லக்னோ: சட்டவிரோதக் கல்குவாரியில் பாறை சரிந்து ஏற்பட்ட கோர விபத்தில் ஆறு பேர் உயிரிழந்துவிட்டனர்.
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், சோன்பத்ரா மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை (நவம்பர் 15) இந்த விபத்து நிகழ்ந்தது.
மலை போல் குவிந்த இடிபாடுகளில் 15 ஊழியர்கள் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து, மீட்புக் குழுவினர் மூன்று குழுக்களாகப் பிரிந்து, இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கைகளைத் தொடங்கினர்.
குவாரியின் மேலடுக்கில் இருந்த பெரிய பாறைகளில் துளையிடும் பணியின்போது, எதிர்பாராதவிதமாக விரிசல் ஏற்பட்டு, ஒரு பெரிய பாறை சரிந்து விழுந்தது. அப்போது பணியில் இருந்த 15 பேரும் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்திருக்கக்கூடும் என அஞ்சப்பட்டது.
இந்நிலையில், இரு நாள்களுக்கு முன்பு ஓர் ஊழியரின் சடலம் மட்டும் மீட்கப்பட்டது. அவர் பனாரிப் பகுதியைச் சேர்ந்த ராஜு சிங், 30, என்பது அடையாளம் காணப்பட்டது.
இந்நிலையில், திங்கட்கிழமை மேலும் ஐந்து பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. பலி எண்ணிக்கை ஆறாக உயர்ந்த நிலையில், மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.
மீட்புப் பணிகள் தொடரும் நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

