனிப்புடனும் இளம் மரங்களை வளர்த்தார்.

அவரது இந்த அர்ப்பணிப்பு கர்நாடகத்தின் ஒரு பகுதியை மாற்றியமைத்தது.

பெங்களூருவின் ஹுலிகல் மற்றும் குதூர் ஆகிய இடங்களுக்கு இடையே சுமார் 4.5 கிலோமீட்டர் தூரப் பாதையில் 385 ஆலமரங்களை நட்டு வளர்த்தார். அதன்பின்னர், அவர் ‘சாலுமரத’ (மரம் நிறைந்த வரிசை) திம்மக்கா என்ற பெயரில் பரவலாக அறியப்பட்டார்.

திம்மக்கா, 2019ல் உயரிய பத்மஸ்ரீ விருது, 2010ல் ஹம்பி பல்கலைக்கழகத்தின் நாடோஜா விருது, 1995ல் தேசிய குடிமக்கள் விருது, 1997ல் இந்திரா பிரியதர்ஷினி விருட்சமித்ரா விருது உள்ளிட்ட பல்வேறு கௌரவங்களைப் பெற்றுள்ளார்.

அவரது மறைவுச் செய்தி கேட்டதும் பல தரப்பிலிருந்தும் இரங்கல்கள் குவிந்தன.

திம்மக்காவின் மறைவு குறித்து ஆழ்ந்த வருத்தம் தெரிவித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, தனது வாழ்நாள் முழுவதையும் ஆயிரக்கணக்கான மரங்களை நடுதல், பாதுகாப்பதில் திம்மக்கா செலவிட்டார் என்று புகழாரம் சூட்டினார்.

இயற்கையுடனான அவரது பிணைப்பு அவரை ‘அழியாப் புகழ்’ பெறச் செய்துவிட்டது என்றும் அவரது இழப்பால் மாநிலம் ‘ஏழையாகிவிட்டது’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்