ஹைதராபாத்: கடைகள் தவிர்த்த மற்ற வணிக நிறுவனங்களில் வேலை நேரத்தை எட்டு மணி நேரத்திலிருந்து பத்து மணி நேரமாக உயர்த்த இந்தியாவின் தெலுங்கானா மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.
அதே நேரத்தில், ஊழியர்களின் வேலை நேரம் ஒரு வாரத்திற்கு 48 மணி நேரத்தைத் தாண்டக்கூடாது.
இதன் தொடர்பில் தொழிலாளர் நலத்துறையின் முதன்மைச் செயலாளர் எம். தனகிஷோர் சனிக்கிழமை (ஜூலை 5) ஆணை ஒன்றைப் பிறப்பித்துள்ளார்.
இதனையடுத்து, ஹோட்டல்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வாரத்தின் முற்பகுதியில் ஊழியர்களை நாளொன்றுக்குப் பத்து மணி நேரமும் பிற்பகுதியில் நாளொன்றுக்கு எட்டு மணி நேரமும் வேலை செய்யச் சொல்லலாம்.
வாராந்தர வேலை நேரம் 48 மணி நேரத்தைத் தாண்டினால் ஊழியர்களுக்கு மிகைஊதியம் வழங்கப்பட வேண்டும்.
மேலும், எந்த ஊழியரையும் இடைவேளை இல்லாமல் ஆறு மணி நேரத்திற்குமேல் தொடர்ச்சியாக வேலைசெய்யும்படி பணிக்கக்கூடாது. அத்துடன், ஒரு நாளுக்கான வேலை நேரம் 12 மணி நேரத்தைத் தாண்டக்கூடாது.
இந்த ஆணை ஜூலை 8ஆம் தேதியிலிருந்து நடப்பிற்கு வரும்.
இதனிடையே, தொழிற்சாலைகளிலும் வேலை நேரத்தை உயர்த்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
தொடர்புடைய செய்திகள்
முன்னதாக, ஆந்திர மாநிலம் வேலை நேரத்தை ஒன்பது மணி நேரத்திலிருந்து பத்து மணி நேரமாக உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.