மும்பை: இந்தியாவின் பாபா அணுசக்தி ஆய்வு நிலைய (பிஏஆர்சி) விஞ்ஞானியாக நடித்து ரகசிய அணுசக்தித் தகவல்களைப் பகிர்ந்து கைமாறாகப் பல கோடிகளில் நிதி பெற்றதாக நம்பப்படும் 60 வயது ஆடவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
என்டிடிவி ஊடகம் திங்கட்கிழமை (நவம்பர் 3) இத்தகவலை வெளியிட்டது.
அக்தார் ஹுசைனி எனும் அந்த ஆடவரை மும்பை காவல்துறை சென்ற வாரம் கைது செய்தது. அணுசக்தி தொடர்பானதுபோல் தெரிந்த தகவல்கள், 10க்கும் மேற்பட்ட வரைபடங்கள் ஆகியவை ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஜம்ஷத்பூர் நகரில் வசித்து வந்த ஹுசைனியிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், அவரிடமிருந்து பல போலி கடப்பிதழ்கள், ஆதார் அட்டைகள், போலி பிஏஆர்சி அடையாள அட்டைகள் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டன. அந்தப் போலி அடையாள அட்டைகளில் ஒன்றில் அவரின் பெயர் அலி ராஸா ஹுசைன் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. மற்றொன்றில் அவரின் பெயர் அலெக்சாண்டர் பாமர் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஹுசைனியின் சகோதரரான அடில் என்பவரும் டெல்லியில் கைது செய்யப்பட்டார். சகோதரர்கள் இருவரும் 1995ஆம் ஆண்டிலிருந்து வெளிநாடுகளிலிருந்து நிதி பெற்று வந்ததாக மும்பை காவல்துறையின் குற்றவியல் பிரிவைச் சேர்ந்தகவர்கள் தகவல் தெரிவித்தனர்.
இருவருக்கும் முதலில் பல லட்ச ரூபாய் வழங்கப்பட்டது. ஆனால், 2000ஆம் ஆண்டுக்குப் பிறகு அவர்களுக்குக் கோடிக் கணக்கில் நிதி அளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிஏஆர்சி மற்றும் பல்வேறு அணுசக்தி ஆலைகள் தொடர்புடைய ரகசியத் திட்டங்களை வழங்குவதற்குக் கைமாறாக அவர்களுக்கு நிதி வழங்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
விசாரணையின்போது அக்தார் ஹுசைனி பெயரில் தனிப்பட்ட வங்கிக் கணக்கு ஒன்றையும் காவல்துறையினர் கண்டறிந்தனர். அந்தக் கணக்கில் சந்தேகம் தரும் பரிவர்த்தனைகள் பதிதிவாகியிருந்தன.
தொடர்புடைய செய்திகள்
சம்பந்தப்பட்ட வங்கியிடமிருந்து அக்கணக்கள் சம்பந்தப்பட்ட எல்லா பரிவர்த்தனைகளின் முழு விவரங்களையும் அளிக்குமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். சகோதரர்கள் இருவரும் தாங்கள் பயன்படுத்திய மற்ற பல்வேறு வங்கிக் கணக்குகளையும் ரத்து செய்துவிட்டனர்.
மேலும், அவர்கள் இருவரும் பாகிஸ்தான் சென்றனர் என்றும் இருவருக்கும் அந்நாட்டின் ஐஎஸ்ஐ உளவுத்துறையுடன் தொடர்பிருக்கக்கூடும் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
அக்தார் தனது அடையாளத்தை மாற்றிக்கொண்டு மாறுவேடத்தில் வாழ்ந்து வந்தார். தான் ரகசிய ஆவணங்களை வைத்திருப்பவர் என்று கூறிக்கொண்டதால் 2004ஆம் ஆண்டு அவர் துபாயிலிருந்து நாடுகடத்தப்பட்டார்.

