புதுடெல்லி: நீடித்த நிலைத்தன்மை தொடர்பான இலக்குகளை (எஸ்டிஜி) அடைந்த நாடுகள் பட்டியலில் இந்தியா முதன்முறையாக முதல் 100 இடங்களுக்குள் வந்துள்ளது.
செவ்வாய்க்கிழமை (ஜூன் 24) வெளியிடப்பட்ட எஸ்டிஜி குறியீட்டு அறிக்கையில் இத்தகவல் தெரியவந்துள்ளது என என்டிடிவி ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
ஐக்கிய நாட்டு சபை (ஐநா) நீடித்த நிலைத்தன்மைத் தீர்வுக் கட்டமைப்பின் நீடித்த நிலைத்தன்மை மேம்பாட்டு அறிக்கையின்படி (எஸ்டிஆர்) எஸ்டிஜி குறியீட்டுப் பட்டியலில் இந்தியா 67 புள்ளிகளுடன் 99வது இடத்தைப் பிடித்துள்ளது. 74.4 புள்ளிகள் பெற்றுள்ள சீனா 49வது இடத்தையும் 75.2 புள்ளிகள் பெற்றுள்ள அமெரிக்கா 44வது இடத்தையும் பெற்றுள்ளது.
இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் 140வது இடத்தில் உள்ளது. கடல்துறையைப் பொறுத்தவரை இந்தியாவின் அண்டை நாடுகளான மாலத் தீவுகள் 53வது இடத்தையும் இலங்கை 93வது இடத்தையும் வகிக்கின்றன.
ஐநா நீடித்த நிலைத்தன்மைத் தீர்வுக் கட்டமைப்பு 10வது முறையாக இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. மொத்தம் 193 நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
உலகளவில் எஸ்டிஜி தொடர்பான முன்னேற்றம் தேங்கியிருப்பதாக அறிக்கையை வரைந்தவர்கள் தெரிவித்தனர். 2015ஆம் ஆண்டு ஐநா உறுப்பு நாடுகள் ஏற்றுக்கொண்ட 17 இலக்குகளில் 17 விழுக்காட்டு இலக்குகள் மட்டுமே 2030ஆம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்படக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
எஸ்டிஜி குறியீட்டுப் பட்டியலில் ஐரோப்பிய நாடுகள், குறிப்பாக நோர்டிக் வட்டார நாடுகள், தொடர்ந்து முன்னணி வகிக்கின்றன. நோர்டிக் நாடுகளான ஃபின்லாந்து, சுவீடன், டென்மார்க் ஆகியவை முதல் மூன்று இடங்களை வகிக்கின்றன. முதலிடத்தில் ஃபின்லாந்தும் இரண்டாவது இடத்தில் சுவீடனும் மூன்றாவது இடத்தில் டென்மார்க்கும் இருக்கின்றன.
பட்டியலின் முதல் 20 இடங்களில் இருப்பது 19 ஐரோப்பிய நாடுகளாகும். எனினும், அந்நாடுகளும் இதன் தொடர்பில் சிரமப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
எஸ்டிஜியைப் பொறுத்தவரை 2015ஆம் ஆண்டிலிருந்து கிழக்கு, தெற்காசிய நாடுகள்தான் இதர வட்டார நாடுகளைவிட அதிக முன்னேற்றம் அடைந்துவருகின்றன. நேப்பாளம், கம்போடியா, பிலிப்பீன்ஸ், பங்ளாதேஷ், மங்கோலியா ஆகிய நாடுகள்தான் ஆக அதிக அளவில் முன்னேற்றம் கண்டுள்ளன.