புதுடெல்லி: பயங்கரவாதத்தை அறவே சகித்துக்கொள்ள இயலாது என்ற உலகளாவிய அணுகுமுறையை இந்தியாவும் இஸ்ரேலும் மீண்டும் உறுதி செய்துள்ளன.
இந்த அணுகுமுறையைப் பின்பற்றுவதிலும் பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் எதிர்ப்பதிலும் சகிப்புத்தன்மைக்கு இடமில்லை என்பதில் இரு நாடுகளும் தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் பதிவு செய்துள்ளன.
இரண்டு நாள் இந்தியப் பயணமாக புதுடெல்லி வந்துள்ள இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் கிடியோன் சார் குழுவினருடன் வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதன் பின்னர் இந்திய வெளியுறவு அமைச்சு வெளியிட்ட செய்திக்குறிப்பில் பயங்கரவாதத்தை வேரறுப்பதில் இருதரப்பின் நிலைப்பாடு விவரிக்கப்பட்டிருந்தது.
இந்தியா-இஸ்ரேல் இடையேயான உத்திபூர்வ பங்காளித்துவத்தை உள்ளடக்கிய உற்பத்தி, விரிவான விவாதங்களை இரு அமைச்சர்களும் நடத்தியதாக அமைச்சின் அறிக்கை தெரிவிக்கிறது.
அரசியல், பாதுகாப்பு, விவசாயம், வர்த்தகம் மற்றும் முதலீடு, பாதுகாப்பு மற்றும் குடிமக்கள் இடையேயான உறவுகள் குறித்த அம்சங்கள் குறித்து இருதரப்பும் ஆலோசனை நடத்தின. மேலும் முக்கியமான, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், பகுதி மின்கடத்திகள், இணையப் பாதுகாப்பு, ஏஐ உள்ளிட்ட துறைகளில் நீடித்து வரும் ஒத்துழைப்பையும் அவர்கள் மதிப்பாய்வு செய்ததாக இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
மேற்கு ஆசியா மற்றும் வளைகுடாவின் முன்னேற்றங்கள் குறித்த இஸ்ரேலின் கண்ணோட்டத்தையும் கருத்துகளையும் திரு சர் பகிர்ந்துகொண்டார் என்றும் காசா அமைதித் திட்டத்திற்கு இந்தியாவின் ஆதரவை வெளியறவு அமைச்சர் ஜெய்சங்கர் வெளிப்படுத்தினார் என்றும் அந்த அமைச்சு கூறியது.
இஸ்ரேல் பணயக்கைதிகள் திரும்புவதை வரவேற்ற நிலையில், அமைதித் திட்டமானது நீடித்த தீர்வுக்கு வழிவகுக்கும் என்றும் திரு ஜெய்சங்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
இந்தச் சந்திப்பின்போது, சுஷ்மா ஸ்வராஜ் வெளியுறவு சேவை நிறுவனத்துக்கும் இஸ்ரேல் வெளியுறவு அமைச்சுக்கும் இடையே பயிற்சி குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதாக இந்திய வெளியுறவு அமைச்சு செய்திக்குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

