புதுடெல்லி: சிறார்களுக்கு இளவயதிலேயே பாலியல் கல்வி அவசியம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஒன்பதாம் வகுப்புவரை காத்திருக்காமல் அதற்கு முன்பாகவே பாலியல் கல்வி கற்பிக்கப்படுவது அவசியம் என்று இரு நீதிபதிகளைக் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு வலியுறுத்தியது.
அப்போதுதான் பருவம் அடையும்போது தங்கள் உடலில் ஏற்படக்கூடிய ‘ஹார்மோன்’ மாற்றங்களை சிறார்கள் அறிந்து, புரிந்துகொள்ள முடியும் என்று நீதிபதிகள் சஞ்சய் குமாா், அலோக் அராத்தே ஆகியோரைக் கொண்ட அமர்வு கூறியது.
பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க உதவும் ‘போக்சோ’ சட்டத்தின்கீழ் 15 வயது சிறுவன் ஒருவன் கைதாகியுள்ளான். அச்சிறுவனுக்குப் பிணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பான விசாரணையின்போதே நீதிபதிகள் இவ்வாறு தெரிவித்தனர்.
பாலியல் கல்வி என்பது உயர்நிலை வகுப்புகளின் பாடத்திட்டத்தில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றனர்.
பருவமடைவதற்குப் பிறகு உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் அதுதொடா்பாக மேற்கொள்ள வேண்டிய கவனிப்பு, எச்சரிக்கை குறித்தும் குழந்தைகளுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மேலும் தெரிவித்துள்ளது.
இதனிடையே, பிணை கோரி மனுதாக்கல் செய்த சிறுவனுக்கு 18 வயது நிறைவடையாததால், சிறார் நீதி வாரிய விதிமுறைகளின்படி பிணை[Ϟ]யில் விடுவிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.