பாகிஸ்தானுக்குப் பாடம் நடத்த தயார்; பேச்சுவார்த்தையும் பயங்கரவாதமும் ஒரே பாதையில் பயணம் செய்ய முடியாது: இந்தியா

2 mins read
4c582fd9-ccac-4c22-bbda-366ba0d7af70
உபேந்திர துவிவேதி. - படம்: ஊடகம்

புதுடெல்லி: கடந்த ஓராண்டாக இந்தியா, சீனா தலைவர்களிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இருதரப்பபு உறவுகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் விவகாரங்களைக் கையாள இந்தியா புதிய நடைமுறையைக் கடைப்பிடிப்பதாக திங்கட்கிழமை புதுடெல்லியில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது அவர் குறிப்பிட்டார்.

இந்திய ராணுவத்தின் தாக்குதல் திறன்களை மேம்படுத்துவதற்கான மன உறுதி நாட்டின் அரசியல் தலைமையிடம் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இந்தி்யாவின் தாக்குதல் திறன் மிகவும் வலுவானது என்றார்.

இந்திய அரசியல் சாசனத்தின் 370வது பிரிவு கடந்த 2019ல் நீக்கப்பட்டதையடுத்து ஜம்மு-காஷ்மீரில் நிலைமை மேம்பட்டுள்ளதாகவும் அங்கு அரசியல் தெளிவு பிறந்துள்ளதாகவும் குறிப்பிட்டார் தலைமைத் தளபதி.

அங்கு தற்போது பயங்கரவாதச் சம்பவங்களின் எண்ணிக்கை பெரும் சரிவைக் கண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

“மணிப்பூரில் நிலைமை மேம்பட்டுள்ளது. அங்கு பயணம் மேற்கொள்வது குறித்து அதிபர் திரௌபதி முர்மு பரிசீலிக்க வாய்ப்புள்ளது,” என்றார் அவர்.

“பாகிஸ்​தான் ஒரு வாய்ப்பு கொடுத்​தால், அண்டை நாட்​டிடம் எவ்​வாறு பொறுப்​புடன் நடந்துகொள்ள வேண்​டும் என்​பதைக் கற்​றுக் கொடுப்பதற்குத் தயா​ராக இருக்​கிறோம்.

“ஆப்பரேஷன் சிந்​தூர்’ நடவடிக்கை வெறும் முன்​னோட்​டம்​தான். அது 88 மணி நேரத்​தில் முடிந்​து​விட்​டது. எதிர்​காலத்​தில் எந்தச் சூழலையும் எதிர்கொள்ள நாங்​கள் தயா​ராக உள்ளோம்,” என்று தளபதி உபேந்திர துவிவேதி எச்சரிக்கை விடுத்தார்.

பாகிஸ்தான் தொடர்ந்து இந்தியாவைக் குறிவைக்கும் பயங்கரவாதக் குழுக்களை ஆதரித்தால் அது அந்த நாட்டுக்குப் பெரிய சவாலாக உருவெடுக்கும் என்று குறிப்பிட்ட அவர், இந்தியா தற்போது வளர்ச்சி, செழுமை மீது மட்டுமே அதிக கவனம் செலுத்துகிறது என்றும் இந்தியா நடைபோடும் பாதையில் யாரேனும் தடைகளை ஏற்படுத்தினால் அவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்றும் தெரிவித்தார்.

பேச்சுவார்த்தையும் பயங்கரவாதமும் ஒரே பாதையில் பயணம் செய்ய முடியாது என்று குறிப்பிட்ட அவர், ரத்தமும் தண்ணீரும் ஒருசேரப் பாயும் என எப்படி எதிர்பார்க்க முடியும் எனக் கேள்வி எழுப்பினார்.

“இந்தியா அமைதியான நடைமுறையை மட்டுமே விரும்புகிறது. பயங்கரவாதிகளுக்கு உதவுவோரையும் பயங்கரவாதிகளாகக் கருதும் அணுகுமுறையை இந்தியா தொடர்ந்து பின்பற்றும்,” என்றார் திரு உபேந்திர துவிவேதி.

எந்தவோர் அச்சுறுத்தலுக்கும் இந்தியா அஞ்சாது என்றும் அவர் கூறினார். பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலை இந்தியா கண்டுகொள்ளவில்லை என்பதை அவர் மறைமுகமாக வெளிப்படுத்தி உள்ளதாக அனைத்துலகப் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்