புதுடெல்லி: டெல்லி செங்கோட்டை பயங்கரவாதச் சம்பவம் தொடர்பாக மேலும் நான்கு முக்கியக் குற்றவாளிகள் தேசிய புலனாய்வு முகவை (என்ஐஏ) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். இதன் மூலம் இவ்வழக்கில் கைதானோர் எண்ணிக்கை 6ஆக அதிகரித்தது.
ஸ்ரீநகரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது, நால்வரும் கைது செய்யப்பட்டதாக என்ஐஏ வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜம்மு, காஷ்மீரைச் சேர்ந்த டாக்டர் முசாம்மில் ஷகீல் கனாய், டாக்டர் அதீல் அகமது ராதர், முஃப்தி இர்பான் அகமது வாகே, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த டாக்டர் ஷாஹீன் சயீத் என என்ஐஏ அடையாளம் கண்டுள்ளது.
செங்கோட்டை குண்டுவெடிப்பு தொடர்பான முழுமையான பயங்கரவாத சதியை வெளிக்கொணரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்ஐஏ. இதையடுத்து கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் அந்த அமைப்பின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தாக்குதலுக்குப் பிறகு உள்துறை அமைச்சு பல்வேறு தகவல்களை என்ஐஏவுக்கு வழங்கி உள்ளதாகவும், அவற்றின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் என்ஐஏ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடைய ஒவ்வோர் உறுப்பினரையும் தீவிரமாகக் கண்காணித்து கைது செய்ய பல்வேறு மாநில காவல்துறையினருடன் நெருக்கமாக இணைந்து செயல்படுவதாக என்ஐஏ அதிகாரிகள் மேலும் கூறினர்.
இதனிடையே, டெல்லியில் தற்கொலைப்படைத் தாக்குதலை நடத்திய உமர் நபி, துருக்கியில் இருபது நாள்கள் தங்கியிருந்து பயங்கரவாத அமைப்பினரைச் சந்தித்துப் பேசியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு உமர் நபி துருக்கி சென்றுள்ளார் என்றும் அங்கு பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த சிலரை சந்தித்து பேசியதாகவும் உளவுத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
உமர் நபி உள்ளிட்ட மூன்று பேர் 20 நாள்கள் துருக்கியில் தங்கியுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளைப் பாகிஸ்தானைச் சேர்ந்த உகாஷா என்ற பயங்கரவாதி ஏற்பாடு செய்ததாகத் தெரிகிறது.
உமர் நபி முதலில் ஆப்கானிஸ்தானில் இருந்து துருக்கி செல்ல திட்டமிட்டிருந்ததாகவும், எனினும் உடனடியாக இந்தியாவுக்குத் திரும்பி தாக்குதலை முன்னெடுக்குமாறு உகாஷா உத்தரவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன. அதன்பிறகே, இந்தியா சென்ற உமர், அல் ஃபலாஹ் பல்கலையில் பணியில் சேர்ந்து தாக்குதலுக்கான வேலையை செய்து வந்துள்ளான் என்று இந்திய உளவுத்துறை தெரிவித்துள்ளது.

