தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சேலை சாயம் போனதால் வாடிக்கையாளர்க்கு ரூ.36,500 இழப்பீடு தர கடைக்கு உத்தரவு

1 mins read
3059c6fb-3783-4525-87f0-9dc16a1e3e42
வாடிக்கையாளர்க்கு உகந்த வகையில் அல்லாத வணிகர்களின் இத்தகைய செயல்பாடுகளைக் கண்டு நீதிமன்றம் அமைதி காக்காது என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பின்போது குறிப்பிட்டனர். - மாதிரிப்படம்: பிக்சாபே

கொச்சி: திருமண நிச்சயதார்த்தத்திற்கு வாங்கிய சேலையானது முதன்முறை உடுத்தியபோதே சாயம் வெளுத்து நிறம் மங்கிப்போனதால், வாடிக்கையாளர்க்கு ரூ.36,500 (S$545) இழப்பீடு வழங்கும்படி சம்பந்தப்பட்ட துணிக்கடைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவின் கேரள மாநிலம், எர்ணாகுளம், கூவப்பாடியைச் சேர்ந்தவர் ஜோசஃப் நிக்லவோஸ். அவர் தம் தங்கையின் நிச்சயதார்த்தத்தை முன்னிட்டு ஆலப்புழாவிலுள்ள ஐஎச்ஏ டிசைன்ஸ் எனும் துணிக்கடையில் ரூ.89,199 கொடுத்து 14 சேலைகளை வாங்கினார்.

அவற்றில் ரூ.16,500 கொடுத்து வாங்கிய ஒரு சேலையை முதன்முறை உடுத்தியபோதே அதன் நிறம் மங்கிப்போனதால், திருமண நிச்சய நாளன்று ஜோசஃப்பின் குடும்பத்தினர் மனம் வருந்த நேரிட்டது.

இதனையடுத்து, ஐஎச்ஏ டிசைன்ஸ் நிர்வாகத்துக்கு எதிராக எர்ணாகுளம் மாவட்ட நுகர்வோர் குறைதீர்ப்பு நீதிமன்றத்தில் திரு ஜோசஃப் வழக்கு தொடுத்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், அந்தத் துணிக்கடை சேவைக் குறைபாட்டைச் சரிசெய்யத் தவறிவிட்டதாகவும் முறையற்ற வணிக நடைமுறையைக் கையாண்டதாகவும் குறிப்பிட்டது.

“வாடிக்கையாளர்க்கு உகந்த வகையில் அல்லாத வணிகர்களின் இத்தகைய செயல்பாடுகளைக் கண்டு நீதிமன்றம் அமைதி காக்காது,” என்றும் மூவர் அடங்கிய நீதிபதிகள் அமர்வு தெரிவித்தது.

மேலும், சேலையின் விலையான 16,500 ரூபாயையும் இழப்பீடு, வழக்குச் செலவாக 20,000 ரூபாயையும் அந்தத் துணிக்கடை 45 நாள்களுக்குள் வாடிக்கையாளர்க்கு வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

குறிப்புச் சொற்கள்