உளவாளி எனச் சந்தேகம்; பாகிஸ்தானுக்குச் சென்றுவந்தவர் கைது

2 mins read
67bebb98-98a1-4d61-af42-726cc9db2380
கைதுசெய்யப்பட்ட ஆடவர் வெளிநாட்டைச் சேர்ந்த அணுவியல் வல்லுநர் ஒருவருடன் தொடர்பில் இருந்ததாகக் காவல்துறை தெரிவித்தது. - மாதிரிப்படம்: பிக்சாபே

புதுடெல்லி: வெளிநாடுகளுக்கு உளவு பார்க்கும் வேலைகளில் ஈடுபட்டுவந்த கும்பல் நடவடிக்கைகளை டெல்லி காவல்துறை முறியடித்துள்ளது.

அதன் தொடர்பில் 59 வயது ஆடவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஆதில் ஹுசைனி, சையது ஆதில் ஹுசைன், முகம்மது ஆதில் ஹுசைனி, நசிமுதீன் எனப் பல பெயர்களில் அழைக்கப்பட்டு வந்த அந்த 59 வயது ஆடவர் ஜார்க்கண்ட் மாநிலம், ஜம்ஷெட்பூரைச் சேர்ந்தவர்.

அவர் தம் சகோதரர் அக்தர் ஹுசைனியுடன் சேர்ந்து வெளிநாடுகளுக்கு ரகசியத் தகவல்களை வழங்கி வந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.

அத்துடன், ஆதில் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி பல இந்தியக் கடப்பிதழ்களையும் பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டது.

அவரிடமிருந்து உண்மைக் கடப்பிதழ் ஒன்றும் போலிக் கடப்பிதழ்கள் இரண்டும் கைப்பற்றப்பட்டன. அவரை ஏழு நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

போலிக் கடப்பிதழைக் கொண்டு பாகிஸ்தான் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு அவர் சென்றுவந்ததாகக் காவல்துறை தெரிவித்தது. வெளிநாட்டைச் சேர்ந்த அணுவியல் வல்லுநர் ஒருவருடனும் அவர் தொடர்பில் இருந்ததாகக் கூறப்பட்டது.

இந்தியக் குடிமகனான ஆதில் அண்மைக் காலத்தில் பலமுறை வெளிநாடுகளுக்குச் சென்றுவந்ததாகக் கூறப்படுகிறது. பதற்றம் நிறைந்த பகுதிகளுக்கு அவர் அடிக்கடி சென்றுவந்ததாலும் அவரிடம் போலி ஆவணங்கள் இருந்ததாலும் அவரது நடவடிக்கைகள் தொடர்பில் காவல்துறைக்குச் சந்தேகம் எழுந்தது.

தேசியப் பாதுகாப்பு தொடர்பான ரகசியத் தகவல்களைச் சேகரிக்க அவர் முயன்றதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. அவரது நடமாட்டமும் அவருக்குள்ள தொடர்புகளும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வந்ததாக டெல்லி காவல்துறை உயரதிகாரி ஒருவர் கூறினார்.

புலனாய்வுப் பிரிவினரும் (ஐபி) மற்ற மத்திய அரசு அமைப்புகளும் ஆதிலிடம் விசாரணை நடத்திவருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெளிநாட்டு உளவு அமைப்புகளுடன் ஆதிலுக்குத் தொடர்புள்ளதா அல்லது வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களிடமிருந்து எவ்வழியிலேனும் ஆதரவு பெற்றாரா என்ற கோணத்தில் அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்