‘மெட்ரோ’ ரயில் பாதை அமைப்பதில் வேகம்: அமெரிக்காவை விஞ்சப்போகும் இந்தியா

1 mins read
cc363b8d-1a68-4a90-8a31-801376decd38
அமைச்சர் மனோகர் லால். - படம்: ஊடகம்

ஹைதராபாத்: இந்தியாவில் மெட்ரோ ரயில் பாதையின் நீளம் மிக விரைவில் அமெரிக்காவை விஞ்சும் என மத்திய நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர் மனோகர் லால் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ‘மெட்ரோ’ ரயில் விரிவாக்கம் முழு வேகத்தில் நடைபெற்று வருவதால் அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள் அமெரிக்காவை முந்திச் செல்வது சாத்தியமாகும் என துறைசார் நிபுணர்கள் கூறுகின்றனர்.

தெலுங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாத்தில் நடைபெற்ற தென்மேற்கு மாநிலங்களின் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திரு மனோகர் லால், இந்தியாவில் கடந்த 2004-05 காலகட்டத்தில் ஐந்து நகரங்களில் மட்டுமே மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டதாகவும் தற்போது 24 நகரங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

மெட்ரோ ரயில் போக்குவரத்துக்காக அமெரிக்காவும் சீனாவும் தொடர்ந்து பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்காவில் இதுவரை அமைக்கப்பட்டுள்ள மெட்ரோ பாதையின் நீளம் 1,400 கிலோ மீட்டர் என்று குறிப்பிட்ட அவர், இந்தியாவில் தற்போதுள்ள மெட்ரோ ரயில் பாதையின் நீளம் 1,100 கி.மீ. என்றார்.

“இந்தியாவுக்கு முன்பே அமெரிக்காவும் சீனாவும் மெட்ரோ ரயில் போக்குவரத்தை நடைமுறைப்படுத்தின. எனினும், மெட்ரோ ரயில் இணைப்புகளை விரிவாக்கம் செய்வதில் அந்நாடுகளைவிட, இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது,” என்று அமைச்சர் மனோகர் லால் பெருமிதம் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்