ஹைதராபாத்: மோன்தா புயல் ஆந்திராவில் மட்டுமல்லாமல், தெலுங்கானாவிலும் கடும் சேதங்களை ஏற்படுத்தி உள்ளது.
புயல் கரையைக் கடந்துவிட்டாலும், தெலுங்கானா மாவட்டத்தில் கனமழை நீடித்து வருகிறது.
வியாழக்கிழமை (அக்டோபர் 30) காலை ஐந்து மணி வரை கொட்டித்தீர்த்த கனமழை, 1 மணியளவில் மீண்டும் மாவட்டத்தின் பல பகுதிகளைப் புரட்டிப்போட்டது. 12 மாவட்டங்களுக்கு வியாழக்கிழமையும் பலத்த மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
வாரங்கல், ஹனுமகொண்டா, ஜங்காவ்ன்,மெகபூபாபாத், கரீம்நகர், சித்திப்பேட்டை, கம்மம் ஆகிய இடங்களில் ஒரே நாளில் 20 சென்டிமீட்டருக்கும் அதிகமான மழை பதிவாகி உள்ளது.
வியாழக்கிழமை காலை 5 மணிவரை ஹனுமகொண்டா பகுதியில் ஆக அதிகமாக, 422 மில்லிமீட்டர் மழை பெய்தது.
ஹைதராபாத்தில் இரு நாள்களாக சிறு இடைவெளியும் இன்றி மழை பெய்ததால் பெரும்பாலான இடங்கள் வெள்ளக்காடாயின.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தெலுங்கானா மக்களை மீட்கவும் நிவாரணம் வழங்கவும் அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தேசிய, மாநிலப் பேரிடர் மீட்புப் படையினர் ஓய்வின்றி தொடர்ந்து மீட்புப்பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
பல ரயில்கள் வேறு பாதையில் திருப்பிவிடப்பட்டதாகவும் விமானச்சேவையும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்புடைய செய்திகள்
வெள்ளம் சூழ்ந்துள்ள தாழ்வான பகுதிகளில் தரைப்பாலங்களும் முக்கியமான சாலைகளும் மூடப்பட்டுள்ளன. அந்தப் பகுதிகளில் போக்குவரத்தை நிறுத்துமாறு முதல்வர் ரேவந்த் ரெட்டி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.
வெள்ளப்பெருக்கு ஏற்படும் பாலங்களுக்கு அருகில் தடுப்புகளை அமைத்து அவற்றைக் கண்காணிக்க காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


